தலித் கிறிஸ்தவர்களின் பட்டியல் சாதி அந்தஸ்தைப் பறிக்காதே! | துண்டறிக்கை | ம.அ.க.

“சாதியிலிருந்து வெளியேறு; அதே நேரத்தில் உன் சமூகநீதி உரிமையையும் விட்டுவிட்டு வெளியேறு!” என்பதுதான் இந்தச் சட்டமும், தீர்ப்பும் நிலைநாட்டும் மனுநீதி! இதை அனுமதித்தால் சமூகநீதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மீது பாசிச கும்பல் நடத்திவரும்  தாக்குதல்களுக்கு அது மேலும் வலுசேர்க்கும்.

சாதியை மறுத்ததற்குத் தண்டனையா?
தலித் கிறிஸ்தவர்களின் பட்டியல் சாதி அந்தஸ்தைப் பறிக்காதே!

மார்ச் 24, 2026 அன்று உச்சநீதிமன்றம், தலித் ஒருவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருந்தால் அவர் பட்டியல் சாதி அந்தஸ்தைக் கோர முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

தலைமுறை தலைமுறையாகப் பார்ப்பனியம் உருவாக்கி வைத்திருக்கும் சாதிய ஒடுக்குமுறை, ஒரு நபர் மதம் மாறியவுடன் மறைந்துவிடுவதில்லை. ஆனால், மதம் மாறியதைக் காரணமாகக் காட்டி பட்டியல் சாதி அந்தஸ்தையும் அதனுடன் தொடர்புடைய சமூகநீதி உரிமைகளையும் மறுக்கும் அநீதியை இந்தத் தீர்ப்பு பாதுகாக்கிறது.

மதம் மாறியதால் சாதிய ஒடுக்குமுறை மறைந்துவிட்டதாகக் கருதும் இந்தத் தீர்ப்பு, ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க. பாசிச கும்பலின் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலுக்கு ஏதுவாக, மத அடிப்படையிலான இந்தப் பாகுபாட்டைத் தொடர்ந்து பாதுகாக்கும் ‘மனுநீதியை’ நிலைநாட்டுகிறது.

சாதியால் அவமானப்படுத்தப்பட்டு, “தீண்டத்தகாதவன்” என்று இழிவுபடுத்தப்பட்டு, நிலம், கல்வி, வேலை, மரியாதை மறுக்கப்பட்ட மக்கள், இந்தச் சாதிய இழிவே வேண்டாம்!” என்று இந்து மதத்தை விட்டு வெளியேறி மதம் மாறுகிறார்கள்.

ஆனால், மதம் மாறினால் வரலாறும் மாறிவிடுமா?

  • தலைமுறை தலைமுறையான நிலமின்மை மறைந்துவிடுமா?
  • கல்வி மறுக்கப்பட்ட வரலாறு அழிந்துவிடுமா?
  • சாதிய இழிவும் சமூகப் பாகுபாடும் ஒரே நாளில் முடிந்துவிடுமா?

ஒருபோதும் இல்லை!

சாதியை அவர்கள் விட விரும்பினாலும்,
சாதியச் சமூகம் அவர்களை விட்டுவிடவில்லை!

  • அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல — சாதியால் தாழ்த்தப்பட்டவர்கள்!
  • இடஒதுக்கீடு என்பது சாதிய இழிவை ஏற்றுக்கொண்டதற்கான சலுகை அல்ல!
  • அது நூற்றாண்டுகளாக இழைக்கப்பட்ட சாதிய அநீதிக்கான சமூகநீதி உரிமை!

மதத்தின் பெயரால் ஏன் இந்த உரிமைப் பறிப்பு?

1950 பட்டியல் சாதி ஆணை முதலில் இந்துக்களுக்கு மட்டுமே பட்டியல் சாதி அந்தஸ்தை வரையறுத்தது. பின்னர், 1956-ல் சீக்கியர்களுக்கும், 1990-ல் பௌத்தர்களுக்கும் அந்த உரிமை விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் அதே வரலாற்று ரீதியான சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒருவர் கிறிஸ்தவத்தைத் தழுவியவுடன் அவரது பட்டியல் சாதி அந்தஸ்து மறுக்கப்படுகிறது.

1950 முதல் நீடிக்கும் மத அடிப்படையிலான இந்தப் பாகுபாட்டை ஒழிக்க மறுக்கும் பாசிச மோடி அரசோ, “மதம் மாறிவிட்டாய்; இனி உனக்குப் பட்டியல் சாதி அந்தஸ்து இல்லை!” என்கிறது.

மதம் மாறியதால் சாதிய ஒடுக்குமுறை மறையவில்லை;
ஆனால் சட்டமோ அவரது சமூகநீதி உரிமையைப் பறிக்கிறது!

இந்தியாவில் பல்வேறு மதங்களையும் பண்பாடுகளையும் இந்துத்துவத்தின் கீழ் அடக்கி, ஒரே “இந்து தேசத்தை” நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க. பாசிச கும்பல், சீக்கிய–பௌத்தத்தை இந்துத்துவத்திற்குள் உட்கிரகிக்கத் துடிப்பததோடு, கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைத்து வருகிறது.

தாய் மதத்திற்குத் திரும்புதல்” — “கர்வாப்சி” என்ற பெயரில் மதமாற்ற உரிமையை மறுப்பதும், கிறிஸ்தவர்கள்–இஸ்லாமியர்கள் மீது வெறுப்பையும் மதவெறித் தாக்குதல்களையும் தூண்டுவதும் இந்தப் பாசிச கும்பல்தான்.

இந்தப் பின்னணியில், மதத்தை அடிப்படையாகக் கொண்டு தலித் மக்களில் ஒரு பகுதியினரின் பட்டியல் சாதி உரிமையை மறுக்கும் சட்டநிலை, இந்துத்துவ அரசியலின் சமூகப் பிளவுக்கு உறுதுணையாகவே செயல்படுகிறது. ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற அரசியலமைப்புச் சொல்லாடலையே இந்த மதப் பாகுபாடு கேலிக்கூத்தாக்குகிறது.

இந்த மதப் பாகுபாட்டின் நடைமுறை என்ன?

  • அரசு ஏற்றுக்கொண்ட மத வரம்புக்குள் இருந்தால் பட்டியல் சாதி அந்தஸ்து!
  • கிறிஸ்தவத்தைத் தழுவினால் பட்டியல் சாதி அந்தஸ்து பறிப்பு!
  • சாதிய இழிவிலிருந்து வெளியேற முயன்றால் சமூகநீதி உரிமையிலிருந்தும் வெளியேற்றம்!

சாதியிலிருந்து வெளியேறு;
அதே நேரத்தில் உன் சமூகநீதி உரிமையையும் விட்டுவிட்டு வெளியேறு!” என்பதுதான் இந்தச் சட்டமும், தீர்ப்பும் நிலைநாட்டும் மனுநீதி!

தலித் மக்களில் ஒரு பகுதியினரை மதத்தின் பெயரால் பட்டியல் சாதி உரிமைக்கு வெளியே தள்ளுவது என்பது அந்த மக்களைப் பிளவுபடுத்துவதாகும்.

இதை அனுமதித்தால் சமூகநீதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மீது பாசிச கும்பல் நடத்திவரும்  தாக்குதல்களுக்கு அது மேலும் வலுசேர்க்கும். எனவே,

  • 1950 பட்டியல் சாதி ஆணையின் மதத் தடையை நீக்க நாடாளுமன்றத்தில் உடனடியாகச் சட்டம் இயற்று!
  • தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்கு!
  • தலித் மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தாதே!
  • மதம் மாறியதற்காக சமூகநீதி உரிமையைப் பறிக்காதே!
    என அனைவரும் ஒன்றுபட்டு முழங்குவோம்.

தலித் கிறிஸ்தவர்களின் பட்டியல் சாதி உரிமைப் போராட்டத்தை ஆதரிப்போம்!

ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க. பாசிச கும்பலின் பார்ப்பனியச் சாதியாதிக்கத்தை முறியடிப்போம்!

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை வலுப்படுத்துவோம்!

மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்கள்.
93853 53605

பார்க்க: வினவு!
படிக்க: புதிய ஜனநாயகம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க