கனவுகளைச் சிதைத்து உயிரைக் குடிக்கும் நுழைவுத் தேர்வுகள்!

2015-ற்கு பிறகான ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. பாசிச பா.ஜ.க-வின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 1,15,850 மாணவர்களின் தற்கொலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அரசால் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) இந்த ஆண்டு மே மாதம் “இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் 2024” என்ற தலைப்பிலான அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2024 -ஆம் ஆண்டில் மட்டும் 1,70,746 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2023 ஆண்டை விட இந்த எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் 0.4% குறைவு. ஆனால் இதே அறிக்கையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான பகுதியாக இருப்பது. மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கைதான்.

2024ஆம் ஆண்டில் மட்டும் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை 14,448 ஆகும். 2023 ஆண்டில் இதே அறிக்கையின் படி தற்கொலை எண்ணிக்கை 13,892 ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டை விட 2024–இல் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2015-ற்கு பிறகான ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. பாசிச பா.ஜ.க-வின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 1,15,850 மாணவர்களின் தற்கொலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அரசால் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது என்பது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒன்பது ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற இந்த ஆபத்தான நிலை இந்திய சமூகத்தின் மனசாட்சியை உலுக்குகிறது.

என்.சி.ஆர்.பி–யின் இந்த அறிக்கை மற்றும் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் ஆகியவை பெரும்பாலும் மன அழுத்தம், பொதுவாகக் கூறப்படும் அழுத்தமான கல்விச் சூழல் என்ற அளவுகோலிலிருந்து மட்டுமே அணுகப்படுகிறது. மேலும் சில தன்னார்வ குழுக்கள் கூடுதலாக சில பரிமாணங்களுடன் சமூகக் காரணிகளையும் அடையாளப்படுத்தி ஆய்வை மேற்கொண்டிருந்தாலும் (சமூக வலைத்தள பங்கு, பெண்கள் மீதான பாலியல் வன்முறை, வேலையின்மை) தீர்வு என்று வரும்போது மீண்டும் மன அழுத்தம் என்ற நிலையிலிருந்தே அணுகுவதாக இருக்கிறது.

குறிப்பாக மார்ச் 2025-இல், இந்திய உச்ச நீதிமன்றத்தால் மாணவர் மனநலம் மற்றும் தற்கொலைத் தடுப்புக்கான தேசியப் பணிக்குழு (NTF) அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைக்கு அடிப்படையாக இருப்பது சமூக, அரசியல் காரணிகள் தான். அதிகரிக்கும் இந்த மாணவர் தற்கொலைகள் வளர்ந்து வரும் சமூகத்தின் நெருக்கடியையும் (வேலையின்மை, பொருளாதார நெருக்கடி), கல்விச் சூழலில் நிலவும் அழுத்தம் நிறைந்த பாதுகாப்பற்ற, முற்றிலும் ஜனநாயகம் மறுக்கப்பட்ட நிலையில் இருக்கும் சூழலையும் தான் துலக்கமாக வெளிப்படுத்துகிறது. (தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும் மாணவர் சங்கத் தேர்தல்).

குறிப்பாக இன்றளவும் இறுக்கமாக இருக்கும் சாதிய, வர்க்கப் பாகுபாடு நிறைந்த கல்விச்சூழல், கல்வியை முழுவதும் சரக்காக மாற்றும் திசையில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலால் முன்னெடுக்கப்படும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி கார்ப்பரேட்மயம் போன்ற சமூகக் காரணிகள் இத்தகைய நெருக்கடிக்கு முதன்மையான பங்காற்றுகின்றன. இவற்றை மேலும் மோசமாக்கும் கொள்கைகளையே பாசிச கும்பல் முன்னெடுக்கிறது.

2026 ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) நுழைவுத்தேர்விற்கு 13,55,293 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தீர்மானித்த தகுதி மதிப்பெண் பெற்று தேர்வானவர்களின் எண்ணிக்கை 2,50,182. இதிலும் ஜே.இ.இ முதன்மை (மெயின்ஸ்) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 16.26% பேர் மட்டுமே.

மற்றொருபுறம் நீட் தேர்விற்கு 2026–இல் விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 22,79,743. இவ்வாறு ஆண்டுதோறும் நீட் தேர்விற்கு 20 இலட்சத்திற்கும் மேல் விண்ணப்பிக்கின்றனர். இதில் 2025 ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12.3 இலட்சம் பேர் மட்டுமே. இதுபோன்ற தேர்வுகள் மாணவர்களைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களின் உயர்கல்வி கனவுகளைச் சிதைப்பதை மேற்கூறிய விவரங்களிலிருந்து உணர முடியும். இதில் இந்த நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து நடத்துவதன் மூலம் இந்த ஆண்டு நீட் தேர்வில் மாதிரி வினாத்தாள் கசிவு ஏற்பட்டு 22 இலட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு இரத்து செய்யப்பட்டது. இதனால் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். ஆண்டு தோறும் இந்த முறைகேடுகள் வெளிவந்து இவர்கள் கூறிய தகுதி, திறமை எல்லாம் பல்லிளிக்கிறது.

மற்றொருபுறம் பல்வேறு துறை சார்ந்த மாணவர்களின் ஒரே கனவாக இன்றும் இருப்பது டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வுகள் தான். ஆனால் இதற்காக போட்டியிடும் மாணவர்களின் எண்ணிக்கையும், அரசு உருவாக்கும் வேலைவாய்ப்பும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக 2025–ல் மட்டும் மூன்று தேர்வுகள் (GROUP 1,2,3) நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 21,85,463. ஆனால் அறிவிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 6,008. இந்த விவரம் தெளிவாக உணர்த்துவது வேலைவாய்ப்புக்காக, வாழ்வாதாரத்திற்காக பெரும் கனவுகளோடு இயந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு நேர் எதிர் திசையில் அரசு வேலை என்பதையே வெட்டிச் சுருக்கி ஒழித்துக்கட்டும் திசையில் அரசுகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இதில் கடந்த சில ஆண்டுகளாக போலீசு தேர்வு, ஆசிரியர் பணியிடங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் வேலை வழங்காமல் இருப்பதை எதிர்த்து இளைஞர்கள் ஒருபுறம் போராடி வருகின்றனர். இதுதான் வளர்ந்த மாநிலம் என்று சொல்லப்படும் தமிழ்நாட்டின் நிலை என்றால் மற்ற மாநிலங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

உதாரணமாக மருத்துவம் மற்றும் பொறியியல் தேர்வுகளுக்கான இந்தியாவின் முதன்மையான “பயிற்சித் தலைநகரம்” என்று அறியப்படும் கோட்டா நகரில், தேர்வில் தோல்வி என்ற காரணத்திற்காக மட்டும் 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். மேலும், குடும்பப் பிரச்சினைகள் காரணமாக 95 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு தற்கொலைக்கான காரணங்களில் முதன்மையாக இருப்பது தேர்வில் தோல்வி என்பதுதான். இளைஞர்களின் எதிர்காலம், கனவு, அவர்கள் குடும்பத்தின் மொத்த வாழ்வாதாரமும் இணைக்கப்பட்டிருக்கும் போட்டித் தேர்வுகள் ஒருபுறம், உயர்கல்வியே கேள்விக்குறியாக மாற்றப்பட்டிருக்கும் நுழைவுத் தேர்வுகள் மற்றொருபுறம். கல்விச் சூழல் பின் தங்கிய நிலையில் இருக்கும் வட இந்தியா குறிப்பாக தற்கொலைகள் அதிகம் நடைபெறும் மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பொதுத்தேர்வுகளே மாணவர்களை பெரும் அளவில் பலிவாங்குவதாக இருக்கிறது.

மற்றொருபுறம், மேற்கண்ட மாநிலங்களில் பள்ளிக்கல்வியிலேயே இத்தகைய ஆபத்தான போக்குகளை நாம் உணர முடியும். ஏனென்றால் இம்மாநிலங்களில் 5-ஆம் வகுப்பு முதல் 10,12-ஆம் வகுப்புகள் வரையிலும் பள்ளி மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. இந்த ஆபத்தான உண்மையோடு பாசிஸ்டுகள் நிலைநாட்டிக்கொண்டிருக்கும் புதிய கல்வி கொள்கையை ஒப்பிட்டுப் பாருங்கள், அந்த கல்விக் கொள்கையில் ஒரு கூறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் 5-ஆம் வகுப்பு முதல் அவர்கள் நடத்தப்போகும் பொதுத்தேர்வு என்பது எவ்வளவு பெரிய வன்முறை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

மற்றொருபுறம் வட மாநிலங்களில் பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் குறித்தும் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலைகள் அதிகரிப்பது குறித்தும் ஆய்வு செய்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் 2025–ஆம் ஆண்டு எழுதியுள்ள கட்டுரையில் மன அழுத்தத்திற்கான சமூகக் காரணங்கள் குறிப்பாக சாதி ரீதியான துன்புறுத்தல், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், கல்வி அழுத்தம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளது. மேலும், அக்கட்டுரை கொரோனா காலத்திற்குப் பிறகு மாணவர்களின் மன அழுத்தம் அதிகரித்திருப்பதையும், தற்கொலைகள் அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

இதுகுறித்து நேரடியான அனுபவங்களை விளக்கும் மருத்துவர் நாக்பால் “கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பல இளம் மாணவர்கள் கல்வி அழுத்தம், அவமானம் மற்றும் சக மாணவர்களால் ஒதுக்கப்படுதல் ஆகியவற்றை அமைதியாகச் சகித்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் மன உளைச்சல் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது,” என்கிறார். மேலும் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து அதிகரித்து வரும் சமூகத் துண்டிப்பு மற்றும் பள்ளி ஆலோசகர்களிடம் உதவி கேட்பதில் உள்ள நம்பிக்கையின்மை ஆகியவற்றால் இது மேலும் தீவிரமடைகிறது என்கிறார். “யாருக்கு ஆதரவு மிகவும் தேவையோ, அவர்கள் உதவி நாடினால் முத்திரை குத்தப்படுவோமோ அல்லது கண்டிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் ஒரு இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளனர். இந்தத் தனிமையிலும் அச்சத்திலும்தான் தற்கொலை எண்ணங்கள் ஆழமாக வேரூன்றியுள்ளது” என்கிறார்.

பாசிஸ்டுகளின் இந்த 12 ஆண்டு கால ஆட்சியில் இந்தியச் சமூகத்தில் நிலவிய சாதி – வர்க்க ஏற்றத்தாழ்வுகள் எண்ணிப்பார்க்க முடியாத அளவில் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடும்பங்களின் எதிர்கால நம்பிக்கையாக இருக்கும் மாணவர்களின் தற்போதைய கல்விச்சூழலே பாதுகாப்பற்ற, குறிப்பாக ஜனநாயகமற்ற (சக மாணவர்களிடையிலான சமூக உரையாடல்களுக்கான சூழல், தங்களது பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்கான கட்டமைப்பு, தங்களது தனித்திறன்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படும் சூழல்), அதற்கான எவ்வித கட்டமைப்பும் இல்லாத நிலையில் இருக்கிறது. மற்றொருபுறம் பெரும்பாலான மாணவர்களின் சமூக வலைத்தள பயன்பாடு சமூகத்திலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தி எதையும் எதிர்கொள்ள முடியாத பலவீனமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. சமூகத்தோடு, சக மாணவர்களோடு, ஆசிரியர்களோடு இணைந்து கொள்வதற்கு அவர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச சூழலையே ஒழித்துக் கட்டி கல்வியை டிஜிட்டல்மயமாக்க போவதாகவும் ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறை என்றும் இவர்கள் போடும் வளர்ச்சி கூப்பாடுகளினால் நேரப் போவது கட்டாயம் ஒரு மரண ஓலம்தான்.

இப்படி மொத்தமாக 2024 ஆண்டு என்.சி.ஆர்.பி அறிக்கையின் புள்ளிவிவரங்களை இந்திய சமூகக் காரணிகளோடு ஒப்பிட்டால் அது தெளிவாக உணர்த்துவது, பாசிஸ்டுகளும், ஆளும் வர்க்கமும் இந்திய பொருளாதாரம், இந்தியக் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் திசையில் எடுத்துச்செல்வது ஏழை எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட இந்திய மாணவர்களின் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து, கல்வியிலிருந்து அவர்களைப் புறக்கணித்து இறுதியில் தற்கொலையை நோக்கித் தள்ளுவதுதான். மேற்கூறிய உண்மை உணர்த்துவது ஒன்றுதான்: இறந்த 14,448 மாணவர்களின் தற்கொலையும், இனி நேரப்போகும் பேரிழப்பும், கட்டாயமாக தற்கொலை அல்ல திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறை திட்டமிட்டு நடத்தப்படும் கொலை.

நம்மை வேதனைக்குள்ளாக்கும் இந்த உண்மை ஒருபக்கம் என்றால், நம்பிக்கையளிக்கும் மற்றொருபக்கமும் இருக்கிறது. தேர்ச்சி பெற்றும் வேலை கொடுக்காததால் போராடும் தமிழ்நாட்டு மாணவர்கள் தொடங்கி வட இந்தியாவில் இரயில்வே தேர்வு முறைகேட்டை எதிர்த்து பசு வளைய மாநிலங்களில் இரயில், பேருந்து, அரசு அலுவலகங்களை முடக்கி போராட்டம் நடத்திய இளைஞர்கள், வேலையின்மை உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்திய பாராளுமன்றத்தில் புகைக் குண்டு வீசி எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள், தற்போது நீட் மற்றும் சி.பி.எஸ்.இ முறைகேடுகளுக்கு எதிராக இணையத்தில் இலட்சக்கணக்கில் சி.ஜெ.பி கட்சி (CJP) என அணிதிரண்டு போராடும் இளைஞர்கள் வரை எதிர்த்துப் போராடும் போர்க்குரல் வலுக்கத்தான் செய்கிறது.

இந்த நம்பிக்கையளிக்கும் உண்மையிலிருந்து இளைஞர்களை – மாணவர்களை வேலையின்மைக்கு எதிராகவும், புதிய கல்விக் கொள்கையின் மூலம் கல்விக் கட்டமைப்பை கார்ப்பரேட் மற்றும் காவிமயமாக்கிவரும் பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அணிதிரட்டி போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.


பூவரசன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க