தீரன் சின்னமலை நினைவுநாள்… ‘அஞ்சலி’யா… ‘ஆதிக்க’ அணிவகுப்பா? | விகடன்

சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சாலைகளில் திரண்டு, சாதி வெறியாட்டம் போட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, சிறையில் இருக்கும் யுவராஜால் தொடங்கப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்தவர்களின் அத்துமீறல் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாள், ஆண்டுதோறும் மரியாதையுடனும் அமைதியுடனும் கடைப்பிடிக்கப்படவேண்டிய நாள். ஆனால், இந்த ஆண்டு மேற்கு மண்டலத்தின் பல மாவட்டங்களில் அரங்கேறிய சம்பவங்கள், அந்த நினைவுநாளின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கின்றன.

சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சாலைகளில் திரண்டு, சாதி வெறியாட்டம் போட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வாகனங்களில் தொங்கிக்கொண்டும், நம்பர் பிளேட்டுகளை மறைத்துக் கொண்டும் பயணித்ததுடன் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதுடன், காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து, சாதி முழக்கங்களையும் எழுப்பியது சட்டம்-ஒழுங்குக்கே சவால்விடும் அளவுக்குச் சென்றிருக்கிறது என்கிறார்கள்.

இது குறித்து ஈரோட்டைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் பொன்னையன் கூறுகையில், “போக்குவரத்து, பொது அமைதி என எதைப் பற்றியும் கவலைப்படாமல் படித்த இளைஞர்களும்கூட அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக, சிறையில் இருக்கும் யுவராஜால் தொடங்கப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்தவர்களின் அத்துமீறல் அளவுக்கு அதிகமாக இருக்கிறது” என்றார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் பேசியபோது, “இளைஞர்கள் அத்துமீறலில் ஈடுபட்டது உண்மைதான். மாவட்ட அளவில் விசாரணை நடத்திவருகிறோம். எங்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் பேசினோம். “இது தொடர்பாக அரசியல் கட்சிகளை முன்கூட்டியே அழைத்து, அத்துமீறலில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தியிருந்தோம். அதையும் மீறி அத்துமீறலில் ஈடுபடுவதாகப் புகார்கள் வந்தன. உடனடியாக காவல்துறை, வருவாய்த்துறையினரை அனுப்பிவைத்தோம். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் வாகன எண்களை லிஸ்ட் எடுத்து வைத்திருக்கிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, “விதிமீறலில் ஈடுபட்டவர்களின் பைக், கார்கள் என சுமார் 40 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அடுத்தடுத்த வருடங்களில் இந்த விதிமீறல்களை முழுமையாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யா பாரதியிடம் பேசினோம். “அன்றைய தினம் திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் வாகனங்கள், வீடியோ ஆதாரங்களைச் சேகரித்திருக்கிறோம். அதை அடிப்படையாகக்கொண்டு வழக்கு பதிவுசெய்து வருகிறோம். வாகனங்களின் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கியதால், இன்ஜின் நம்பரைப் பதிவுசெய்திருக்கிறோம். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்” என்றார்.

நினைவஞ்சலி என்பது வீரரை நினைவுகூர்வதற்கான நிகழ்வாக இருக்க வேண்டும். சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக அமையக் கூடாது!

  • சதீஸ் ராமசாமி

நன்றி: விகடன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க