கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி காசாவில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகான சுமார் 300 நாட்களில், இனவெறி இஸ்ரேலால் குறைந்தபட்சம் 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு குழந்தை கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் (UNICEF) ஜூலை 6-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
‘மத்திய கிழக்கு’ மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கான யுனிசெஃப் மண்டல இயக்குநர் எடுவார்ட் பெக்பெடர், “நாளுக்கு ஒரு குழந்தை என்ற சராசரியில் உயிரிழப்பை ஏற்படுத்தும் ஒரு போர்நிறுத்தம், குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியில் தோற்றுவிட்டதையே காட்டுகிறது. காசாவில் உள்ள குழந்தைகள் தங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு வன்முறை முடிவுக்கு வருவதற்காக இன்னமும் காத்திருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
காசாவில் உள்ள குடும்பங்கள் அதன் நிலப்பரப்பின் மூன்றில் ஒரு பகுதியில் உள்ள இடிந்து விழுந்த கட்டடங்கள், இடிபாடுகள் மற்றும் அகற்றப்படாத கழிவுகளுக்கு இடையே தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் குழந்தைகள் உணவு மற்றும் குடிப்பதற்குச் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமலும் தொடர்ந்து கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் இன்குபேட்டர் (incubators) வசதிகள் குறைவாக இருப்பதால், முன்கூட்டியே பிறக்கும் சில குழந்தைகள் ஒரே இயந்திரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவலம் நிலவுகிறது.
அக்டோபர் 2023 முதல், காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனவெறித் தாக்குதலில் 73,300-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலில் இதுவரை 60,737 குழந்தைகள் பெற்றோர் இருவரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே வேளையில் பத்து லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்குப் பாதுகாப்பும் மனநல ஆதரவும் தேவைப்படுகிறது. சுமார் 17,000 குழந்தைகள் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து அல்லது துணை இன்றி தவிப்பதாக அந்த அமைப்பு முன்னரே மதிப்பிட்டிருந்தது. இது உலகின் மிகப்பெரிய குழந்தை பாதுகாப்பு நெருக்கடிகளில் ஒன்றாகும். பல குடும்பங்கள் தொடர்ச்சியான இடப்பெயர்வு, வருமான இழப்பு, மருத்துவ உதவி, கல்வி, பாதுகாப்பு கிடைக்காத நிலை ஆகியவற்றை எதிர்கொண்டு வாழ்கின்றனர்.
குறிப்பாக ஆகஸ்ட் 2 அன்று மேற்கு காசா நகரில் நடந்த ஒரு தாக்குதலில், கர்ப்பிணிப் பெண், அவரது கணவர் மற்றும் அவர்களின் ஐந்து வயது மகன் கொல்லப்பட்டனர். பிறகு அப்பகுதி மக்கள் அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த பிறக்காத குழந்தையின் எச்சங்களை இடிபாடுகளிலிருந்து மீட்டுள்ளனர் என்று அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
பல குழந்தைகள் விளையாடுவதற்குப் பதிலாக தண்ணீர் சுமப்பது, உணவுக்காக வரிசையில் நிற்பது, விறகு சேகரிப்பது என ஒரு தலைமுறையினரின் குழந்தைப் பருவம் பறிபோயுள்ளது. பெற்றோரை இழந்த பல குழந்தைகள் சிறுவயதிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்கின்றனர். அதேசமயம், முகாம்களில் ஓவியப் பொருட்கள், பேப்பர் மற்றும் பேனாக்களுக்குக் கூட கடும் தட்டுப்பாடு நிலவுவதாக யுனிசெஃப் மற்றும் உதவி அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மே மாதத்தில் யுனிசெஃப் நடத்திய மதிப்பீட்டில், சிறு குழந்தைகளுக்கு அவர்களின் ஆரம்பக்கால வளர்ச்சிக்குத் தேவையான பாதுகாப்பான மற்றும் உற்சாகமூட்டும் சூழல் இல்லை என்றும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையான உதவிகள் கிடைக்காமல் நீண்டகாலமாகக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
“போர் அவர்களிடம் பறித்ததைக் குழந்தைகள் மீண்டும் பெறுவதற்கான வழி விளையாட்டு மட்டுமே,” என்று யுனிசெஃப்பின் பாலஸ்தீன தொடர்பு அதிகாரி ஜொனாதன் கிரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இனவெறி இஸ்ரேலால் காசாவில் குழந்தைகள் தினமும் கொல்லப்படுகின்றனர். என்றாவது ஒரு நாள் தாக்குதல் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். எனவே மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரும் காசா குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
செய்தி ஆதாரம்: அல்ஜசீரா
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











