கோத்தகிரி அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைக்கக் கோரிய எழுச்சிகர ஆர்ப்பாட்டம்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைத்துத் தரக்கோரிய ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 9 அன்று காலை 11.00 மணி அளவில் கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமையில் எழுச்சிகரமாக நடைபெற்றது.

10.08.2026

எழுச்சிகரமாக நடைபெற்ற
கோத்தகிரி அம்பாள் நகர் மக்களுக்கு
சாலை அமைத்துத் தரக்கோரிய ஆர்ப்பாட்டம்!

பத்திரிகைச் செய்தி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், அம்பாள் நகர் மக்களுக்குச் சாலை அமைத்துத் தரக்கோரிய ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 9 அன்று காலை 11.00 மணியளவில் கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழகக் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமை தாங்கினார்.

தோழர் சங்கர் ஆற்றிய தலைமை உரையில், “அம்பாள் நகர் மக்கள் கடந்த 40 வருடக் காலமாக அனைத்து அரசு அதிகாரிகளையும், இறுதியாகத் தற்போதுள்ள சமூக நீதித்துறை அமைச்சர் அவர்களையும் பார்த்துக் கோரிக்கை வைத்தும் அம்பாள் நகருக்கான சாலை இன்றுவரை அமைத்து தரப்படவில்லை. இந்த நியாயமான கோரிக்கையைச் செய்துத்தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசையும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.

அம்பாள் நகர் மக்களின் 40 வருடப் போராட்டங்களையும் அவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளையும் எடுத்துரைத்தும், சாலை அமைத்துத் தராத தமிழ்நாடு அரசையும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தையும் அம்பலப்படுத்தியும் எச்சரித்தும், சாலை அமைத்துத் தர வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய கோவை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன், “மக்களிடம் இருந்து வரிகள் மட்டும் வசூலிக்கும் இந்த அரசிற்கு 40 வருடம் அவர்களுக்குச் சாலை இல்லாததைப் பற்றிக் கவலையில்லை. பணம் படைத்தவர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் தேவையானதை நிறைவேற்றித் தரும் இந்த அரசு உழைக்கும் மக்களை ஆடு, மாடு, கோழி போல எண்ணி தொடர்ச்சியாக வஞ்சித்து வருகிறது. போராடும் மக்களிடம் சென்று மக்கள் அதிகாரக் கழகத்தோடு சேராதீர்கள், போராடாதீர்கள் என அச்சுறுத்தும் இந்த அரசிற்கு, சாலை அமைத்துத் தராத அரசு அதிகாரிகளிடமும் சாலைக்கு நிலம் தர மறுக்கும் நில உரிமையாளர்களிடமும் கேட்பதற்கு வக்கில்லை. போராடும் மக்களை போலீசு உளவுத்துறை மூலம் மிரட்டுவதை விட்டுவிட்டு அவர்களது கோரிக்கையை நிறைவேற்றித் தாருங்கள். இல்லை என்றால் எங்களது போராட்டங்கள் தொடரும்” என அரசை எச்சரித்துப் பேசினார்.

அம்பாள் நகர் ஊர் தலைவர், கோத்தகிரி கிளை கழக உறுப்பினர் தோழர் செல்வம் உரையாற்றுகையில், “40 வருடம் போராடும் நாங்கள் கடந்த மூன்று வருடமாகத் தீவிரமான தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். இதன் பின்னர்தான் ஒவ்வொரு அதிகாரிகளாக எங்கள் ஊருக்கு வருகின்றனர். நாங்கள் அரசிடம் எங்களது அவசர உடல்நல தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் வருகிற அளவுக்கு ஒரு சாலைதான் கேட்கிறோம். சாலை அமைத்துத் தருவது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் சென்றால் அவர்களைப் பாருங்கள், இவர்களைப் பாருங்கள் என எங்களைத் தொடர்ச்சியாக அலைக்கழித்து வருகின்றனர். இரண்டு வருடத்திற்கு முன்னர் சாலை அமைப்பது தொடர்பான ஆவணம் எங்களிடம் இல்லை, அது காணாமல் போய்விட்டது என்று எங்களை ஆறு மாதம் ஏமாற்றினர். அதன் பின்னால் நாங்கள் எங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை மேற்கொண்டோம். இப்போராட்டத்தை நடத்திய மூன்று நாட்களில் காணாமல் போன ஆவணம் திரும்ப வந்துவிட்டது. அதன் பிறகு வேலைகள் நடந்து வந்தது. சாலை அமைப்பதற்கான டெண்டர் போடப்பட்டது. அதனையும் தற்பொழுது இரத்துச் செய்து விட்டார்கள். இது தொடர்பாக சென்னைக்குச் சென்று வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . நாங்கள் ஆர்ப்பாட்டத்தை அறிவித்த பின்னர் எங்களது ஊருக்கு அரசு அதிகாரிகள் வந்து போராட்டத்தைக் கைவிடக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை மறுத்துவிட்டு இப்போது போராடி வருகிறோம். இந்த நிலைமை தொடர்ந்தால் நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்வோம். போராடிதான் எங்களை உரிமையை மீட்க வேண்டுமானால் அதற்கும் நாங்கள் தயார்” என்று தங்களது தொடர் போராட்டத்தை எடுத்துரைத்தார்.

அடுத்து உரையாற்றிய அம்பாள் நகரைச் சேர்ந்த தோழர் கண்மணி, “நாங்கள் 40 வருடமாகப் போராடுகிறோம். எங்களது முன்னோர்கள் போராடி விட்டு சென்றனர். தற்போது நாங்களும் போராடிக் கொண்டு வருகிறோம். எங்களது ஊரில் அவசரத் தேவை என்றால் எங்களது தோள் மீது தூக்கிக்கொண்டு, தொட்டில் கட்டிதான் மருத்துவமனைக்குச் செல்கிறோம். அதற்குள் அவர்களது உயிர் பிரிந்து விடுகிறது. எங்களுக்கு நடப்பதற்கு வழியில்லை. வீட்டுக்கு முன்னர் வழி இல்லை. அதற்காகத்தான் இத்தனை வருடங்கள் நாங்கள் போராடுகிறோம். அரசாங்கமும் இப்ப செய்து தரோம், அப்ப செய்து தரோம் என்று 40 வருடமாக ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எந்தக் காலத்தில் புரட்டி பார்த்து செய்வார்களோ தெரியவில்லை. எங்களுடைய உழைப்பில் வரும் பணத்தை வைத்துதான் எங்கள் ஊர் தலைவர், கமிட்டி உறுப்பினர்கள் எல்லாரும் அனைத்து அதிகாரிகளையும் சென்று பார்க்கிறார்கள், போராடுவதற்கும் செலவு செய்கிறோம். நாங்கள் உழைக்கின்ற பணத்தை வைத்து எங்கள் வாழ்வாதாரத்தைப் பார்ப்பதா? இல்லை, போராட்டத்திற்கு செலவுச் செய்வதா? ஓட்டு கேட்பதற்கு மட்டும் வீடு தேடி வருகிறார்கள். ஆனால் எங்களுடைய சாலை அமைக்கும் பிரச்சினைக்கு யாரும் வருவதில்லை. நாங்கள் உங்களிடம் எங்களது அவசரத் தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் போவதற்குதான் வழி கேட்கிறோம். எங்களுக்கு ஏரோபிளேன் விட சொல்லவில்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம் இந்தப் போராட்டத்திலேயே எனது உயிர் போனாலும் பரவாயில்லை.” எனத் தங்களது கொடுமைகளை எடுத்துரைத்து உணர்வுப் பொங்க பேசினார்.

அடுத்து பேசிய அம்பாள் நகரைச் சேர்ந்த தோழர் ரூபா, “எனக்கு ஆறு மாதத்திற்கு முன்தான் குழந்தைப் பிறந்தது. எனக்குப் பிரசவ வலி வந்த போது என்னையும் தொட்டில் கட்டிதான் கொண்டு சென்று பிரசவம் பார்த்தனர். ஒருவேளை என்னைக் கொண்டு செல்வதற்குத் தாமதம் ஆகியிருந்தால் எனது குழந்தையையும் என்னையும் இன்று பார்த்திருக்க முடியாது. எங்கள் ஊர் குழந்தைகள் பள்ளிக்கு காட்டு வழியேதான் சென்று வருகின்றனர். மழைக் காலங்களில் பள்ளிக்குச் சென்று வருவதற்குக் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்தக் கொடுமைகளைப் போக்குவதற்குதான் இத்தனை காலம் நாங்கள் போராடி வருகிறோம். வரும் காலங்களிலும் செய்யவில்லை என்றால் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” எனப் பேசினார்.

அடுத்து சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரக் கழக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன், “நமது நாடு சுதந்திர நாடு வல்லரசு நாடு என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான், அம்பாள் நகர் மக்கள் 40 வருடமாகத் தங்களுக்குச் சாலை வசதி வேண்டி போராடி வருகின்றனர். இந்த 40 வருடப் போராட்டம் இதையெல்லாம் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இந்த அரசு எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

“மக்கள் அதிகாரக் கழகம் ஏதோ இன்று வந்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி அம்பாள் நகருக்கு சென்று பிரச்சனைகளைக் கேட்டு, துண்டறிக்கை போட்டுப் பிரச்சாரம் செய்து, மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தோம். ஆட்சியர் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்றுவரை செய்து தரவில்லை. இவ்வாறு மக்கள் அதிகாரக் கழகம் தலையிட்டு ஒரு வருடம் போராடி வந்தும் இதுவரை சாலை அமைத்துத் தரவில்லை.

“சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் மக்கள் அதிகாரக் கழகம் அம்பாள் நகருக்கு சென்று காணொளி பதிவு போட்ட பின்னர்தான் 40 வருடம் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் அந்த ஊருக்கே சென்றனர். இப்போதும் கழகம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்த பின்னர் ஒன்பது அதிகாரிகள் ஊருக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இவ்வாறு மக்கள் போராட்டத்தைக் கண்டு ஆளும் வர்க்கம் நடுங்கி கொண்டிருக்கிறது.

“இந்த மாதிரியான பிரச்சினை அம்பாள் நகருக்கு மட்டும் இல்லை. தமிழ்நாட்டில் மலை கிராமங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர், தலித் மக்கள் அனைவருக்கும் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அரசு இயந்திரம் கார்ப்பரேட்டுகளுக்கு சுழன்றடித்து, உழைக்கும் மக்களின் விவசாய நிலங்களை அழிக்கும் வேலை செய்கின்றது. ஆனால், இந்த உழைக்கும் மக்களைக் கண்டு கொள்வதில்லை.

“இந்த நீலகிரி மாவட்டம் பணப் பயிர் விலையும் மாவட்டமாக மாறி இருக்கிறது என்றால் அதற்கு இங்கு உள்ள பணக்காரர்களும் டீ எஸ்டேட் முதலாளிகளுமா காரணம்? இல்லை, இங்குள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் இரத்தம், வியர்வை சிந்தி உழைத்த உழைப்பில்தான் உருவாகியிருக்கிறது. அரசு அதிகாரிகளே, நீங்கள் யாரை அவமானப்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இம்மாவட்டம் செழிப்பாக இருப்பதற்கு அடிப்படையான காரணமாக இருக்கும் இம்மக்களைத்தான் இத்தனை ஆண்டுக் காலம் அவமானப்படுத்தி வந்துள்ளீர்கள். இங்குள்ள டீஎஸ்டேட் முதலாளிகளுக்கு நிலத்தைக் கையகப்படுத்திச் சாலை அமைத்துத் தரும் இதே அரசுதான், இன்று அம்பாள் நகருக்கு சாலை அமைக்க நிலத்தைக் கையகப்படுத்த முடியாது என்று சொல்கிறது.

“அம்பாள் நகர் மக்கள் தங்களது கடினமான உழைப்பில் வரும் பணத்தை வைத்துதான் இத்தனை வருடக் காலம் சாலை அமைப்பதற்காக உங்களைச் சந்தித்து மனு கொடுத்துப் போராடி வருகின்றனர். ஆனால்,அவர்களை இந்த அரசு அதிகாரிகள் மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை. அரசு அதிகாரிகளுக்குச் சொல்கிறோம், சாலை வசதி என்பது அம்பாள் நகர் மக்களின் உரிமை. அதனைச் செய்து தர வேண்டியது உங்களுடைய கடமை. இதைதான் கேட்கிறோம். ஏனென்றால் இந்த மக்களுடைய உழைப்பில் வரும் வரிப் பணத்தில், இரத்தத்தில்தான் நீங்கள் சம்பளம் வாங்கி காரில் செல்கிறீர்கள். உங்களுடைய குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறீர்கள்.

“மக்கள் அதிகாரக் கழகத்தோடு ஏன் சேர்ந்து போராடுகிறீர்கள் என்று அதிகாரிகள் தொடர்ந்து மக்களைக் கேட்கிறார்கள். அவர்களுக்குச் சொல்கிறோம், நாங்கள் இம்மக்களைப் போராடத் தூண்டவில்லை. நீங்கள்தான் 40 வருடமாக மக்களுக்குச் சாலை அமைத்துத் தர மறுத்து, போராட தூண்டியுள்ளீர்கள். மக்கள் இந்த 40 ஆண்டுகால அனுபவத்தில் இருந்துதான், போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்றுணர்ந்து மக்கள் அதிகாரக் கழகத்தோடு இணைந்து இன்று போராடி வருகிறார்கள்.

கடந்த தி.மு.க. ஆட்சியும் இம்மக்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எட்டு தலித்துகளை அமைச்சர்கள் ஆக்கிவிட்டோம் என மார்த்தட்டிக்கொள்ளும் த.வெ.க. அரசும் இம்மக்களது பிரச்சினைக்கு இன்று வரை செவி சாய்க்கவில்லை. மக்கள் அதிகாரக் கழகமும் அம்பாள் நகர் மக்களும் இணைந்து போராடியதன் விளைவாகச் சென்ற வருடம் சாலை அமைப்பதற்கு டெண்டர் போடப்பட்டது. அதனை இன்று வந்த த.வெ.க ஆட்சியில் இரத்து செய்துள்ளனர். இந்த டெண்டரை உடனடியாகப் புதுப்பித்து அம்பாள் நகர் மக்களுக்கு உடனடியாகச் சாலை அமைத்துத் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கிறோம். இந்த அரசு அம்பாள் நகர் மக்களுக்குச் சாலை அமைத்து தரும்வரை மக்கள் அதிகாரக் கழகம் அம்பாள் நகர் மக்களோடு இணைந்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கும்” என உரையாற்றினார்.

அம்பாள் நகரைச் சேர்ந்த தோழர் சிவக்குமார் உரையாற்றுகையில், “எங்கள் அப்பா, நான், இப்போது எனது பிள்ளைகள்  என நாங்கள் மூன்று தலைமுறையாக அரசிடம் சாலை கேட்டுப் போராடி வருகிறோம். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு மட்டும் எங்கள் ஊருக்கு வருகின்றனர். ஆனால், நாங்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற்ற பின்னர் யாரும் வருவதில்லை. மக்கள் அதிகாரக் கழகத்தின் தூண்டுதலால் நாங்கள் போராடவில்லை. எங்களுடைய சாலை பிரச்சினைக்காகத்தான் அவர்களும் எங்களுடன் இணைந்துப் போராடுகிறார்கள். ஆம்புலன்ஸ் வருவதற்குச் சாலை வசதி இல்லாததால் எங்களது வண்டியைத்தான் ஆம்புலன்ஸாகப் பயன்படுத்துகிறோம். இறுதியாக, எங்களது பிரச்சினைக்காகப் போராட வந்திருக்கும் மக்கள் அதிகாரக் கழகத்திற்கும் தோழர் மாறனுக்கும் நன்றி” என்று தங்களது துயரத்தை எடுத்துரைத்துப் பேசினார்.

கோத்தகிரி கிளையின் இணைச் செயலாளர் தோழர் ராஜ் உரையாற்றுகையில், “நாங்கள் செய்யும் ஒவ்வொரு போராட்டத்திற்குப் பிறகுதான் அரசு அதிகாரிகள் எங்கள் ஊருக்கு எங்களிடம் பேச வருகின்றனர். அதற்கு முன் ஒருவரும் வருவதில்லை. மக்கள் அதிகாரக் கழகத்திலிருந்து தோழர் மாறன் வந்து காணொளிப் பேசி பதிவு போட்ட பின்னர்தான் எங்கள் ஊருக்கு அதிகாரிகள் வந்தனர். எங்களது முயற்சியில், எங்களது போராட்ட அனுபவத்தில் இருந்துதான் மக்கள் அதிகாரக் கழகத்தோடு இணைந்துப் போராடி வருகிறோம். நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகளில் இருந்து விடுபட உடனடியாக அரசு எங்களுக்குச் சாலை அமைத்துத் தர வேண்டும். ஆர்ப்பாட்டத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.

இறுதியாக, கழக இணைச் செயலாளர் தோழர் மாறன் பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பாள் நகர் மக்களின் 40 வருடப் போராட்டங்களையும் அவர்கள் அனுபவித்துவரும் கொடுமைகளையும் எடுத்துரைத்து, அரசு உடனடியாக அம்பாள் நகருக்கு சாலை அமைத்தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

தகவல்:
மக்கள் அதிகாரக் கழகம்,
கோத்தகிரி கிளை,
கோவை மாவட்டம்.
9488902202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க