நமது அண்டை நாடான இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில், அரியாலை அருகே அமைந்துள்ள செம்மணி, ஈழத் தமிழ் மக்கள் அடர்த்தியாக வாழும் ஒரு பகுதியாகும். அங்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மனித எச்சங்களைக் கண்டறியும் அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மனிதர்கள் குழிகளில் கூட்டாகப் புதைக்கப்பட்டிருப்பதும், அங்கிருந்து கண்டெடுக்கப்படும் மனித எச்சங்களின் புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி, உலக மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. பாசிச சிங்கள இனவெறியர்களால் அப்பாவி ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தை இது உலகிற்கு மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
நீதிமன்ற மேற்பார்வையின் கீழ், செம்மணியில் 90 நாட்களுக்கும் மேலாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அகழ்வுப் பணிகள் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளன. ஜூலை 24-ஆம் தேதி நிலவரப்படி, 478 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 464 மனித எச்சங்கள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. கால்கள் உடைக்கப்பட்டு, வாய் கட்டப்பட்ட நிலையில்; தலை துண்டிக்கப்பட்டுச் சிதைந்த நிலையில்; எலும்புகள் மட்டுமே குவியலாகக் கிடைக்கும் நிலைகளில் மனித எச்சங்கள் கண்டறியப்பட்டிருப்பது சிங்கள இனவெறியர்களின் காட்டுமிராண்டித்தனத்தை உணர்த்துகிறது.
மேலும், செம்மணியில் குழந்தைகளுடைய எச்சங்கள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டிருப்பது சிங்கள இனவெறியர்களின் கோர முகத்தைக் காட்டுகிறது. ஜூன் 9-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட 9 உடல் எச்சங்களில், ஏழு குழந்தைகளுடையதாகவும் ஒன்று பச்சிளம் குழந்தையுடையதாகவும் இருந்தது. சிறிய செருப்பு, பள்ளிப்பை, பொம்மை, சிறிய மணி வளையல், பால் புட்டி உள்ளிட்ட குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களும் அகழ்வுப் பணிகள் தொடங்கியது முதல் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
முப்பது ஆண்டுகளாய்
மூடிமறைக்கப்பட்ட கொடூரம்!
2025 பிப்ரவரியில் செம்மணி சிந்துபாத்தி பகுதியில் மயானப் புதுப்பிப்புப் பணிக்காகக் குழிகள் தோண்டப்பட்டபோது, மனித எச்சங்கள் தென்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி, மே மாதத்தில் அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடங்கப்பட்டுத் தற்போது வரை நடைபெற்று வருகின்றன. மேலும், செம்மணியில் கண்டறியப்படும் மனித எச்சங்கள், முப்பதாண்டுகளுக்கு முன்னர் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று ஈழத் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து 1995–1996 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சிங்கள இராணுவம், ஈழத் தமிழர்களை இன அழிப்பு செய்யும் நோக்கத்துடன் நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் பெண்களையும் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியது.
அக்கொடூரம், கல்லூரி மாணவி கிருசாந்தி செப்டம்பர் 7, 1996-இல் சிங்கள இராணுவ மிருகங்களால் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்வழக்கில், மேலதிகாரிகளின் உத்தரவின்படி செம்மணியில் நூற்றுக்கணக்கானோரின் உடல்களை அடக்கம் செய்தோம் என்று குற்றவாளிகளான ஐந்து கீழ்நிலை இராணுவத்தினர் வாக்குமூலம் அளித்தனர்.
அவர்களில் சோமரத்தின ராஜபக்சே என்பவர் “தான் மட்டும் நேரில் கண்ட புதைக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை சுமார் 250 இருக்கும்” என்று வாக்குமூலம் அளித்தார். மேலும், அவர்கள் சுட்டிக்காட்டிய இடங்களில் 1999-இல் தோண்டப்பட்டபோது, கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் 15 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், கொல்லப்பட்டவர்களின் அடையாளத்தை மறைப்பதற்காக அவர்களின் ஆடைகளை எரித்து உடல்களை நிர்வாணமாகப் புதைத்ததாக குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2025-ஆம் ஆண்டிலிருந்து செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுவரும் எச்சங்களும் அவ்வாறே ஆடையின்றி இருப்பது 1996-இல் சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களே தற்பொழுது மனித எச்சங்களாக கண்டெடுக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை உறுதி செய்கிறது. அதாவது, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட 2009 இன அழிப்புப் போருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பாகவே செம்மணியில் இக்கொடூர இனப்படுகொலை அரங்கேறியுள்ளது.
அதேபோல, 1999-இல் தோண்டி எடுக்கப்பட்ட 15 மனித எச்சங்களில் இரண்டு எச்சங்கள், 1996-இல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட இளைஞர்களினுடையது என தடயவியல் ஆய்வில் உறுதியானபோதும், வழக்கைச் பாசிச சிங்கள அரசு திட்டமிட்டு முடக்கியது.
வாக்குமூலம் அளித்த இராணுவத்தினர் சிறையில் மிரட்டப்பட்டதுடன் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட இடங்களை அவர்கள் சுட்டிக்காட்டியும் அகழ்வுப் பணிகளை தொடரவில்லை. கைதான நான்கு உயரதிகாரிகள் உடனே பிணையில் விடுவிக்கப்பட்டனர்; வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட ஏழு உயரதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட ஈழ மக்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும் அவை நீதிமன்றத்தாலும் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகளாலும் கண்டுகொள்ளப்படவில்லை.
30 ஆண்டுகளாக மூடிமறைக்கப்பட்ட இக்கொடூரம், 2025-இல் மீண்டும் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பின்னரே ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கெனவே 478 எச்சங்கள் கிடைத்துள்ள நிலையில், அகழ்வு தடங்கலின்றித் தொடர்ந்தால் இன்னும் நூற்றுக்கணக்கான எச்சங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.
இனப்படுகொலை குற்றவாளிகள்
தண்டிக்கப்படுவார்களா?
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளில் 20 மனிதப் புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் செய்யப்பட்டு மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2013-இல் மாத்தாளை பகுதியில் 155 மனித எச்சங்களும், மன்னாரில் 81 மனித எச்சங்களும் 2018-இல் மன்னாரில் உள்ள மற்றொரு பகுதியில் 318 மனித எச்சங்களும் கண்டறியப்பட்டன. இது, ஈழ மண்ணில் இன்னும் கண்டறியப்படாத புதைகுழிகளில் பல்லாயிரக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
2009 இன அழிப்புப் போர் காலத்தில் மட்டுமன்றி, அதற்கு முந்தைய காலகட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஆனால், இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அரசுகள் ஈழத் தமிழ் மக்களின் உடல் எச்சங்களைக் கண்டறியும் அகழ்வுப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதையும் குற்றவாளிகளைப் பாதுகாப்பதையுமே செய்து வந்தன. தற்போதைய அனுர குமார திசநாயக்கே தலைமையிலான அரசும் இதற்கு விதிவிலக்கல்ல.
செம்மணியில் 474 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள போதிலும் இறந்தவர்களை அடையாளம் காணும் பணி அனுர அரசால் இன்னும் தொடங்கப்படவில்லை. அகழ்வுப் பணிகள் முடிந்த பிறகே மனித எச்சங்களை அடையாளம் காணும் பணிகளை தொடங்க இயலும் என்று மறுத்து வருகிறது.
மேலும், 30 ஆண்டுகளாக நீதி கிடைக்காததை சுட்டிக்காட்டி சிங்கள இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மனிதப் புதைக்குழிகளை ஆய்வு செய்வதில் சர்வதேச நீதித்துறையின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் போதிலும், அதற்கும் அனுர அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. செம்மணியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கியதில் தாமதம் ஏற்படுத்தியதாகவும், அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் தன்னார்வலர்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் மிரட்டியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அதேபோல, ஐரோப்பிய நாடுகள் செம்மணி புதைகுழிகளை பார்வையிடுவதற்கு தங்களின் பிரதிநிதிகளை அனுப்பியதுடன் தங்கள் கடமைகளை முடித்துக் கொள்கின்றன. ஈழத் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதை பாசிச ராஜபக்சே கும்பலுடன் துணைநின்று வழிநடத்திய இந்திய அரசு, தற்போதும் தன்னுடைய மேலாதிக்க நலனிலிருந்து செம்மணி இனப்படுகொலை குறித்து பேச மறுக்கிறது. தமிழ்நாட்டு ஊடகங்களோ இப்பிரச்சினை குறித்து வாய்மூடிக்கிடக்கின்றன. தமிழ் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழினவாத அமைப்புகள், கட்சிகள் செம்மணி படுகொலை குறித்து தற்போது வாய்திறக்காமலும், நீதிக் கேட்டு போராடாமலும் துரோகமிழைக்கின்றன.
ஆனால், மனிதப் புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்; சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; இனப்படுகொலை குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக உலகின் பல நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். தங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை இணையங்களில் பகிர்ந்து உலக மக்களிடம் ஆதரவைத் திரட்டி வருகின்றனர். அம்மக்களுடன் இணைந்து நாமும் குரலெழுப்புவோம்.
![]()
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











