02.07.2026

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள்
மக்கள் அதிகாரக் கழகம் கண்டம்!

பத்திரிகைச் செய்தி

யிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவில் ஜூன் 30ஆம் தேதி அதிகாலையில் பார்த்திபன், திவ்யதர்ஷினி என்ற காதலர்களை ஆணவப் படுகொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். இந்த படுகொலையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சாந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் தலித் சமூகத்தையும் திவ்யதர்ஷினி வன்னியர் சாதியையும் சேர்ந்தவர்கள். இருவரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

பார்த்திபனின் குடும்பத்தாருக்கும் சாதி ரீதியாகக் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் வீட்டார் தங்களை வழிமறித்துத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததால் பொறையாறு போலீசு நிலையத்தில் பார்த்திபனின் குடும்பத்தார் புகாரும் கொடுத்துள்ளனர்.

கடந்த 29ஆம் தேதி பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் பார்த்திபனை கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலையில், சாத்தங்குடி கிராமத்தை ஒட்டியுள்ள தோப்பு ஒன்றின் கூரை கொட்டகையில் பார்த்திபனும், திவ்யதர்ஷினியும் தனித்தனியாகத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். பார்த்திபன் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது தற்கொலை இல்லை கொலைதான் என்பதற்கு அவரின் உடலில் உள்ள காயங்களே சாட்சி.

ஆனால் போலீசு தற்கொலை என்று வழக்குப் பதிவு செய்கிறது. இந்த வழக்கை உடனடியாகக் கொலை வழக்காக மாற்றக் கோரி சீர்காழி-காரைக்கால் சாலையில் தொடர் மறியல் போராட்டத்தில் உறவினர்கள் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு பெண்ணின் உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 8 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இது தமிழ்நாட்டில் சாதி ரீதியான அடக்குமுறைகள் தீவிரமாக அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. கவின், அபிசெல்வி முதல் தற்போது பார்த்திபன், திவ்யதர்ஷினி வரை சாதிவெறிக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் குற்றவாளிகளோ ஜாமீனில் வெளியில் வந்து சுற்றித் திரிகின்றனர்.

இந்த ஆணவப்படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகள் மீது உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

சமூகத்தில் சாதிவெறியைத் தூண்டுகின்ற ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கப் பரிவாரக் கும்பலையும் தடை செய்ய வேண்டும். ஆணவப்படுகொலையில் ஈடுபடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக சக்திகள் களத்தில் இறங்கி போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் அறைகூவி அழைக்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க