13.08.2026

திருப்பத்தூர் – ஆம்பூர்: உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை
சர்வாதிகாரமாக அகற்ற எத்தனிக்கும் நீர்வளத்துறை

பத்திரிகைச் செய்தி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட, பாலாற்றுப் படுகை அருகில் உள்ள கான்கர்தக்கியா பின்புறம் உள்ள பகுதிகள், சுண்ணாம்புக்காளை பகுதிகள் மற்றும் மளிகைதோப்பு, ஆசாத் நகர், ரத்னா நகர் பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுமார் 25,000 மக்கள் இங்கு உள்ளனர்.

கடந்த 07.08.2026 அன்று, நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் ஜா.பவித்ரன் பெயரில் இப்பகுதி மக்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அம்மக்கள் நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பதாகக் கூறியும், இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற இருபத்தொரு நாட்களுக்குள் கூறப்பட்டுள்ள இடங்களில் உள்ள வீடுகள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற வேண்டும் என்றும், அதனைச் சொந்த செலவில் மக்கள் அகற்ற வேண்டும் என்றும்  அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அப்பகுதியில் வசிக்கும் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேற்கண்ட பகுதி மக்கள் மூன்று தலைமுறைகளாக (60 ஆண்டுகளுக்கும் மேலாக) அங்கு வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தினக்கூலித் தொழிலாளர்கள். ஆம்பூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் அன்றாடக் கூலிகளாகப் பணி செய்து வருபவர்கள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். இவர்களது குழந்தைகள் இப்பகுதிக்கு அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இம்மக்களது வாழ்வாதாரம், தொழில், கல்வி, குடும்ப உறவுகள் என அனைத்தும் பல ஆண்டுகளாக இப்பகுதியைச் சுற்றியே அமைந்துள்ளன. இந்நிலையில், நீர்வளத்துறையின் அறிவிப்பு மக்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. மேலும், அப்பகுதியில் வீடுகள் அகற்றப்பட்டால், அம்மக்கள் நிர்க்கதியான நிலைமைக்குத் தள்ளப்படுவர்.

நீர்வளத்துறையின் அறிவிப்பைத் திரும்பப் பெறக் கோரியும், இருப்பிடங்களை அகற்றும் நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்தக் கோரியும் கடந்த 10.08.2026 அன்று, இப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

பெரும் பணக்காரர்கள், கிரிமினல்கள் அரசின் சொத்துகளை ஆக்கிரமித்துக் கொள்ளையடிப்பதைத் தடுக்க வக்கற்ற அதிகார வர்க்கம்,  உழைக்கும் மக்களைக் கிள்ளுக்கீரைகளாகக் கருதி சர்வாதிகாரமாக அணுகுகிறது.

ஏழை, எளிய மக்களின் வாழ்நிலையைக் கணக்கில் கொள்ளாமல், பல பத்தாண்டுகளாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களை அகற்றும் நோக்கிலான நீர்வளத்துறையின் நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனை மக்கள் அதிகாரக்  கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், மக்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

தங்கள் வாழ்வாதார உரிமையைப் பாதுகாப்பதற்கான மக்களின் போராட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது.

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமே! நீர்வளத்துறையே!

ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட, பாலாற்றுப் படுகை அருகில் உள்ள கான்கர்தக்கியா பின்புறம் உள்ள பகுதிகள், சுண்ணாம்புக்காளை பகுதிகள் மற்றும் மளிகைதோப்பு, ஆசாத் நகர், ரத்னா நகர் பகுதி மக்களை அகற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கையை உடனே கைவிடு!


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க