நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கதிரவனுக்கு நினைவேந்தல் கூட்டங்கள் | தூத்துக்குடி, நெல்லை

திருநெல்வேலி மாவட்ட மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் லூர்து நாதன் சிலை அருகே தோழர் கதிரவன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. மௌன அஞ்சலியுடன் தொடங்கப்பட்ட கூட்டம் இடியென இறங்கிய தோழர்களின் முழக்கத்துடன் அடுத்த அடி எடுத்து வைத்தது. தோழர்கள் முழங்கிய முழக்கம் கதிரவன் தோழரின் அரசியல் பங்களிப்பை உரக்கச் சொன்னது‌.

அன்பார்ந்த தோழர்களே..

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் முதல் பொதுச் செயலாளரும், நக்சல்பாரி புரட்சியாளருமான தோழர் கதிரவன் அவர்கள் ஜூலை 13 அன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி நிகழ்ச்சி ஜூலை 15 அன்று மதுரையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் தோழர் கதிரவன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்டது. அந்தவகையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கதிரவன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், செந்தியம்பலம் பகுதியில் 18.07.2026 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. தோழர் கதிரவனின் மார்க்சிய அரசியல் செயற்பாடுகள், அவரின் பொது வாழ்கை, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றி மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் தோழர் படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தி கூட்டம் நிறைவு பெற்றது. இதில் தோழர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

சாயர்புரம், தூத்துக்குடி.

19.07.2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில் மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக தோழர் கதிரவன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டப் பொருளாளர் தோழர் சந்துரு தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் பகுதி மூத்தத் தோழர்கள் கலந்துகொண்டனர். இதில் பேசிய மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா, தோழர் கதிரவன் உள்ளிட்ட நக்சல்பாரி புரட்சியாளர்களின் வரலாற்றை எடுத்துரைத்தார். தற்போதைய காலச் சூழ்நிலையில் தோழர் விட்டு சென்ற புரட்சிகர பணியை நம்முடைய தோள்களில் சுமந்துகொண்டு பயணத்தை தொடர்வோம், மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க தொடர்ந்து போராடுவோம் என்று கூறி தனது உரையை முடித்தார். அதன் பின் தோழர் கதிரவன் அவர்களின் படத்திற்கு மக்கள் அதிகாரக் கழக தோழர்கள் ஒவ்வொருவராக மலர் தூவி சிவப்பஞ்சலி செலுத்தினர்.

விளாத்திக்குளம், தூத்துக்குடி.

அன்று (19.07.2026) மாலை தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் தோழர் கதிரவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அதில் பகுதி சிறுவர்கள், பொதுமக்கள், ஜனநாயக சக்திகள், தோழர்கள் கலந்துகொண்டு தோழர் கதிரவன் படத்திற்கு மலர் தூவி சிவப்பஞ்சலி செலுத்தினர். அதன் பின் தோழர் தாளமுத்து செல்வா மறைந்த தோழர் கதிரவன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் ஆற்றிய அரசியல் பணிகளையும், முன்னெடுத்த மார்க்சிய அரசியலையும் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

தாளமுத்து நகர், தூத்துக்குடி.

அதைப்போல் திருநெல்வேலி மாவட்ட மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் லூர்து நாதன் சிலை அருகே தோழர் கதிரவன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. மௌன அஞ்சலியுடன் தொடங்கப்பட்ட கூட்டம் இடியென இறங்கிய தோழர்களின் முழக்கத்துடன் அடுத்த அடி எடுத்து வைத்தது. தோழர்கள் முழங்கிய முழக்கம் கதிரவன் தோழரின் அரசியல் பங்களிப்பை உரக்கச் சொன்னது‌. அதை உள்வாங்கி கொண்டு மலர் அஞ்சலி செலுத்திய ஜனநாயக சக்திகள்,தோழர் கதிரவனின் நினைவை நெஞ்சில் ஏந்தி அவர் வழி நடப்போம் என சூளுரைத்தனர். ஒரு நக்சல்பாரி புரட்சியாளர் தன் வாழ்நாளுக்கு பிறகும் தான் கொண்ட லட்சியங்களை இந்த மண்ணில் விதைத்து விட்டு செல்கிறார் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்தது.

லூர்து நாதன் சிலை, திருநெல்வேலி.

மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணித் தோழர் கின்ஷன் ஆற்றிய உரையில் தோழர் கதிரவன் அமைப்பிற்கு வந்தது, மக்களுக்கான பணிகளை அவர் முன்னெடுத்தது, தான் வாழ்ந்த காலகட்டம், சூழலை உணர்ந்து தன்னை புரட்சிகர பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டது ஆகிவை குறித்து விளக்கிப் பேசினார். தோழர் கதிரவனின் சமக்காலத்தவரான தமிழ்த் தேசிய உழவர் உழைப்பாளர் விடுதலைக் கழகத்தின் முதன்மை ஊழியரான தோழர் இறையமுதன், “தோழர் கதிரவன் விட்டுச் சென்ற பணியை நான் தொடர்வேன்” என்று சூளுரைத்தார்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் தி.மு.க., வி.சி.க., திராவிட தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய உழவர் உழைப்பாளர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு இளையோர் விடுதலைக் கழகம், தமிழர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள், நண்பர்கள், உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர்.

நக்சல்பாரிகள் என்றால் காட்டிலே ஆயுதம் ஏந்தி அலைந்து திரிபவர்கள் என்ற அவதூறுகளை முறியடித்து, இடது சாகசவாதத்தை முறித்துக்கொண்டு, மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் மக்கள் திரள் வழியை உயர்த்திப்பிடித்தன. அதில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர் தோழர் கதிரவன்.

மறுகாலனியாக்கத்தின் கீழ் கலை, இலக்கியம், பண்பாடு, விவசாயம், உற்பத்தி, பொருளாதாரம் உள்ளிட்டு மனிதகுலமே சிதைக்கப்படும் காலத்தில் தனது கடமையை உணர்ந்து முன்னின்று பணியாற்றியவர் தோழர் கதிரவன்.

இன்று பாசிசம் அரங்கேறிக் கொண்டிருக்கும் சூழலில், பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைமைக்கும் போராட்டத்தில், தோழர் கதிரவனின் நினைவை நெஞ்சில் ஏந்தி களமிறங்குவோம் என்கிற தோழர்கள், ஜனநாயக சக்திகளின் முழக்க வார்த்தைகள் அப்பகுதியில் எதிரொலித்தது. அந்த உறுதியோடு கூட்டம் நிறைவுற்றது.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க