குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் “கிசான் அதிகார் யாத்திரா” என்னும் பெயரில் அம்மாநில பா.ஜ.க. அரசை எதிர்த்து ஜூன் 15 அன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியுள்ளனர். இப்பேரணியில் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பேரணியானது அகமதாபாத்தின் ஷாந்திப்புரா சௌக்டியிலிருந்து காந்திநகர் வரை நடைபெற்றது. இந்தப் பேரணியில் குஜராத் காங்கிரஸ் மற்றும் பல்வேறு விவசாய அமைப்பினர் கலந்து கொண்டனர்.
மின்சார பரிமாற்ற கட்டமைப்புகளுக்காக, விவசாய நிலங்கள் உரிய ஆலோசனையோ அல்லது போதுமான இழப்பீடோ இன்றி கையகப்படுத்தப்பட்டும், மின்கம்பங்கள் அமைக்கப்படும்போது சேதமடையும் விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டும் வருவதை எதிர்த்து இப்பேரணி – போராட்டமானது நடந்துள்ளது.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் (Adani Energy Solutions) போன்ற தனியார் மின்சார நிறுவனங்கள், நில உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெறாமல் விவசாய நிலங்களில் மின்கம்பங்களை நிறுவுகின்றன. ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்குமிக்க விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது, சாதாரண விவசாயிகளுக்கு உண்மையான மதிப்பில் சிறு பகுதியை மட்டும் வழங்குவது, போலீஸ் பாதுகாப்புடன் இந்த கையகப்படுத்தலை நடத்துவது, எதிர்த்துக் கேட்பவர்களை மிரட்டி நிலத்தைப் பறிப்பது போன்ற அப்பட்டமான பாசிச நடவடிக்கைகளை குஜராத் மாநில அரசு செய்து வருகிறது.
குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா, “தேர்தலில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று விவசாயிகள் கட்டாயமாக மின்கம்பங்கள் நிறுவப்படுதல், பயிர் சேதம் மற்றும் போதிய இழப்பீடு இல்லாமை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இவற்றுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தால் போலீசின் நடவடிக்கைகளையும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்” என்று கூறினார்.
மேலும், “விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நிலம் தொடர்பானவை மட்டுமல்ல என்றும், உரத்தட்டுப்பாடு, போலி விதைகள் விற்பனை, விலைவாசி உயர்வு, தவறான நில அளவீடுகள் மற்றும் போதிய பாசன வசதிகள் இல்லாமை போன்ற பல சிக்கல்களையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, விவசாயிகளின் நிலங்களைக் கட்டாயமாகப் பறிக்க முயல்கிறது ஆளும் பாஜக அரசு” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தங்களின் போராட்டம் விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, மாநிலத்தில் விவசாயத்தின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்கானது என்று தெரிவித்தனர்.
மேலும், முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலை (MSP) முழுமையாக அமல்படுத்துதல், நில உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மின்கம்பங்களை அமைக்கும் போது ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்குப் பின்னர் காந்திநகரில் விவசாயிகள் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இப்பேரணிக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும், பல விவசாய அமைப்புகளும் ஆதரவளித்து வருகின்றன.
விவசாயிகளின் நில கையகப்படுத்தலில் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Power Grid Corporation of India ) ஆகிய நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இவ்வாறு நேரடியாக கார்ப்பரேட் சேவையைச் செய்து வரும் பாசிச பா.ஜ.க. அரசின் கொடூர ஆட்சிக்கு எதிராகப் பல திசைகளிலிருந்தும் மக்கள் போராடி வருகின்றனர்.
விவசாயிகள் தன் முனைப்பில் நடத்துகின்ற இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆதரவு அளிப்பதும், அவை ஆளுங்கட்சியாக ஆகும் போது தங்களுடைய நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படவும் செய்கின்றன. இந்த சந்தர்ப்பவாதப் போக்குகளுக்கு எதிராக அக்கட்சிகளை நிர்ப்பந்தித்து மக்கள் போராட வேண்டும்.
பாசிச பா.ஜ.க. 30 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்திலேயே விவசாயிகளால் இந்த அளவுக்கு வீரியமாக எதிர்த்துப் போராட முடிகிறது என்றால், தமிழ்நாட்டின் விவசாயிகள், விவசாய சங்கங்கள், மக்களுக்காகக் குரல் கொடுக்கின்ற ஜனநாயக அமைப்புகள் இப்பிரச்சினை குறித்து தீவிரமாகப் பரிசீலித்து விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டியமைக்க வேண்டும். விவசாயிகளின் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
![]()
ஆண்ட்ரே
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











