11.08.2026
தீரன் சின்னமலை நினைவு நாள்:
தீரன் சின்னமலை பேரவையைத் தடை செய்!
பத்திரிகைச் செய்தி
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் சாதி, மதம் கடந்து திப்புவுடன் பொல்லானுடனும் இணைந்து சமரசமில்லாமல் தனது இறுதி மூச்சு வரை போராடி வீரமரணம் அடைந்தவர் மாவீரன் தீரன் சின்னமலை.
அவரது நினைவு நாளான ஜூலை 31 அன்று மேற்கு மண்டலத்தில் உள்ள கவுண்டர் சாதியக் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையைச் சாதிய அடையாளமாக்கி, சாலைகளில் திரண்டு சாதி வெறியாட்டம் போட்டுள்ளனர். குறிப்பாக, கோகுல்ராஜை ஆணவப் படுகொலை செய்த கொலைக் குற்றவாளி யுவராஜால் தொடங்கப்பட்ட “தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை”யைச் சேர்ந்தவர்கள் மிகப்பெருமளவில் அராஜகம் செய்துள்ளனர்.
சாலையில் வாகனங்களில் தொங்கிக்கொண்டும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளை மறைத்துக் கொண்டும் பயணித்துப் போக்குவரத்துக்கு இடையூறாகப் பொதுசாலையில் அராஜகம் செய்துள்ளனர். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதுடன், போலீசுடன் வாக்குவாதம் செய்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, “அன்றைய தினம் திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் வாகனங்கள், காணொளி ஆதாரங்களைச் சேகரித்திருக்கிறோம். அதை அடிப்படையாகக் கொண்டு வழக்குப் பதிவு செய்து வருகிறோம். வாகனங்களின் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கியதால், இன்ஜின் நம்பரைப் பதிவு செய்திருக்கிறோம். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பினர் உள்ளிட்ட கவுண்டர் சாதிவெறியர்கள் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் சாதி வெறியாட்டம் போடுவது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. ஆனால், அதனைத் தடுத்து நிறுத்தாமல் சாதிவெறியர்களை அராஜகம் செய்ய அனுமதித்துவிட்டு சப்பைக்கட்டு கட்டுவதையே ஆளும் அரசுகளும் போலீசும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
இதே போலீசுதான் மக்களின் உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடும் தோழர்கள், மக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்து கைது செய்து ஒடுக்குகிறது. ஆனால், சாதிவெறியர்களிடம் கெஞ்சி, அவர்களது அடாவடித்தனத்தை நடக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்காகத் திராவிடர் கழகம் இருசக்கர வாகனப் பரப்புரை பயணத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டும் த.வெ.க. அரசு மறுத்ததோடு, பெரியார் திடலில் போலீசைக் குவித்துத் தோழர்களின் பரப்புரை பயணத்தைத் தடுத்தது. அதேபோல், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தி கைகளை உடைத்து கைது செய்தது.
இவ்வாறு மக்களுக்காகப் போராடும் போராட்டக்காரர்களை ஒடுக்கும் த.வெ.க. அரசு, தீரன் சின்னமலை நினைவு நாளின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கி அவரை அவமதித்து, தலித் மக்களை அச்சுறுத்தி இழுவுப்படுத்திச் சாதி வெறியாட்டம் போடும் சாதிவெறியர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? சாதிவெறியர்களுக்கு ஆதரவான போக்கைக் கடைபிடிக்கும் த.வெ.க. அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
குறிப்பாக, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவன் யுவராஜ் ஓர் ஆணவப் படுகொலைக் குற்றவாளி. கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவனது கட்சி, பொதுவெளியில் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டிருப்பது என்ன வகையான ஜனநாயகம்? அதிலும், தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்ற கோரிக்கை பொது மக்களாலும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளாலும் முன்வைக்கப்பட்டும் வரும் சூழலில், த.வெ.க. அரசு இக்கட்சியை இயங்க அனுமதிப்பது ஒட்டுமொத்த மக்களின் உணர்வுக்கும் எதிரானதாகும். ஆகவே, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையை உடனடியாகத் தடை செய்ய வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
மேலும், சாதிய ஆணவப் படுகொலைகளும் தலித் மக்கள் மீதான சாதி வெறியாட்டங்களும் அதிகரித்துவரும் இச்சூழலில் அதற்கு மூளையாகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலையும் அதற்குத் துணைபுரியும் இதுபோன்ற ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள், அமைப்புகள், கட்சிகளையும் தடை செய்ய வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
9488902202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





