தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாட்டில் 2022-23 கல்வியாண்டு முதல் துளசி மகளிர் சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற இக்கல்லூரிக்கு ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்புகளுக்கு முறையாக அரசு ஒதுக்கீடு செய்த இடங்கள் 39 ஆகும்; இதனுடன் கல்லூரி மேலாண்மை இடங்கள் 21-ஐ சேர்த்து மொத்தம் 60 இடங்கள் இக்கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், கடந்த 2025-26 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் அனுமதித்திருந்த எண்ணிக்கையை விட கூடுதலாக 36 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் முறைகேடாக சேர்த்துள்ளது. இதனால், கடந்த மே மாதம் நடைபெற்ற பருவத்தேர்வில் (Semester) கூடுதலாக சேர்க்கப்பட்ட 36 மாணவிகளுக்கு பதிவெண் வழங்கப்படாததால் அம்மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கல்லூரி நிர்வாகமோ, “உங்களுக்கான பதிவெண் கிடைத்துவிடும். பல்கலைக்கழகத்திடம் இது தொடர்பாக பேசிவருகிறோம். நீங்கள் அனைவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவீர்கள்.” என்று நைச்சியமாகப் பேசி மாணவிகளை ஏமாற்றி வந்தது.
இதே போன்று கன்னியாகுமரி மாவட்டம் முகில் தனியார் சட்டக் கல்லூரியிலும் மே மாதத்தில் 78 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல், கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாணவர்கள் முறையிட்டும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஜூலை 17 அன்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தியில் (C.NO2093/Regr/Acad/A4/2026), பல்கலைக்கழக ஒழுங்குமுறை விதிகள் மீறப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக சிண்டிகேட் (Syndicate) தீர்மானத்தின்படி தூத்துக்குடி மாவட்ட துளசி மகளிர் சட்டக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்ட முகில் சட்டக் கல்லூரி, தென்காசி மாவட்ட எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி ஆகிய மூன்று தனியார் சட்டக் கல்லூரிகளுக்கான இணைப்பு (Affiliation) அங்கீகாரம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினால் துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களோடு ஒட்டுமொத்தக் கல்லூரி மாணவர்களின் கல்வியும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனையடுத்து மாணவிகள் அனைவரும் சேர்ந்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி மட்டுமின்றி கலை, அறிவியல், நர்சிங் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. ஆனால், அங்கு போதுமான கட்டட வசதி இல்லாததால் அருகிலுள்ள இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி வளாகக் கட்டடத்தில்தான் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி நுழைவுவாயிலின் முன்பாக சட்டக் கல்லூரி மாணவிகள் இரவும் பகலுமாக அமைதியான முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், கல்வி உரிமைக்காக போராடும் மாணவிகளுக்கு இன்பன்ட் ஜீசஸ் கல்லூரி நிர்வாகம் அனைத்து வகையான நெருக்கடிகளையும் இடையுறுகளையும் ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு பூச்சி, பாம்புகளின் நடமாட்டம் நிறைந்த மலையருகே, காட்டுப்பகுதியில் அடர்ந்த இருளில் மாணவிகள் போராடும் வேளையில் நுழைவுவாயிலில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் அணைத்து, துளியும் ஈவிரக்கமின்றி மிருகத்தனத்தை வெளிப்படுத்துகிறது கல்லூரி நிர்வாகம்.
படிக்க: கன்னியாகுமரி முகில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
மேலும், துளசி மகளிர் சட்டக் கல்லூரியானது ஏப்ரல் 2025 முதல் வேறு நிர்வாகத்திடம் கைமாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிர்வாக மாற்றத்திற்கு பிறகு கல்லூரி நிர்வாகம் முற்றிலும் மோசமடைந்துள்ளதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர். நிர்வாகத்தில் எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லை எனவும், மாணவிகளை இழிவுபடுத்தியும் உதாசீனப்படுத்தியும் நிர்வாகம் நடந்துகொள்வதாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, “மோசடியான இந்த நிர்வாகம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். பல்கலைக்கழகமே நேரடியாக நிர்வகிக்க (Undertaking) வேண்டும்” என்று மாணவிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
ஆனால், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகளோ மாணவர் நலனில் சிறிதும் அக்கறையும் பொறுப்புமற்றதாக உள்ளது. தனது அதிகாரத்தின் கீழ் செயல்படும் கல்லூரியின் முறைகேடுகளை தொடக்கத்திலேயே தடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு தற்போது ஒட்டுமொத்த மாணவர்களையும் பலிகடாவாக்கியுள்ளது.
பல்கலைக்கழக அனுமதியைத் தாண்டி கூடுதல் எண்ணிக்கையில் மாணவிகளை இணைத்தது, வாடகை கட்டடத்தில் இயங்கியது யாவும் பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கே வரவில்லை என்பது நம்பத் தகுந்ததல்ல. ஆகவே, கல்லூரியின் அனைத்து முறைகேடுகளுக்கும் பல்கைக்கழகமே தார்மீக பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கு பல்கலைக்கழகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
- முறைகேட்டில் ஈடுபட்ட துளசி சட்டக் கல்லூரி உள்ளிட்ட மூன்று தனியார் சட்டக் கல்லூரி நிர்வாகத்தினர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பதிவெண் வழங்கி, விதிவிலக்காக சிறப்புத் தேர்வு நடத்தி தொடர்ந்து கல்வி பயில ஏற்பாடு செய்ய வேண்டும்.
- மூன்று தனியார் கல்லூரிகளின் நிர்வாகத்தையும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமே நேரடியாகக் கல்லூரிகளை நிர்வகிக்க வேண்டும்.
- அனைத்து முறைகேடுகளுக்கும் பல்கலைக்கழகமும் சட்டக்கல்வி இயக்ககமும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
துளசி சட்டக் கல்லூரி மாணவிகள் தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராட உள்ளதாக உறுதிபட தெரிவிக்கின்றனர். சட்டம் பயிலும் மாணவர்களுக்கே பாதுகாப்பற்ற கல்விச்சூழல் நிலவுவது என்பது நாட்டிற்கே வெட்கக்கேடானதாகும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக குரல் கொடுத்து இந்தப் போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டியது சட்ட மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்கள், ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
எழில்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











