போராடிய பெண்கள் மீது இணையவழி தாக்குதல் தொடுக்கும் பாசிச பா.ஜ.க. கும்பல்!

வீதிகளில் போராடிய பெண்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திராணியற்ற பாசிச மோடி அரசு இணையக் குண்டர் படை மூலம் கேவலமான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இது பெண்களைக் கண்டு பாசிச மோடி அரசு அஞ்சி நடுங்குவதைக் காட்டுகிறது.

0

ஜூன் 20 முதல் ஜூலை 25 வரை டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட பெண்களின் தனிப்பட்ட ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டு இணையக் குண்டர் படை மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை நடத்தி வருகிறது பாசிச பா.ஜ.க. கும்பல்.

டிஜிட்டல் உரிமைகள் அமைப்பான இந்திய சுதந்திர அறக்கட்டளை (IFF) ஆகஸ்ட் 1 -ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பெண்கள் மீதான அச்சுறுத்தல்கள் மீது போலீசு நடவடிக்கை எடுக்காமல் 15 வயது சிறுமி மீது வழக்குப் பதிவு செய்திருப்பதைக் கண்டித்துள்ளது.

மேலும் போராட்டத்தில் பங்கேற்ற இளம் பெண்களை அவமானப்படுத்தவும், அவர்களின் தகவல்களைக் கசியவிடவும் இணையப் பிரச்சாரம் உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.எஃப்.எஃப். அதற்குப் பொறுப்பானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் நின்று பதாகைகளை ஏந்திப் போராடினர். போலீசின் அடக்குமுறையைத் தீரத்துடன் எதிர்கொண்டனர். சக மாணவர்கள் தாக்கப்படும் போது அவர்களைப் பாதுகாக்கும் அரணாய் இருந்தனர்.

இது பெண்களை வீட்டிலேயே அடைக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே போராட்டத்தில் பங்கேற்ற பெண்களின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடுவது, பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரிப்பது மற்றும் பாலியல் ரீதியாகவும், வசைபாடியும் அச்சுறுத்தி வருகிறது பாசிச கும்பல்.

மும்பையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற ரியா அஹிர் “சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருந்த 28 மாணவர்களைத் தடுத்து நிறுத்தியவள் நான். அந்த ஒரே காரணத்திற்காக தினமும் மோசமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறேன். ஒரு கட்சியின் தொண்டர்கள் என்னைப் பற்றி அவதூறான கருத்துக்களைப் பதிவிடுகின்றனர். நான் 140 ரூபாய்க்கு என் உடலை விற்கிறேன் என்கின்றனர். நான் போலீசில் புகார் அளித்தும், இதுவரை அதன் நகல் கூட எனக்குக் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இது மோடி அரசுக்கு ஆதரவான போலீசின் நடவடிக்கையை அம்பலப்படுத்துகிறது.


படிக்க: டெல்லி மாணவர் போராட்டம்: அந்த வீரம் இன்னும் சாகவில்லை | புகைப்படங்கள்


குறிப்பாக மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் கலந்துகொண்ட 23 வயதான யோகா பயிற்றுவிப்பாளர் ஷ்ரதா சிங் அதிவிரைவுப் படையின் (Rapid Action Force) சீருடை வண்ணக் குறியீட்டை வைத்து நகைச்சுவையாக ஏழு வினாடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் பதிவிட்டிருந்தார். ஆனால், அதை பல மீம் பக்கங்கள், தொலைக்காட்சி சேனல்கள் ஆயுதப் படைகளை அவமதித்துவிட்டதாகச் சித்தரித்தன.

​சங்கி கும்பல் ஷ்ரதாவின் பழைய புகைப்படத்திலிருந்து அவரது காரின் பதிவு எண்ணை எடுத்து, அதைக் கொண்டு அவரது கைப்பேசி எண் மற்றும் வீட்டு முகவரியைக் கைப்பற்றி இணையவழித் தாக்குதல் தொடுத்தது. ஷ்ரதாவிற்கு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்தது. அவரது தாய் மற்றும் நண்பர்களின் சமூக ஊடகக் கணக்குகள் மூலம் ஷ்ரதா இருக்கும் இடத்தை அறிய அழுத்தம் கொடுத்தது. இதனால் ஷ்ரதா வீட்டை விட்டு வெளிவருவதையே நிறுத்தியுள்ளார்.

மேலும், போராட்டத்தைப் பதிவுசெய்த அவரது 33 இன்ஸ்டாகிராம் பதிவுகளை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளதுடன், அது குறித்து மேல்முறையீடு செய்ய எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை.

மேலும் ஷ்ரதா சிங் கூறுகையில், “போராட்டத்தின் போது, நான் நூற்றுக்கணக்கான ஆண்களுக்கு மத்தியில் நின்றேன். ஒருவர் கூட என்னைத் தவறான முறையில் தொடவில்லை, வசை பாடவில்லை அல்லது மரியாதையின்றி நடத்தவில்லை. ஆனால் இணையத்தில் திரைக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் மனிதர்கள் என் தைரியத்தை முற்றிலும் குலைத்துவிட்டனர். எனது காணொளிகளின் கீழ் ‘விலை: ரூ.200, ரூ.300, ரூ.50’ என்று ஆபாசக் கருத்துக்களைப் பதிவிடுகிறார்கள்,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், போராட்டத்தின் போது 15 வயது சிறுமி ஒருவர் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி முழக்கமிட்டதாகக் கூறி, சிறுமி என்றும் பாராமல் அவரின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை சங்கி கும்பல் இணையத்தில் பரப்பியது. முற்றிலும் பொருந்தாத பிரிவுகளின் கீழ் அச்சிறுமி மீது வழக்குகளைப் பதிந்துள்ளது.

அச்சிறுமி கூறுகையில், “தெரியாத இன்ஸ்டாகிராம் கணக்குகளிலிருந்தும், அறியப்படாத எண்களிலிருந்தும் எனக்கு அழைப்புகள் வருகின்றன. ‘உன்னை எங்கு கண்டாலும் பாலியல் வன்கொடுமை செய்வோம்’ என்று பகிரங்கமாகச் சொல்கின்றனர். ஆபாசப் படங்களையும் அனுப்புகிறார்கள்.

“அவர்கள் காலையிலும் வந்தனர், மாலையிலும் வந்தனர். ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டதைப் போல என்னை எல்லா இடங்களிலும் தேடுகின்றனர். மோடி என்னை ‘மன்னித்துவிட்டதாக’க் கூறியதில் மகிழ்ச்சி அடைந்தாலும், தொடர்ச்சியான போலீசு நடவடிக்கையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “ஜனநாயகத்தில் ஒரு மீம், ஒரு ரீல்ஸ் அல்லது ஆட்சியாளர்கள் மீதான விமர்சனத்திற்காக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யவோ, சிறையில் அடைக்கவோ கூடாது; கேலிகளுக்கு வாதத்தால் பதிலளிக்க வேண்டுமே தவிர, போலீசைக் கொண்டு அல்ல” என்று ஐ.எஃப்.எஃப். அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு பெண்ணின் முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் குடும்ப விவரங்களைத் திரட்டி, ஆன்லைனில் வெளியிடுவது கருத்துச் சுதந்திரம் அல்ல. மாறாக பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 78-இன் கீழ் “ஸ்டாக்கிங்” (stalking – பின்தொடர்ந்து துன்புறுத்துதல்) குற்றத்திற்குச் சமமானது என்று அந்த அமைப்பு கூறியது.

​மேலும், இந்த சம்பவங்கள் “சுல்லி டீல்ஸ்” (Sulli Deals) மற்றும் “புல்லி பாய்” (Bulli Bai) சம்பவங்களைப் போல, பெண்கள் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் கருத்துகளைத் தெரிவிக்கும் போது, அவர்களை அச்சுறுத்திப் பின்வாங்க வைக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகின்றன.

குறிப்பாக, அரசுக்கு சவால் விடும் போது, பெண்கள் அதிக ஆபத்துகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளுவதை இந்த வழக்குகள் காட்டுகின்றன. “மற்ற ஒவ்வொரு பெண்ணும் இதைப் பார்த்துப் பின்வாங்க வேண்டும் என்பதற்காக, ஒருவரை மிகக் கடுமையாக அவமானப்படுத்தித் தண்டிப்பதே இதன் தெளிவான நோக்கம்” என்று ஐ.எஃப்.எஃப். அமைப்பு கூறியது.


படிக்க: டெல்லி மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள கொலைகார மோடி அரசு!


​பெண்கள் மீதான இணையவழித் தாக்குதலைக் கவனத்தில் கொண்டு உடனடியாகச் சீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்குக் கடிதம் எழுதவுள்ளதாகவும் ஐ. எஃப்.எஃப். கூறியுள்ளது.

வீதிகளில் போராடிய பெண்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திராணியற்ற பாசிச மோடி அரசு இணையக் குண்டர் படை மூலம் கேவலமான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இது பெண்களைக் கண்டு பாசிச மோடி அரசு அஞ்சி நடுங்குவதைக் காட்டுகிறது.

பெண்கள் தன்னையும் தனது தாயையும் தகாத வார்த்தைகளால் திட்டியதைக் கண்டு, தான் ‘கலாச்சார அதிர்ச்சி’ அடைந்ததாக மோடி காணொளி வெளியிட்ட பிறகே இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. போராட்டத்திற்குப் பிறகு ஆண்களைக் கைது, நேரடித் தாக்குதல் என ஒடுக்கிய பாசிச கும்பல், பெண்கள் மீது பாலியல் ரீதியிலான தாக்குதல் தொடுப்பதானது அதன் பார்ப்பனிய இழிபுத்தியைக் காட்டுகிறது.

எனவே, பெண்கள் மீதான பாசிச கும்பலின் திட்டமிட்ட இணையவழித் தாக்குதல்களுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஆபாச வசைபாடல்களாலும் மிரட்டல்களாலும் பெண்களையோ அவர்களின் உரிமைக்கான போராட்டத்தையோ ஒடுக்க முடியாது. எழுச்சிகரமான போராட்டங்கள்தான் பாசிச கும்பலைப் பணிய வைக்கும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க