ஜார்க்கண்ட் மாணவர்களின் எழுச்சிமிகு சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்!

தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான ஜார்க்கண்ட் மாணவர்கள் - இளைஞர்களின் போராட்டமானது கடந்த ஆகஸ்ட் 10 அன்று அம்மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டமாக எழுச்சிகரமாக வளர்ந்து முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. போலீசின் கொடிய அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு மாணவர்கள் சட்டமன்ற வாயில் வரை வெற்றிகரமாகப் பேரணிச் சென்றுள்ளனர்.

நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக டெல்லி ஐந்தர் மந்தரில் தொடங்கி நாடு முழுவதும் விரிவடைந்த மாணவர்கள் போராட்டம் பாசிச மோடி அரசைப் பணிய வைத்தது. அந்த வரிசையில் தற்போது அரசுப் பணித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜார்க்கண்டில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் வெடித்துள்ளது.

ஜார்க்கண்ட் பொதுச் சேவை ஆணையம் (JPSC) மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தால் (JSSC) நடத்தப்பட்ட தேர்வுகளில் நடந்த வினாத்தாள் கசிவு, முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போராட்டமானது கடந்த ஆகஸ்ட் 10 அன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டமாக எழுச்சிகரமாக வளர்ந்து முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. போலீசின் கொடிய அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு மாணவர்கள் சட்டமன்ற வாயில் வரை வெற்றிகரமாகப் பேரணிச் சென்றுள்ளனர்.

இப்பேரணியைத் தடுத்து நிறுத்தி, மாணவர்களைக் கலைப்பதற்காக மாணவர்கள், இளைஞர்கள் மீது ஜார்க்கண்ட் போலீசு மிகக் கொடிய அடக்குமுறைகளைச் செலுத்தியது. தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவது, கண்மூடித்தனமாகத் தடியடி நடத்துவது எனக் காட்டுமிராண்டித்தனத்தை வெளிக்காட்டியது. போலீசின் தடியடியினால் மாணவர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்து கிடப்பது, தலையில் இரத்தம் வழிந்தோடுவதோடு மாணவர் நடந்து வருவது, நூற்றுக்கணக்கான போலீசு சேர்ந்துகொண்டு மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குவது போன்றவற்றின் புகைப்படங்கள், காணொளிகள் செய்தி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஆனால், போலீசின் அடக்குமுறைகளை உறுதியுடன் எதிர்கொண்டு மாணவர்கள் இப்பேரணியை நடத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேர்ந்து போலீசின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதும், பீகாரில் நடந்ததைப் போன்று மாணவர்களைக் கலைப்பதற்காகப் போலீசால் பீய்ச்சி அடிக்கப்படும் தண்ணீரில் மாணவர்கள் உற்சாகமாக நடனமாடுவதும் காணொளிகளாக வெளியாகி மாணவர்களின் தீரத்தையும் உறுதிப்பாட்டையும் வெளிக்காட்டியுள்ளன.


படிக்க: தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்!


மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளாவன, ஒப்பந்தத்தின் அடிப்படையில் கருப்புப் பட்டியலில் உள்ள “டி.எஸ்.ஆர். டேட்டா ப்ராசசிங்” என்ற தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்ட அனைத்து அரசுப் பணிக்கான தேர்வுகளையும் இரத்துச் செய்ய வேண்டும்; தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பதாகும்.

மாணவர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து ஜார்க்கண்ட் அரசும், 14-வது ஜே.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வையும், நடைபெறவிருந்த 2023 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான ஜே.பி.எஸ்.சி. நிலுவைத் தேர்வுகளையும் இரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால், ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்பட்ட “ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வை” (Combined Graduate Level Examination) இரத்துச் செய்ய முடியாது என்று அரசு தெரிவித்திருக்கிறது. ஜார்க்கண்ட் அரசின் அறிக்கைகளின்படி, இந்திய உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் ஒருங்கிணைந்த அத்தேர்வு நடத்தப்பட்டதாகவும், எனவே அதனை இரத்து செய்யவோ, வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கவோ தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து ஜார்க்கண்ட் அரசுப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்படாததையடுத்தே மாணவர்கள் சட்டமன்ற முற்றுகையை நடத்தியிருக்கின்றனர். இது மாணவர்கள் தங்களது கோரிக்கைகளில் உறுதியாக உள்ளதைக் காட்டுகிறது.

அதேபோல, மாணவர்களின் போராட்டமும் ஜார்க்கண்ட் தலைநகரான ராஞ்சியைக் கடந்து மாநிலம் தழுவிய போராட்டமாக உருப்பெற்றுள்ளது. பொக்காரோ, தன்பாத், ஹசாரிபாக் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. சட்டமன்ற முற்றுகைப் பேரணியிலும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் வந்து கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இப்போராட்டத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மாத்தோவின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மாணவர்களின் போராட்டத்தைத் தீவிரமடையச் செய்துள்ளது.

மறுபுறம், ஜார்க்கண்டை ஆட்சி செய்துவரும் ஹேமந்த் சோரன் அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தைத் திருப்பி அம்மாநில ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற பா.ஜ.க. முயன்று வருகிறது. சி.பி.ஐ. விசாரணை கோரும் மாணவர்களின் கோரிக்கையையும் தனக்குச் சாதகமானதாகக் கருதுகிறது. எனவே, கல்வி – தேர்வு சந்தையமயமாக்கலையே தன் உயிர்மூச்சாகக் கொண்ட பா.ஜ.க. கும்பல் இப்போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகக் கபட நாடகமாடும் சதி நடவடிக்கைகள் முறியடிக்கப்பட வேண்டும்.

மேலும், மாணவர்களின் போராட்டமானது டி.எஸ்.சி. நிறுவனத்தால் முறைகேடாக நடத்தப்பட்ட தேர்வுகளை இரத்துச் செய்ய வைப்பதுடன், தேர்வு சந்தைமயமாக்கலையும் கார்ப்பரேட்மயத்தையும் ஒழித்துக்கட்டும் வகையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அப்பாதையில் ஜார்க்கண்ட் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்தை வளர்த்தெடுத்துச் செல்வது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க