அண்மையில் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் பாசிச மோடி அரசை பணியவைத்து இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேர்வு மோசடிகளுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஐந்து நாட்களாக தொடரும் இப்போராட்டம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி 14-வது ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் (Jharkhand public service commission) சார்பில் 103 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். ஜூலை 2-ஆம் தேதி இத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. அத்தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் புகார் அளித்தனர். மேலும், பிரிவு வாரியான மதிப்பெண்களையும் வெளியிடவில்லை என்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், மாணவர்களுக்கு முறையாகப் பதிலளிக்கப்படவில்லை. சி.ஐ.டி. விசாரணையிலும் இத்தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து எந்தட் தகவலும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதனால் மாணவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் முண்டா மைதானத்தில் குவிந்து “ஜார்க்கண்ட் அரசே! சுயநினைவிற்கு வா!” என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடந்து முடிந்த ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் தேர்வுகளை இரத்து செய்ய வேண்டும்; ஓ.எம்.ஆர். தாள்களில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்; ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், “ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்” என்று மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐந்து நாட்களாக தொடர்ந்து நடந்துவரும் இப்போராட்டத்தின் மீது ஜார்க்கண்ட் மாநில போலீசு கடும் ஒடுக்குமுறைகளை செலுத்தி வந்தாலும் மாணவர்கள் உறுதியாகப் போராடி வருகின்றனர். ஜார்க்கண்டில் மழை பெய்துவரும் சூழலில் மாணவர்கள் குடில்கள் அமைத்துக்கொள்ளக் கூட போலீசு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் மழையில் தார்பாய்களை பிடித்தபடி மாணவர்கள் போராடி வருகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும் தீப்பந்தங்களோடும் கைப்பேசி வெளிச்சத்திலும் உறுதியாகப் போராடுகின்றனர்.
ஜார்க்கண்டில் இந்தப் பொது சேவை ஆணையத் தேர்வில் முறைகேடு நடப்பது இது முதன்முறை அல்ல. அதைப்போல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளான ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (Jharkhand staff selection committee) தேர்வுகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. வினாத்தாள் கசிவு, தேர்வு மதிப்பீட்டில் மோசடி என எண்ணற்ற குளறுபடிகளுடன்தான் இத்தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலமுறை இதுகுறித்து மாணவர்கள் புகார்களை எழுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டமே தீர்வு என மாணவர்கள் போராட்டக்களம் புகுந்துள்ளனர். இப்போராட்டத்திற்கு கரப்பான் ஜனதா கட்சியும் (சி.ஜே.பி.) தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
படிக்க: கனவுகளைச் சிதைத்து உயிரைக் குடிக்கும் நுழைவுத் தேர்வுகள்!
இந்தியாவில் கார்ப்ரேட்மயமாகி வரும் கல்வித்துறையின் மற்றொரு இழிந்த விளைவுதான் இந்த ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் தேர்வு முறைகேடு. அரசு பணிக்கான தேர்வை நடத்துவதற்கு ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் பொறுப்பாக இருந்தாலும், தேர்வு வினாத்தாள்களை தயாரிப்பதையும் தேர்வு மதிப்பீட்டையும் தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தின் மூலம் காண்ட்ராக்ட்-க்கு விட்டுவிடுகிறது. இந்தத் தேர்வை நடத்தும் ஒப்பந்தத்தையும் “டி.டி.ஆர் டேட்டா ப்ராசசிங் பிரைவேட் லிமிடெட்” (TDR Data processing limited) என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. ஆனால், இந்நிறுவனம் ஏற்கெனவே 2025-இல் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகளை செய்தது கண்டறியப்பட்டு அந்நிறுவனம் கருப்பு பட்டியலில் (Black list) இணைக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திடம் ஜார்க்கண்ட் அரசு மீண்டும் காண்ட்ராக்டை ஒப்படைத்திருப்பது அதன் அப்பட்டமான கார்ப்பரேட் சேவையைக் காட்டுகிறது.
குறிப்பாக, மோடி ஆட்சியில் தேர்வு முறைகேடுகளும் குளறுபடிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஆனால், பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லும் பிற கட்சிகளும் கல்வி தனியார்மயத்தையும் தேர்வு சந்தைமயமாக்கலையும் தீவிரப்படுத்தி கார்ப்பரேட் சேவைக்காக பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை காவுகொடுக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆட்சி செய்யும் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால்தான், மாணவர்கள் தங்கள் உரிமையை மீட்பதற்காக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
மாநிலத் தேர்வு ஆணையத்தின் தேர்வுகளின் மூலம் எப்படியாவது ஒரு அரசு வேலையில் சேர்ந்து தங்களது எதிர்காலத்தை உத்திரவாதம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் ஆண்டுக்கணக்கில் முயற்சிக்கின்றனர். இருக்கும் சொற்பமான அளவிலான காலிப் பணியிடங்களுக்காக பல்லாயிரம் மாணவர்கள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். இதில் பெரும்பான்மையானோர் நடுத்தர மற்றும் ஏழை இளைஞர்கள்தான். தங்கள் குடும்பங்களின் நிலையை மேம்படுத்த வேண்டுமென்பதற்காக இதுபோன்ற போட்டி தேர்வுகளுக்காக தங்கள் இளமையை பறிகொடுத்து பல ஆண்டுகள் முயற்சிக்கின்றனர். பயிற்சி மையங்களில் சேர வசதியில்லாமல் கடுமையாக உழைக்கின்றனர். அடிப்படை தேவைகளுக்காக வருவாய் ஈட்ட வேறு வேலை பார்த்துகொண்டே படிக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையானோருக்கு எஞ்சியிருப்பது ஏமாற்றம் மட்டுமே. அண்மையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டம் மாணவர்கள் – இளைஞர்களின் இந்தக் கொந்தளிப்பை வெளிப்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்கள் முன்னெடுத்துள்ள இப்போராட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முன்னெடுப்பாகும். இப்போராட்டத்தை முறையாக வழிநடத்தி செல்வதும், அதன் மூலம் இந்த அரசு கட்டமைப்பை அம்பலப்படுத்துவதும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
மாயவள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











