31.07.2026

NEET, EWS எதிர்ப்பு பிரச்சாரத்தை பா.ஜ.க. வழியில் ஒடுக்கும் தவெக அரசு!

மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம்

பத்திரிகைச் செய்தி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “நீட்” தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கு முறையான அனுமதி கோரி ஜூலை 18 அன்று போலீஸ் தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) திராவிடர் கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மற்றும் திராவிட மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் இந்த இரு சக்கர வாகனப் பரப்புரைக்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு மற்றும் போலீஸ் இந்த இருசக்கர வாகன பிரச்சார பயணத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. இதனால் தடையை மீறி நடத்தாமல், சட்டரீதியாக அணுகும் வகையில் இந்த பரப்புரைப் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஜூலை 30 அன்று கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் த.வெ.க. அரசுக்கு எதிராகக் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நீட் மற்றும் EWS போன்ற சமூகநீதிப் பிரச்சினைகளுக்காக நடத்தப்படும் பரப்புரையைத் தடுப்பது என்பது சமூக விரோதச் செயல் ஆகும் என்று சாடியுள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை எந்தவொரு அரசும் இதுபோன்ற சமூகநீதிப் பிரச்சாரப் பயணங்களுக்கு அனுமதி மறுத்தது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், த.வெ.க. அரசு பாசிசப் போக்குடன் செயல்படுவதாகவும், பா.ஜ.க.-வுடன் கைகோர்த்து சமூகநீதிப் போராட்டத்தை நசுக்குவதாகவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆயினும் தங்களது பாசிச எஜமானர்களின் மனங்குளிரும்படி இந்த பிரச்சாரப் பயணத்தை விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு போலீஸை குவித்து தடுத்துள்ளது. ‘கொள்கைத் தலைவரின்’ திடலில் போலீசைக் குவித்து தோழர்களின் பரப்புரை பயணத்தைத் தடுத்து, ‘கொள்கை எதிரிக்கு’ சேவை செய்து கொண்டிருக்கும் த.வெ.க. அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பாசிச கும்பலுக்கு தமிழ்நாட்டில் பாதையைச் செப்பனிட்டுக் கொடுக்கும் த.வெ.க. அரசை அம்பலப்படுத்துவதும், பாசிசக் கும்பலை உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து வீழ்த்துவதும் நம் முன் இருக்கும் கடமையாகும்.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க