டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி: தடுத்து நிறுத்திய ஹரியானா போலீசு!

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் எனும் அமெரிக்க அடிமை சாசனம் அமலானால் இந்தியா முற்றிலுமாக அமெரிக்காவின் காலனியாவதைத் தடுக்க முடியாது. இதற்கு எதிராகவே விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், ஒன்றிய – மாநில பாசிச பா.ஜ.க. அரசுகள் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கி தனது அமெரிக்க அடிமைத்தனத்தைக் காட்டி வருகின்றன.

0

ந்திய சந்தையை அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காகத் திறந்துவிடுகின்ற இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் பாசிச மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்த அமெரிக்க அடிமை ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வலியுறுத்தி, ஜூலை 21 அன்று டெல்லியில் உள்ள கிசான் காட்டில் ஒரு நாள் மகாபஞ்சாயத்து நடைபெறும் என “தேஷ் பச்சாவோ மோர்ச்சா” (பல்வேறு மாநில விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு) அறிவித்திருந்தது.

இக்கூட்டமைப்பின் கீழ் பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹரியானாவில் இருந்தும் திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், தங்கள் அமைப்புகளின் கொடிகளை ஏந்தியபடி ஷம்பு எல்லைக்கு வந்தனர். அங்கிருந்து டெல்லி நோக்கிப் பேரணியாகப் புறப்படத் தயாராயினர்.

ஆனால், விவசாயிகளைக் கண்டு அஞ்சிய ஹரியானா பா.ஜ.க அரசு ஹரியானா – பஞ்சாப் எல்லைப் பகுதிகளான ஷம்பு – அம்பாலா மற்றும் கானெளரி ஜூன்ட் பகுதியில் கான்கிரீட் தடுப்புகளை அமைத்து விவசாயிகளைத் தடுத்தது. விவசாயிகளின் வாகன அணிவகுப்பு முன்னேறிச் செல்வதைத் தடுப்பதற்காக காகர் ஆற்றின் பாலத்திலும் முள்வேலி தடுப்புகளை அமைத்தது. தடைகளை மீறி விவசாயிகள் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அதிகளவிலான போலீசு படையினரை பா.ஜ.க. அரசு குவித்தது.

இதுகுறித்துப் பேசிய விவசாயத் தலைவரும் தேஷ் பச்சாவோ மோர்ச்சா அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சர்வான் சிங் பாந்தர், “அமைதியான முறையில் டெல்லி நோக்கிப் பேரணியாகச் செல்லும் ஜனநாயக உரிமையை ஹரியானா பா.ஜ.க. அரசு தடுப்புகளை அமைத்துத் தடுத்து நிறுத்துகிறது” எனக் குற்றஞ்சாட்டினார். “ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியின் உண்மை முகத்தை இந்நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி விவசாயிகள் போராட்டக் களத்தைச் சென்றடைவதை பா.ஜ.க அரசு தடுத்து வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஜூலை 20 அன்று பேரணிக்காக டெல்லி சென்று கொண்டிருந்த பாரதிய கிசான் யூனியன் (BKU-Charuni) தலைவர் குர்னம் சிங் சாருனியை ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் உள்ள பெஹோவா என்ற இடத்தில் வாகனத்தை மறித்து போலீசு கைது செய்துள்ளது. இந்த அமைப்பும் தேஷ் பச்சாவோ மோர்ச்சா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

​அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் பிரின்ஸ் வாரைச்ச கூறுகையில், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதைத் தடுப்பதற்காக ஹரியானா போலீசு பல தொண்டர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று நாங்கள் சுட்டிக்காட்டும் பிரச்சினைகளை அரசு கண்டுகொள்ளாமல் விட்டால், எங்களின் எதிர்ப்பையும் மீறி, இந்த ஒப்பந்தத்தை அரசு வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயன்றால் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.


படிக்க: பஞ்சாப்: அமெரிக்க அடிமை ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்!


இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் எனும் அமெரிக்க அடிமை சாசனம் அமலானால் இந்தியா முற்றிலுமாக அமெரிக்காவின் காலனியாவதைத் தடுக்க முடியாது. இதற்கு எதிராகவே விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், ஒன்றிய – மாநில பாசிச பா.ஜ.க. அரசுகள் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கி தனது அமெரிக்க அடிமைத்தனத்தைக் காட்டி வருகின்றன. எனவே, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

மேலும், நீட் உள்ளிட்ட தேர்வு மோசடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஏற்கெனவே டெல்லியில் மாணவர்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டமே பாசிச கும்பலுக்குப் பீதியூட்டியுள்ள நிலையில், விவசாயிகளும் டெல்லியை நோக்கி அணிதிரள்வதை எண்ணி மோடி அரசு தொடைநடுங்குகிறது. ஆனால், மாணவர்கள் – விவசாயிகள் போராட்டம் பாசிச பா.ஜ.க-வை வீழ்த்துவதை நோக்கி முன்னேறுவதை பாசிச கும்பலால் தடுக்க முடியாது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க