“என் தந்தையை போலீசு வேலையிலிருந்து விலகுமாறு கூறிவிட்டேன்” – யு.பி.எஸ்.சி. மாணவி | டெல்லி போராட்டக்கள அனுபவங்கள்

இன்று நான் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். சீருடையில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக மாறி குழந்தைகளை அடிக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட வேலை வேண்டாம். என் தந்தையும் போலீசுதுறையில்தான் இருக்கிறார். இன்றே அவரையும் அந்த வேலையை விட்டு விலகுமாறு கூறிவிட்டேன்... - யு.பி.எஸ்.சி. மாணவி அல்ஃபியா

0
இடது: மாணவி அல்ஃபியா | வலது: இளைஞர் கல்லு

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் மாணவர்கள்-இளைஞர்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தின் அங்கமாகக் கடந்த ஜூலை 20 அன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணி நடத்தினர். இதனைக் கண்டு பீதியுற்ற பாசிச மோடி அரசு, துணை ராணுவப் படை மற்றும் டெல்லி போலீசை கொண்டு மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர்புகைக் குண்டு வீச்சு, பெல்லட் துப்பாக்கிச்சூடு எனக் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலில் நூற்றுக்காணக்கான மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் மட்டும் 250-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் கை, கால்கள், கழுத்து உடைக்கப்பட்டுள்ளன. போலீசின் கொடூரத் தாக்குதலால் சாட்சி என்ற மாணவி தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.

நியாயமான முழக்கங்களை முன்வைத்து அமைதி வழியில் போராடிய இம்மாணவர்கள் மீது மோடி அரசு நடத்திய கொடூரத் தாக்குதலானது, இந்த அநீதியான கட்டமைப்பின் உண்மை முகத்தை அம்மாணவர்களிடத்தில் தோலுரித்துக் காட்டியுள்ளது. தேர்வு முறைகேடுகள், ஒன்றியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் மீதான மாணவர்களின் கோபம் மோடி அரசின் மீதும் இக்கட்டமைப்பின் மீதும் திரும்பியுள்ளது. மாணவர்களின் சமூக அக்கறையும் அரசியல் உணர்வும் வளர்ந்துள்ளது. இதனை மாணவர்களின் வலிமிகுந்த கள அனுபவங்கள் காட்டுகின்றன.

ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் கட்டுப்போட்ட கால்களுடன் சிகிச்சை பெற்று வரும் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜை சேர்ந்த அல்ஃபியா கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக நான் யு.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராகி வந்தேன். ஆனால், இன்று எனது கனவுகள் தகர்ந்துவிட்டன.. இப்போது வழக்கறிஞராக விரும்புகிறேன். ஆனால், ஒருபோதும் சீருடை அணிய மாட்டேன். “லத்தியால் அடிக்காதீர்கள்” என்று நான் கத்திக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து என் தாயையும் தங்கையையும் அசிங்கமாகத் திட்டி அடித்து நொறுக்கினார்கள். என் தலையிலும் காலிலும் காயங்கள் உள்ளன.

“என் சகோதரன் நீட் தேர்வுக்குப் படித்து வருகிறான். நானும் ஏதோ ஒரு நிலைக்கு வர வேண்டியவள்.. ஆனால் இன்று நான் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். சீருடையில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக மாறி குழந்தைகளை அடிக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட வேலை வேண்டாம். என் தந்தையும் போலீசுதுறையில்தான் இருக்கிறார். இன்றே அவரையும் அந்த வேலையை விட்டு விலகுமாறு கூறிவிட்டேன். நான் இறந்துவிட்டாலும் மகிழ்ச்சியாக இருங்கள், வருத்தப்படாதீர்கள் என்று வீட்டில் கூறிவிட்டேன்.. இன்றைய நாளை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்” என்று உருக்கமாகவும் உறுதியுடனும் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூரைச் சேர்ந்த 35 வயதான கல்லு கூறுகையில் “நாங்கள் மூன்று நண்பர்கள் இரயிலில் வந்தோம். இப்போது யார் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. என் ஃபோனில் சார்ஜ் கூட இல்லை. யாரோ ஒருவர்தான் என்னை மருத்துவமனையில் சேர்த்தார். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறேன். முன்பு பா.ஜ.க-விற்குதான் வாக்களித்தோம். ஆனால், இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வால் சலிப்படைந்துவிட்டேன். கொரோனா காலத்தில் என் குடும்பத்தில் பலரை இழந்துவிட்டேன். இந்த ஆட்சி மாற வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, மாணவர்கள் – இளைஞர்களின் அரசியல் புரிதலும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வும் போராட்ட உணர்வும் அதிகரித்துள்ளதை உணர்ந்துள்ள பாசிச மோடி அரசு மாணவர்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. நீட் முறைகேடுகளை விசாரிப்பதற்கு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்; தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவர் என்று அறிவித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறது.

ஆனால், பாசிச கும்பலின் நயவஞ்சகத்தை உணர்ந்துள்ள மாணவர்கள் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று உறுதியுடன் போராடி வருகின்றனர். இப்போராட்டமானது மாணவர்களின் அரசியல் உணர்வை மென்மேலும் வளர்த்தெடுத்து பாசிச பா.ஜ.க. கும்பலை விரட்டியடிப்பதை நோக்கி முன்னேறும்!

நன்றி: நியூஸ் லாண்டரி


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க