5 ஆண்டுகளில் 593 மலக்குழி மரணங்கள்: உண்மையை மறைக்கும் மோடி அரசு!

“ஜனவரி 2021 முதல் இன்று வரை கழிவுநீர் மற்றும் செப்டிக் தொட்டிகளில் 593 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 332 மரணங்கள் மட்டுமே நடந்துள்ளதாக அறிக்கையாக அளித்துள்ளது. இந்த அநீதியைச் சகித்துக்கொள்ள முடியாது.” - சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்

0
Inspite of the high court banning manual scavenging, the contract labourers are still deployed to remove the clogged drains. The picture was taken at Raja Muthiah Rd, Periyamet in Chennai.22-20-2009 pic B A Raju

னவரி 2021 முதல் ஜூன் 2026 வரை அபாயகரமான கழிவுநீர் கால்வாய் மற்றும் செப்டிக் டேங்க்களை சுத்தம் செய்யும்போது 332 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை ஜூலை 21 ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய மோடி அரசு அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 58 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து ஹரியானாவில் 47, தமிழ்நாட்டில் 38 மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 37 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் 29, குஜராத்தில் 27 மற்றும் ராஜஸ்தானில் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 13 பேரும், கர்நாடகா மற்றும் பஞ்சாபில் தலா 12 பேரும் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் 9, ஆந்திரப் பிரதேசத்தில் 5, தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் 3, பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கோவா மற்றும் ஜார்க்கண்டில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

மேலும் ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறி மனிதர்களை வேலை செய்ய வைத்த அதிகாரிகள் மற்றும் முகமைகள் மீது 193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

ஆனால் இந்த தரவுகளை தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்ற “சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்” (SKA) அமைப்பு மறுத்துள்ளது. அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ராமன் மகசேசே விருது பெற்றவருமான பெஸ்வாடா வில்சன் “ஜனவரி 2021 முதல் இன்று வரை கழிவுநீர் மற்றும் செப்டிக் தொட்டிகளில் 593 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 332 மரணங்கள் மட்டுமே நடந்துள்ளதாக அறிக்கையாக அளித்துள்ளது. இந்த அநீதியைச் சகித்துக்கொள்ள முடியாது. பிரதமர் இந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மோடி அரசை அம்பலப்படுத்தியுள்ளார்.

மேலும் மரணங்களைக் குறைப்பது குறித்த கவலைகளுக்குத் தீர்வு காண பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டங்களை நடத்தியுள்ளதாகக் கூறியுள்ள எஸ்.கே.ஏ அமைப்பு, “மரணங்களைத் தடுப்பதற்குப் பதிலாக, உண்மையை மறைப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துவது தேசிய அளவிலான அவமானம் மற்றும் தீண்டாமையின் ஒரு வடிவம்” என்று சாடியுள்ளது. இது குறித்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவ்வமைப்பு கோரியுள்ளது.


படிக்க: 6 மாதங்களில் 101 மலக்குழி மரணங்கள்: மோடி அரசே குற்றவாளி!


குறிப்பாக கையால் மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 6 முதல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தை மீறினால் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இச்சட்டத்தில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் (manual scavengers) குறித்த வரையறையில் நேரடியாக மனித கழிவுகளை அகற்றுபவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். செப்டிக் டேங்க் மற்றும் கழிவு நீர் கால்வாய்களைச் சுத்தம் செய்பவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2023-24 ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளுவதை ஒழித்து, இயந்திரங்கள் மூலம் துப்புரவு பணிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நமஸ்தே (Namaste) திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களுக்குத் தேவையான உபகரணங்களும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் இத்திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்து மலக்குழி மரணங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக ஒன்றிய அரசின் தகவல் வெளியான நான்கு நாட்களில் நொய்டாவில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியின் போது இருவர் உயிரிழந்துள்ளனர். டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவில் செக்டார் 150-இல் எல்டிகோ குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்குள்ள செப்டிக் டேங்கில் ஜூலை 25 ஆம் தேதி அன்று இரவு சசிகாந்த் சர்மா என்பவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது தொட்டிக்குள் இருந்த மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு கொடிய நச்சு வாயுக்கள் தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரைக் காப்பாற்றச் சென்ற பாதுகாப்பு ஊழியர் ஆகாஷூம் (22) மயக்கமடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கழிவுநீர் கால்வாய் மற்றும் செப்டிக்டேங்க் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் அதிகளவில் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களும், உயிரிழந்தால் உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இதிலும் கொடூரமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்து மீண்டும் ஒருமுறை அவர்களைக் கொன்றுள்ளது பாசிச மோடி அரசு.

நாடு முழுவதும் கழிவு நீர் கால்வாய் மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளர்களில் 80 சதவீதம் பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். ‘விக்சித் பாரத்’ என்று கூவிக் கொண்டிருக்கும் பாசிச மோடி ஆட்சியில் கழிவுகளை இயந்திரங்கள் இல்லாமல் அகற்றும் மோசமான நிலையில்தான் தூய்மைப் பணியாளர்கள் இருத்தவைக்கப் பட்டுள்ளனர்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க