கேரள மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் ஆகஸ்ட் 6, 2020 அன்று அதிகாலையில் பெட்டிமுடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு பணிபுரிந்துவந்த தமிழ்நாட்டைச் சார்ந்த 76 தோட்டத் தொழிலாளர்கள் மரணமடைந்தனர். இந்த உயிரிழப்பை கேரள அரசும், மூணார் தேயிலை எஸ்டேட்டை நிர்வகிக்கும் டாடாவின் இணை நிறுவனமான “கண்ணன் தேவன் ஹில்ஸ் பிளாண்டேஷன்ஸ்” (KDHP) நிறுவனமும் இயற்கைப் பேரிடராகச் சித்தரித்தன. இது முற்றிலும் எதிர்பாராமல் பெய்த அதீத கனமழையினால் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 2019-ஆம் ஆண்டு கடும் மழை பெய்த சமயத்திலேயே, மழை பொழிந்தால் அப்பகுதியில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என்று நிலவியல் ஆய்வறிஞர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால், அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மக்களைப் பாதுகாப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் தொழிலாளர்களைப் படுகொலை செய்தது டாடா நிறுவனம்.

பிரிட்டிஷ் காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்ட, பாதுகாப்பற்ற ஒற்றை அறை “லாயம்” (Line Rooms) எனப்படும் குடியிருப்புகளில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டதே அதிக உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புகளும் குற்றஞ்சாட்டின. டாடா போன்ற பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்டு, பல தலைமுறைகளாக அங்கு வாழும் தலித் மற்றும் தமிழ் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் வலுவடைந்தன. ஆனால், அக்கோரிக்கைக்கு டாடா பணிந்து வரவில்லை.
குறிப்பாக, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அச்சமயத்தில், கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து குறித்துப் பேசிய தேசிய ஊடகங்கள் எதுவும் மூணார் பிரச்சினை குறித்து வாய் திறக்கவில்லை. மேலும், கண்ணன் தேவன் நிறுவனத்தில் டாடா நிறுவனம் சிறுபான்மை பங்கைக் கொண்டிருப்பதை வைத்து, இப்படுகொலைக்கும் டாடாவிற்கும் தொடர்பில்லாதது போலச் சித்தரித்தன.
உண்மையில், பல பத்தாண்டுகளாகத் தோட்டத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டிவந்த டாடா, தேயிலைத் தோட்டத் தொழில் நெருக்கடி அடைந்ததையடுத்து, 2005-இல் கண்ணன் தேவன் நிறுவனத்தின் 68 சதவிகிதத்தை (யாருக்கும் விற்க முடியாத வகையில்) பத்தாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் தலையில் கட்டியது. இதன் மூலம் சொத்துக் கைமாறாமல் பார்த்துக்கொண்டதோடு, டீ தொழிலில் கொள்ளை லாபமீட்டியது. இது தேயிலைத் தோட்ட தொழில் வரலாற்றில் அதற்கு முன்னர் நிகழ்ந்திடாத நரித்தனமாகும்.
மறுபுறம், பெண் தோட்டத் தொழிலாளர்களைச் சிறுநீர் கழிப்பதற்குக் கூட அனுமதிக்காமல், தேநீர் அருந்தும் போதும் அட்டைகளும் உண்ணிகளும் இரத்தத்தைக் உறிஞ்சும் போதும் கூடத் தேயிலைப் பறிப்பதை நிறுத்தவிடாமல் அவர்களின் இரத்தத்தைக் குடித்தது டாடா நிறுவனம். ஆனால், எந்தத் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி டாடா நிறுவனம் கோடிகளில் லாபம் ஈட்டியதோ, அந்தத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்களைக் கூட ஏற்படுத்திக் கொடுக்காததே 76 உயிர்கள் பறிபோனதற்குக் காரணமாகும்.
ஆகவே, மூணார் நிலச்சரிவு உயிரிழப்பு என்பது இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட மரணமல்ல; டாட்டாவின் இலாப வெறியால் நிகழ்த்தப்பட்ட பச்சை படுகொலை. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஈட்டப்படும் தமது வருமானத்தில், ஒரு சிறு பகுதியைக் கூடத் தொழிலாளர்களைப் பாதுகாக்கச் செலவு செய்யாத முதலாளித்துவ இலாபவெறியின் கோரவிளைவு!
படிக்க: மூணார் தேயிலைத் தொழிலாளர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்
இன்று மாஞ்சோலையில் தமது இரத்தத்தை, உயிரைக் கொடுத்து பி.பி.டி.சி. நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டிக் கொடுத்த தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். காடுகள், மலைகளில் இருந்து பழங்குடியின மக்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். மோடி அரசு சட்டப்பூர்வமாகவே காடுகள், மலைகள், இயற்கை வளங்களைக் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது. இலாப வெறியை மட்டுமே இலக்காகக் கொண்ட இந்தப் பெருநிறுவனங்கள் தொழிலாளர்களின் உயிரைக் குடிப்பதோடு உரிமைகளையும் காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆகவே, மூணார் தொழிலாளர்களின் மரணத்தை நினைவு கூறும் நாம், அதற்குக் காரணமான முதலாளித்துவ இலாப வெறியையும், அதற்கு அடித்தளமாக விளங்கும் பாசிச பா.ஜ.க. கும்பலையும் வீழ்த்த களமிறங்க வேண்டும்.
![]()
ராஜன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











