கரூர் மாவட்டத்தில் தெத்துப்பட்டி ஊராட்சி மக்கள் “எங்கள் ஊரில் ஆலய வழிபாடு முதல் இடுகாடு வரை பல்வேறு துயரங்களை அருந்ததியர் மக்கள் எதிர்கொள்கின்றனர்” என்று பிபிசி தமிழுக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதனடிப்படையில் தெத்துப்பட்டி கிராமத்தில் பிபிசி தமிழ் சமீபத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில் ஆதிக்கச் சாதி வெறியர்களால் பல ஆண்டுகளாக அருந்ததியர் மக்களுக்கு அரங்கேறி வருகின்ற தீண்டாமைக் கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள பள்ளபட்டி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் தெத்துப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த ஊராட்சியில் விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழில்கள் பிரதானமாக உள்ளன.
தெத்துப்பட்டி ஊராட்சிக்குள் ஊத்துப்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது. ஊரின் வலப்புறத்தில் சுமார் 30 அருந்ததியர் குடும்பங்களும், இடப்புறத்தில் 40-க்கும் மேற்பட்ட மாற்றுச் சாதி குடும்பங்களும் வசித்து வருகின்றன. இவர்களைத் தவிர 50-க்கு மேற்பட்ட பறையர் சாதி குடும்பங்களும் வசித்து வருகின்றன. ஆனால் அருந்ததிய மக்கள் மட்டுமே பல்வேறு ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மாற்றுச் சாதியினர் வசிக்கும் பகுதியின் சாலையோரத்தில் அருந்ததிய மக்கள் வழிபாடு நடத்தும் மதுரை வீரன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மதுரை வீரன் சாமிக்கு திருவிழாவை எடுப்பது அருந்ததிய சமூக மக்களின் வழக்கமாக உள்ளது. “கடந்த நான்கு வருடங்களாகக் கும்பிட முடியவில்லை. ‘அந்தப் பகுதி பக்கமே வரக் கூடாது’ என மாற்றுச் சாதியைச் சேர்ந்தவர்கள் பிரச்சினை செய்கின்றனர்” என்று ஊத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக, அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என அனைவரிடமும் மனு கொடுத்தும் வழிபாடு நடத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: நாமக்கல்: அங்கன்வாடியில் தீண்டாமை கொடூரம்!
தெத்துப்பட்டி ஊராட்சியில் அனைத்து சாதியினருக்கும் பொதுவான ஊராட்சி கிணறு ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்தக் கிணற்றை மூடி பிற சாதியினர் கோவில் கட்டுவதால் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் கிணறு பற்றிப் பேசினால், ‘உங்களை எல்லாம் வேண்டாம் என ஒதுக்கிவிட்டோம். எங்களிடம் பேசக்கூடாது’ என பிற சாதியினர் கூறுகின்றனர். இதனால் போதிய குடிநீரின்றி அவதிப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் கீதா தெரிவித்துள்ளார்.
இவைதவிர ஊத்துப்பட்டியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் பல்வேறு பாகுபாடுகளை அருந்ததிய சமூக மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதுபற்றி கூறும் ராஜா, “தெத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக தம்ம நாயக்கர் இருந்தபோது இங்குள்ள நான்கு சாதிகளுக்கும் சேர்த்து சுடுகாடு கட்டப்பட்டுள்ளது. அனைவரும் மேலே உள்ள மேடையில் வைத்து உடலை எரித்துக் கொள்ளலாம் எனக் கூறினர்.
“ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன அருந்ததியர் சமூக ஆண் ஒருவரை பொது சுடுகாடு மேடையில் வைத்து எரித்துள்ளனர். இதனால் பிற சாதியினர் கோபப்பட்டனர். இதன்பிறகு அங்கு வைத்து உடல்களை எரிப்பதில்லை. ஓடைக்கு அருகில் வைத்து உடல்களை எரித்து வருகிறோம்.”
அங்கும் அடக்கம் செய்வதற்கு இரண்டு குழிகள் மட்டுமே உள்ளதாகக் கூறும் ராஜா, “எரிப்பதாக இருந்தால் அங்குள்ள பாறை மீது வைத்து எரிக்கிறோம். ஓடைக்குப் போகும் வழியும் சரியில்லை. அங்கு எந்த வசதிகளும் இல்லை. அவ்வாறு செய்து தர வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
“பிற சாதியினர் வசிக்கும் தெருவுக்குள் செருப்பைக் கழற்றிவிட்டுத்தான் போக வேண்டும்” எனக் கூறும் அருந்ததிய சாதியைச் சேர்ந்த பழனி, “கோவில் பிரச்சினைக்குப் பிறகு நாங்கள் யாரும் அவர்கள் வசிக்கும் தெருவுக்குப் போவது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: கோவை மாணவி மீதான தீண்டாமை | பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றத் துடிக்கும் தி.மு.க அரசு | தோழர் மாறன்
பல ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள் கடவுளை வழிபடத் தடை, இறந்தவர்களின் உடலை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்குத் தடை, தெருவுக்குள் செருப்பு அணிந்து வரத் தடை என ஆதிக்க சாதிவெறியர்களால் அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடூரங்கள் தீண்டாமையின் உச்சமாகும்.
தமிழ்நாடு கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில்தான் பல பகுதிகளில் இரட்டைக் குவளை முறை, தாழ்த்தப்பட்ட மக்கள் பொது பாதையில் நடக்க அனுமதி மறுப்பு, பொது மயானத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை போன்ற சாதிய தீண்டாமைக் கொடூரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் காக்காவேரி ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்காலனி பகுதியில் பட்டியல் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி குழந்தைகளுக்கு தனித்தனி அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வந்த கொடூரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அருந்ததியர் மக்கள் தங்களின் சாமியைக் கும்பிடுவதற்கு கோவில் பக்கமே வரக்கூடாது என்று மிரட்டிய ஆதிக்க சாதிவெறியர்களை அரசியலமைப்பின் பிரிவு 17-இன் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அருந்ததியர் மக்கள் பலமுறை மனு அளித்தும் அம்மக்கள் சாமி கும்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடந்துகொண்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அருந்ததியர் மக்கள் தங்களின் தெருவுக்குள் செருப்பு அணிந்து நடக்கக் கூடாது என கூறும் ஆதிக்க சாதிவெறியர்களைக் கைது செய்ய வேண்டும். பொது மயானத்தை அருந்ததியர் மக்களும் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் ஆதிக்க சாதிவெறியர்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடூரங்களுக்கு எதிராகவும் குரல் எழுப்ப வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





