07.12.2024
திட்டமிட்டு நுழைவுத் தேர்வை திணித்து
ஏழை எளிய பின்னணி கொண்ட மாணவர்களை
மேற்படிப்புக்கு செல்ல விடாமல் தடுக்கும் யு.ஜி.சி-யின் புதிய அறிவிப்பு!
கண்டன அறிக்கை
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் புதிய அறிவிப்பை பின்பற்ற வேண்டும் என யு.ஜி.சி அறிவுறுத்தியது கல்வியாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு இரண்டு முறை சேர்க்கை நடைபெறும், பனிரெண்டாம் வகுப்பு முடித்து விருப்பப்பட்ட பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று பளபளப்பாக இவர்கள் விட்ட இந்த அறிவிப்பு என்பது தேன் தடவிய தோட்டா என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் புதிய கல்விக் கொள்கையில் உள்ள விஷயங்களை நடைமுறைப்படுத்தும் விதமாகத்தான் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. உதாரணத்திற்கு பனிரெண்டாம் வகுப்பு படிப்பது ஒரு பிரிவாக இருக்கலாம். அது முடிந்தவுடன் மேற்படிப்புக்கு போகும்போது பன்னிரண்டாம் வகுப்பில் நாம் படித்த துறையிலேயே மீண்டும் படிக்காமல் வேறு துறையை தேர்ந்தெடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால் அதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பது விதி. சரி சம்பந்தப்பட்ட துறையிலேயே மீண்டும் தேர்வு எழுதாமலே படிக்கலாமா என்றால் அதைப்பற்றி அறிவிப்பே இல்லை. இதிலிருந்து அனைவருக்குமே நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாகிறது.
ஏற்கனவே நீட் மூலம் மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வை கொண்டு வந்தார்கள். பொறியியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வருவது என்பது கலை அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்திலும் இந்த நடைமுறை வரும் என்பது தான் அவர்களுடைய அறிவிப்பின் சாரம்.
எப்படி நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு உழைக்கும் மக்களின் மருத்துவ கனவு கானல் நீரானதோ அதேபோல் ஏழை எளிய மாணவர்கள் இனிமேல் உயர் கல்விக்கு போக வேண்டும் என்றாலே நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளார்கள். இது பலரையும் கல்வி கற்க போவதில் இருந்து அப்புறப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆதலால் இந்த அறிவிப்பை எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
எந்தப் பிரிவு படித்து இருந்தாலும் விருப்பப்பட்ட பிரிவை தேர்ந்தெடுக்கலாம் என்ற அறிவிப்பெல்லாம் கார்ப்பரேட் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் உருவாக்கும் புதிய துறைகளுக்கும் புதிய பாடப்பிரிவுகளுக்கும் ஆட்களைப் பிடித்துக் கொடுத்து கல்லா கட்ட வைக்கலாம் என்பதுதான் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
மேலும் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் உயர்தட்டு பிரிவினர் எவ்வளவு பணம் கொடுத்தாவது தாங்கள் விருப்பப்பட்ட பாடத்தை எடுத்து படிக்க முடியும் என்ற நிலைமையை இதன் மூலம் உருவாக்கிக் கொடுக்கிறார்கள்.
இந்த அறிவிப்பானது புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளை கார்ப்பரேட் மயமாக்குவது என்பதன் தொடர்ச்சி தான். நாம் இதை எதிர்த்து ஒன்று திரண்டு முறியடிக்க வில்லை என்றால் தொடர்ச்சியாக நாமும் வெளியேற்றப்படுவோம். பறிக்கப்படும் உரிமைகளை மீண்டும் பறித்தெடுக்க வாரீர்.
தோழர். ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram