கொடைக்கானல் பூம்பாறையில் சாதியப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தோழர்கள் நேரில் ஆறுதல்

ராமரின் பாதிக் கழுத்தில் அரிவாள் இறங்கிய நிலையில் ராமர் மற்றும் பிரசாந்த் இருவரும் ரகுவை பார்த்து, “என்ன அண்ணே, இப்படிப் பண்ணிட்ட?” என்று கேட்டுள்ளனர். அப்போது பிரசாந்த்தையும் இடதுபுறம் கண்ணோடு சேர்த்து வெட்டியுள்ளான். மேலும், ராமரை 64 முறை வெட்டியுள்ளான். இருவரும் மயங்கிய நிலையில் கீழே விழுந்துவிட்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக இளைஞர் ராமரின் (26) குதிரை தனது நிலத்தில் மேய்ந்ததாகக் கூறி மறவர் சாதிவெறியர்கள் அவரைப் படுகொலை செய்த கொடூரம் அரங்கேறியது.

இச்சாதியத் தாக்குதலில், ராமருடன் இருந்த பிரசாந்த் (18) என்ற சிறுவனையும் சாதிவெறி கும்பல் வெட்டியது. வெட்டுப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை மக்கள் அதிகாரக் கழக மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் தோழர் சிவகாமு மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர் தீபன் இருவரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நடந்ததைக் கேட்டறிந்தனர்.

கடந்த ஜூலை 27-ஆம் தேதி மாலை ராமர் மற்றும் பிரசாந்த் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது மறவர் சாதியைச் சேர்ந்த ரகு (24) என்பவன் ராமருக்கு (26) போன் செய்துள்ளான். எங்கள் தோட்டத்தில் உங்கள் குதிரை மேய்ந்து கொண்டிருக்கிறது உடனடியாக ஓட்டிச் செல்லவில்லை என்றால் நான் வண்டியில் ஏற்றிக்கொண்டு விற்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

இதனால் உடனடியாக இராமர் மற்றும் பிரசாந்த் இருவரும் குதிரை ஓட்டிச்செல்லக் கிளம்பியுள்ளார்கள். அப்போது ரகு காரில் வந்து குதிரை இருக்கும் இடத்திற்கு நானே உங்களைக் கூட்டி செல்கிறேன் என்று கூறியுள்ளான். இருவரும் முதலில் மறுத்துள்ளனர்; பிறகு நம்பி காரில் ஏறினார்கள். ரகு இருவரையும் காரில் ஏற்றிச் சென்று காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டு, “இங்குதான் குதிரை மேய்கிறது. முன்னே செல்லுங்கள்” என்று கூறியுள்ளான். ஆனால், காரில் இருந்த அரிவாளை எடுத்துப் பின்பக்கம் மறைத்துக்கொண்டு இருவரையும் பின்தொடர்ந்து சென்றுள்ளான்.

ராமர் இதுகுறித்து தனது துணைவியிடம் கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்ற போதே பின்னாலிருந்து ரகு அவரது கழுத்தில் வெட்டியுள்ளான். ராமரின் பாதிக் கழுத்தில் அரிவாள் இறங்கிய நிலையில் ராமர் மற்றும் பிரசாந்த் இருவரும் ரகுவை பார்த்து, “என்ன அண்ணே, இப்படிப் பண்ணிட்ட?” என்று கேட்டுள்ளனர். அப்போது பிரசாந்த்தையும் இடதுபுறம் கண்ணோடு சேர்த்து வெட்டியுள்ளான். மேலும், ராமரை 64 முறை வெட்டியுள்ளான். இருவரும் மயங்கிய நிலையில் கீழே விழுந்துவிட்டார்கள்.

இந்தச் சம்பவம் நடக்கும் போது ரகு சாதியைச் சொல்லியும் கத்திக்கொண்டும் வெட்டியுள்ளான். அவர்கள் இருவரும் ரகுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்ததைக் கைப்பேசியில் கேட்டுக்கொண்டிருந்த ராமரின் துணைவி, அக்கம் பக்கத்தினர், உறவினர் அனைவரையும் திரட்டிக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அங்கு வந்து ராமரைத் தூக்கும் போது “அண்ணே” என்று ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொண்டே அடுத்த நொடி அவரது உயிர் அடங்கியது. மயங்கிய நிலையில் இருந்த பிரசாந்த்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொடைக்கானல் போலீசு நிலையத்தில் கொலைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இக்கொலையில் ஐந்து ஆதிக்கச் சாதிவெறியர்கள் ஈடுபட்ட நிலையில், ரகு மட்டும் கொடைக்கானல் போலீசு நிலையத்தில் சரணடைந்துள்ளான். ரிமான்டிற்கு செல்லும்போது காலரை தூக்கிவிட்டு கைகளை அசைத்து ரகு திமிராகச் சென்றுள்ளான்.

பிரசாந்த் தேனி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று ஆகஸ்ட் 7-ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார்.


படிக்க: கரூர்: அருந்ததியர் மக்கள் மீது அரங்கேற்றப்படும் தீண்டாமைக் கொடூரம்!


இதுகுறித்து கூடுதலாக கேட்டபோது , ஒரு வருடத்திற்கு முன்பு குதிரை மேய்ப்பதில் ராமருக்கும் ரகுவிற்கும் பிரச்சினை ஏற்பட்டு ரகு ராமரை அடித்துள்ளான்; பிறகு, ராமரும் ரகுவை அடித்துள்ளார்; மேலும் பிரச்சினைகள் வளர வேண்டாம் என்ற நோக்கத்தில் ஊர் மக்களோடு சேர்ந்து முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முன்னிலையில் பேசி சமாதானமாக முடித்துக் கொண்டார்கள்; அதன் பிறகு ஒரு வருடம் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருந்துள்ளது; ஆனால், ரகு இந்த வன்மத்தின் காரணமாகவே ராமரை வெட்டியுள்ளான் என்று சொல்லப்படுகிறது.

ராமருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் நேர்மையானவராகவும் எந்தத் தவறான பழக்கங்கள் இல்லாதவராகவும் எல்லாரிடம் சுலபமாகப் பழகும் நபராகவும் இருந்துள்ளார். முக்கியமாக, ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பவராகவும் சுயமரியாதையோடு வாழ விரும்புபவராகவும் பலருக்கும் முன்மாதிரியாகவும் இருந்துள்ளார் என்பதை அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்கும்போது தெரிய வந்தது.

ரகுவின் பின்னணியைப் பார்த்தால் 20-க்கும் மேற்பட்ட ட்ராவல்ஸ், கார்ட்டேஜ், தோட்டங்கள் எனப் பெரிய அளவில் வசதி படைத்த குடும்பமாக இருக்கின்றான். ஆகவே, கொடைக்கானலில் மீண்டும் அப்பகுதியில் தொழில் செய்ய முடியாமல் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடுமோ என்று பிரசாந்த் குடும்பத்தினர் அச்சத்தில் இருக்கிறார்கள். எனவே அரசாங்கம் தங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

பிரசாந்த் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடரவில்லை. அவர் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள தலித் இளைஞர்கள் அதிகளவில் இடைநிறுத்தல் ஆகியுள்ளனர். எனவே, ராமர் மற்றும் பிரசாந்த் இருவரும் மலைக்குக் கீழே விளையும் விவசாயப் பொருட்களைக் குதிரை மூலம் மேலே ஏற்றிச் செல்லும் வேலையைச் செய்து வந்துள்ளனர்.

சாதிவெறி கும்பலால் வெட்டப்பட்ட சிறுவன் பிரசாந்த்.

சாதியத் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் பிரசாந்த் வெட்டுப்பட்ட அச்சத்திலிருந்து மீண்டுவர முடியாமல் இருக்கிறார். அவருக்கு உளவியல் ரீதியாக மருத்துவமும் உரிய நிதி இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், அப்பகுதியில் மீண்டும் இதுபோல் சம்பவம் நடக்காத அளவிற்குக் குற்றவாளிகளைக் கொலை வழக்கில் தண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம். இக்கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அண்மைக் காலங்களில், தலித் மக்கள் மீதான சாதிய, ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சுயமரியாதையோடு வாழ விரும்புவது, ஆதிக்கத்துக்கு அடிபணிய மறுப்பது எனத் தலித் இளைஞர்கள் மத்தியில் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு பண்பாட்டு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, கொலை செய்வது என்று அம்மக்களை அடக்கி ஒடுக்கத் துடிக்கின்றன.

இந்தத் தொடர் சம்பவங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு சாதியத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்; ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகத் தொடர்ச்சியாகக் கோரி வருகிறோம். அதன் அவசியத்தை அடுத்தடுத்த சம்பவங்கள் நமக்கு நிரூபித்து வருகின்றன.


இவண்,
தோழர் சிவகாமு,
மாவட்டச் செயலாளர்,
மதுரை மேற்கு மாவட்டம்,
மக்கள் அதிகாரக் கழகம்.

7826847268

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க