மக்கள் அதிகாரக் கழகத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை வெளிவந்தபின், ஏப்ரல் 13 அன்று நாங்குநேரி பெரும்பத்து கிராமத்திற்குச் சென்றோம்.
பெரும்பத்தில் பாதிக்கப்பட்ட நெல்சன் அவர்களைச் சந்தித்தோம். அவரின் நிலைமையானது, மிகவும் மோசமாக இருந்தது. இடது கையில் இரண்டு விரல்கள் அகற்றப்பட்டுவிட்டன. வலது கையில் இரண்டு விரல்கள் தற்போது வரை செயல்பட முடியாதபடி இருக்கின்றன. தலையில் வெட்டப்பட்டு, இடதுபுற மண்டை ஓடு ஒருபக்கம் இல்லை. தலையில் வெட்டப்பட்டதால் இடது கண், பார்வையை இழந்து மூடிக் கொண்டது. வலது கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. உடல் தளர்ந்து தொடர்ச்சியாக அவரால் பேசக் கூட முடியவில்லை.
உடல்நிலை சரியில்லாத மனைவியைக் கவனித்துக் கொண்டிருந்த அவரை, இப்போது மனைவி கவனித்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.
மூன்று செய்திகளை அவர் நம்மிடம் கூறினார்.
- தன் வாழ்க்கையானது, தூசியை ஊதுவது போல் அவ்வளவு சுலபமாக ஊதப்பட்டு விட்டது.
- தன்னை வெட்டிய கொலையாளிகள், இந்த இளம் வயதிலேயே தங்களது வாழ்க்கையை இழந்து விட்டனரே என அவர்களுக்காக வேதனைப்பட்ட அவர், அவர்கள் யாரையும் பழிவாங்கும் எண்ணம் தனக்குத் துளியும் கிடையாது என்றார்.
- தமிழ்நாடு அரசு மனிதாபிமான கண்ணோட்டத்தோடு இந்த விசயத்தைப் பார்த்து தங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்றார்.
பேச முடியாத சூழலிலும் அவர் தனது வலியைப் பொறுத்துக் கொண்டு, நம்மோடு பேசினார். அவர் பேசப்பேச நமது மனதின் வலி கூடிப் போக, பேசமுடியாமல் நாம்தான் அவரிடமிருந்து விடைபெற்றோம்.
குடும்பத்தின் ஆணிவேரை வீழ்த்தியிருக்கிறது இந்த சாதிவெறி, கொலைவெறியாட்ட நிகழ்வு!
ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் தடை செய்தால் மட்டுமே, இது போன்ற சம்பவங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
தேநீர்க்கடைக்காரர் பிரபாகர், பெருமகிழ்வோடு தேநீர் போட்டுக் கொடுத்தார். உடலளவில் தேறினாலும், பொருளாதாரரீதியாகப் பெருத்த அடியை அனுதினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த வகையில் இந்த வெறியாட்டத்தை பின்னிருந்து இயக்கியவர்கள் வெற்றி பெறவே செய்திருக்கின்றனர்.
ஆம்! மஞ்சங்குளம் – பெரும்பத்து ஆகிய கிராமங்களுக்கு இடையே மிகப் பெரிய விரிசல் ஏற்படுத்தப்பட்டு விட்டது. மஞ்சங்குளத்திலிருந்து தேநீர் அருந்த வருபவர்கள் யாரும் இப்போது வருவதில்லை. முன்பு போல் வியாபாரம் இல்லை; முன்புபோல் நட்பு இல்லை; முன்புபோல் அங்கே மனிதம் இல்லை.
வீராங்குளம் கணேசன், மகள்கள் இருவரும் பிள்ளை பெற்று வீட்டிற்கு வந்த வேளையில், உயிருக்குப் போராடும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த பிஞ்சுக் குழந்தைகள் முகம் பார்க்க முடியாதபடி, கணேசன் அவர்களின் முகம், தலை எங்கும் வெட்டுப்பட்ட தழும்புகள். சில பற்கள் நொறுங்கிப் போயுள்ளன. ஓய்வறியமல் ஓடி, ஓடி உழைத்த அந்த ஜீவன், தன் உடலிலிருந்து அதிகப்படியான இரத்தம் வெளியேறியதால், கொஞ்ச நேரம் கூட நிற்க முடியாமல் நடுக்கம் ஏற்பட்டு, எந்த வேலையும் செய்ய முடியாமல் தவிக்கிறது.
இன்னும் திருமணம் செய்து கொடுக்கப்படாமல் இரு மகள்கள்… தற்போது தான் கல்லூரி வாசலில் கால் பதித்திருக்கும் ஒரு மகன்.
தேநீர்க் கடையில் சினேகமாக அனைவருக்கும் தேநீர் சொல்லும் கணேசன், இன்று சொல்ல முடியாத பெரும் சோகத்தோடு நம்மை வாசல் வந்து வழியனுப்பி வைத்தார்.
ஜான் மார்க் குடியிருந்த வீடு தரைமட்டமாக்கப்பட்டு இருந்தது. வாடகை வீட்டிற்கு அவரது குடும்பம் மாறியுள்ளது.
எப்படியெல்லாம் துடித்திருப்பான் என, மகனது நினைவால் இன்னும் ஒருவாய் சோறு நிம்மதியாய் சாப்பிட முடியாத ஜானின் அம்மா. இரண்டு பெண் பிள்ளைகள் தகப்பனை இழந்துள்ளனர். ஐந்து முடித்து ஆறு போகிறது ஒரு பிள்ளை. சாதிச் சான்றிதழ் வேண்டுமாம், பள்ளிக்கூடத்திற்கு. உதவிக்கு இருக்கிறோம் என உத்தரவாதம் கொடுத்துள்ளோம்.
விடைபெறும் வேளையில், ஜானின் மனைவி நம்மிடம் பேசினார். அவர் என்ன பேசுவார்? தன் கணவர் வெட்டுப்பட்டதையும், அவர் கால் நடக்க முடியாதவர் என்பதையும் சைகையில் கூறினார். மேலே கைகாட்டி, தன் கண்ணீரைத் துடைத்துக் காண்பித்தார். வாய் பேச முடியாதவர் ஆயிரம் உணர்வுகளை தன் சைகை மொழியில் கடத்துகிறார். வாய் அடைத்து, மொழி அற்று, என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல், ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பினோம். யார் வாய் பேச முடியாதவர் என்றே தெரியவில்லை.
படுகொலை செய்யப்பட்ட ஒடிசா மாநிலத் தொழிலாளி திருநாத் கட்டாவின் குடும்பம் ஊருக்கே சென்றுவிட்டது.
இந்த வயதிலும் யாருக்கு யாரையும் எதிர்பார்க்காமல் உழைத்துக் கொண்டிருந்த மண்வண்டி இராமசாமி என்று அழைக்கப்படும் பெரியவர் இராமசாமி இப்போதும் ஒரு கையை தூக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். இளையவரான புளியங்குளம் சசிகுமார் கோவிலுக்கு நேர்ந்து கொண்டு மொட்டை போட்டு வந்துள்ளார்.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, பெரும்பத்து நீதி கேட்கிறது. ஜான் மார்க், திரிநாத் கட்டா, தாக்குதலுக்குள்ளானவர்கள் உள்ளிட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான, நீதியின் குரல்தான் அப்பகுதி மக்களின் தேர்தல் புறக்கணிப்பு. கேளாத செவிகளைக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கம், புறக்கணிப்பைக் கைவிட கோரிக்கை வைக்க, உறுதியாய் மறுத்திருக்கின்றனர் மக்கள்.
உழைக்கும் மக்கள் போராட்டம் வெல்லட்டும்!
2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்!
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்,
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











