“தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை வழி எது ?” என்கிற தலைப்பின் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உழைக்கும் தொழிற்சங்க மாமன்றத்தில் மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
கருத்தரங்கத்தின் முதல் நிகழ்வாக வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்காகவும் , திருவள்ளூரில் கன்னிகைப் பேரில் நடந்த அமோனியா வாயு கசிவு விபத்தால் படுகொலை செய்யப்பட்ட 16 தொழிலாளர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்த தமிழ்நாட்டில் இரண்டே ஆண்டுகளில் கட்சி தொடங்கி த.வெ.க. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இந்த அரசியல் சூழலில் பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் நாம் “தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது ?” என்று வெளியீடு கொண்டு வந்திருக்கிறோம். இந்த வெளியீடு ஜனநாயக சக்திகளுக்கும் பாசிசத்தை வீழ்த்த நினைக்கும் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையாக அமைந்திருக்கிறது. மேலும் பாசிசத்தை வீழ்த்த வேண்டுமென்றால் குறைந்தபட்ச பாசிச எதிர்ப்பு செயல் திட்டத்தை முன்வைத்து ஜனநாயக சக்திகள் களத்தில் இறங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைமை உரையாக தோழர் அமிர்தா பேசினார்.
ஹோமியோபதி மருத்துவரான தோழர் பாலமுருகன் இன்றைய ஜென்சி தலைமுறையின் சமூக வலைதளங்களின் பயன்பாடுகளை பார்க்கும் போது அவர்களுடைய மனநிலையும், உணரும் திறனும் எப்படிப்பட்ட வகையில் இருக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் விளக்கியதோடு, இன்றைய தலைமுறையினர் சமூக வாழ்க்கையில் எவ்வாறு ஊக்கமாக ஈடுபட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அறிவு நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களுடைய போராட்டம் குறித்து இதுவரை முதலமைச்சர் விஜய் வாய் திறக்கவே இல்லை. இங்கு போராடக்கூடிய SFI மாணவர்களை அடித்து ஒடுக்கி அவர்களை ரவுடிகளை போல கைது செய்கின்றனர்.
“சாதிய அடையாளத்துடன் புதிய அடையாள அட்டை வழங்கப்படும்” என்று செங்கோட்டையன் அறிவித்தார். மேலும் “இது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்படும்” என்று கூறினார். மக்களுடைய எதிர்ப்பால் அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என த.வெ.க. அரசு பின் வாங்கியது. சாதியை மாணவர்கள் கழுத்தில் போடுவதை தீவிரமாக மேற்கொள்ளும் இவர்கள் தென் மாவட்டங்களில் நடக்கும் ஆணவப் படுகொலைக்கு எதிராகவும் மாணவர்களின் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் அதை தடுத்து நிறுத்துவது குறித்தும் இதுவரை வாய்திறக்கவே இல்லை. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அதற்காக தொடர்ந்து போராட்டங்களை கட்டியமைக்கும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
மூத்த பத்திரிக்கையாளர் அசிப் இன்றைய அரசியல் சூழல் குறித்தும் போராடி பெற்ற மாநில உரிமைகள் இன்று நீர்த்து போகும் சூழலில் இன்றைய த.வெ.க. ஆட்சி இருக்கிறது. இன்றைய இளைஞர்களை இன்னும் தீவிரமாக அரசியல் பேச வைப்பதும் அவர்களை ஜனநாயக படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தி பேசினார்.
மூத்த பத்திரிக்கையாளர் கோடீஸ்வரன் இன்றைய அரசியல் சூழலானது நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு சூழலும் மாறி இருக்கிறது. கொள்கை கோட்பாடு இல்லாமல் அரசியல் செய்வதாக இருக்கிறது. கூட்டத்தில் தோழர்கள் ஒவ்வொருவரும் உன்னிப்பாக கவனிப்பதையும், குறிப்புகள் எடுப்பதையும் பாராட்டி பேசினார்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தோழர் ஆ.கா.சிவா திருவள்ளுவரில் அமோனியா வாயு கசிவில் பாதிக்கப்பட்ட 16 தொழிலாளர்கள் பிரச்சினையைப் பற்றி யாருமே வாய் திறக்கவில்லை. ஒரு பக்கம் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நம்மிடம் பூதாகரமாக காட்டி இன்னொரு பக்கம் முழுவதுமாக மூலதனம் குவிப்பை செய்வது தான் முதலாளித்துவத்தினுடைய வளர்ச்சி, தொழிலாளர்களின் உரிமையை பறித்துவிட்டு வளர்ச்சி என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று தொழிலாளர்களின் உழைக்கும் மக்களின் நிலையை உணர்வுபூர்வமாக விளக்கி பேசினார்.
மக்கள் அதிகார கழகத்தின் மாநிலச் செய்தி தொடர்பாளர் தோழர் மருது கவர்ச்சிவாதம் மனித தன்மையற்றதாக இருக்கிறது. உ.பி மாடலை இன்றைய விஜய் தமிழ்நாட்டில் அரங்கேற்றி கொண்டு வருகிறார்.. விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில், பாசிசத்திற்கு எதிரான விவாதம் காணாமல் போய்விட்டது. சட்டமன்றத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கல்விக்கு ஒதுக்க வேண்டிய சில ஆயிரம் கோடி ரூபாய்கள் பா.ஜ.க. அரசால் ஒதுக்கப்படவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும்போதே குறிக்கிட்ட சபாநாயகர், அப்படி பேசாதீர்கள் பா.ஜ.க. நண்பர்கள் என்று பேசுங்கள் என்று திருத்தினார்.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.விற்கு எதிராக பேசவே கூடாது என்ற நிலை உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல கூட்டணி கட்சிகளும் பேச முடியாது என்பது தான் ‘ஜனநாயகன்’ மாடல். அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறும் மற்றவர்கள் செய்யும் தவறும் ஒன்றல்ல!
தமிழ்நாட்டின் ஆட்சியில் இருக்கக்கூடிய தமிழக வெற்றிக் கழகம் செய்யக்கூடிய தவறுகளும் எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் செய்யக்கூடிய தவறுகளையும் ஒரே தராசில் வைத்து பரிசீலிக்க முடியாது என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர சிவப்பு அலை கலைக்குழுவின் தோழர் தீரன் “உனக்கான அரசியல் பேசு”, “தோழரே வா” என்ற இரண்டு பாடல்கள் பாடினார்.
இறுதியாக மக்கள் அதிகாரக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் ஆகாஷ் நன்றியுரை ஆற்றினார். ஜனநாயக சக்திகள், தோழர்கள் மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய த.வெ.க. அரசை அம்பலப்படுத்தி முதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பது இந்த கூட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
இவண்,
தோழர் அமிர்தா,
சென்னை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
7358482113
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





