கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் புதுக்குளங்கரா, உழமலக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜன் – லதா தம்பதியினர். இவர்களுக்கு நித்தின் ராஜ் என்ற மகனும் நிகிதா, ராக்கி என்ற இரு மகள்களும் உள்ளனர். ராஜன் ஓவியம் வரைவது மற்றும் லதா நூறு நாள் வேலையின் மூலம் கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இவர்களின் மகன் நித்தின் ராஜ் கண்ணூர் மாவட்டம் அஞ்சரகண்டியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் பல் அறுவைச் சிகிச்சை இளங்கலை (Bachelor of Dental Surgery – BDS) முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று மருத்துவக் கல்லூரி கட்டடத்திற்கு அருகில் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். பின்னர் மீட்கப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் மாணவனின் சாதி, தோல் நிறம் மற்றும் பொருளாதார நிலையை வைத்து ஆசிரியர்கள் மன ரீதியாக வார்த்தைகளால் துன்புறுத்தி வந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளனர்.
நித்தினின் சகோதரி நிகிதா, “ஒரு முறை வகுப்பறையில் மற்ற மாணவர்களின் முன்னிலையில் ஒரு ஆசிரியர் அவரை ‘அழுகிய நாய்’ என்று அழைத்தார். இதுபோன்ற பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து அடிக்கடி எங்களிடம் கூறுவார். ஒருமுறை அவரை ஸ்டாப் ரூமுக்கு அழைத்து கடுமையாகத் துன்புறுத்தினர்.“ என்று கூறியுள்ளதாக பி.டி.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவர் கூறியதாவது, “ராஜ் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்திருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் துன்புறுத்தல் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தபோது, அவர் எதிர்த்துப் பேசினார். அதன் பிறகு வாய்மொழி அவமதிப்பு இன்னும் அதிகரித்தது,” என்று பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் சாதி வெறியை அம்பலப்படுத்தியுள்ளார்.
நித்தினின் தந்தை ராஜன் கூறுகையில் “எந்த உதவியும் இல்லாமல் கடினமாக உழைத்து அவர் தகுதி அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் சாதி மற்றும் தோல் நிறத்தை வைத்து அவரை துன்புறுத்தினர். கல்வியையும் பாழ்படுத்தி விடுவதாக மிரட்டினர்,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நித்தின் உயிரிழந்த பிறகு ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “என்னால் முடிந்தவரை நான் சகித்துக்கொண்டேன். அவர்கள் என் அம்மா செய்துகொண்ட அறுவை சிகிச்சை பற்றியெல்லாம் பேசி அவரை அவமதித்தனர். என் பதில் தாளை மாணவர்களிடம் காட்டி என் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டினர்,” என்று தனக்கு நடந்த சாதி வன்கொடுமை குறித்து ஆடியோவில் கூறியுள்ளார்.
நித்தின் உயிரிழந்தது தொடர்பாக குடும்பத்தினர் சக்கரக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடல்ரீதியான தாக்குதல் அச்சுறுத்தல்கள் மற்றும் கல்வி ரீதியான பழிவாங்கல்கள் உட்பட, ஆசிரியர்கள் தன்னைத் துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டி ராஜ் தனது நண்பர்களுக்கு ஆடியோ செய்தி ஒன்றை அனுப்பியதை சக்கரக்கல் போலீசு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவரது வகுப்பு நண்பர்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்களும் விரைவில் பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் நித்தினின் உடல் ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, நெடுமங்கத்தில் உள்ள உழமலக்கலில் சொந்த நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடன் சேர்ந்து தன்னுடைய பெற்றோரை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கனவும் சேர்ந்தே அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
தங்களுடைய மகனை வெள்ளை கோட்டில் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த பெற்றோர் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்த தங்களது மகனின் உடலைக் கண்டு கதறி அழுத காட்சி மனதை உலுக்குகிறது.
படிக்க: தொடரும் மலக்குழி மரணங்கள்: சாதிய அரசின் மௌனப் படுகொலைகள்!
நித்தின் எப்படி இறந்தார் என்பது பற்றி கேள்வி எழுப்பிய குடும்பத்தினர் சம்பவம் நடக்குமுன் என்ன நடந்தது என்பது முழுமையாகத் தெரியவில்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மாணவன் உயிரிழந்தவுடன் சக மாணவர்கள் மற்றும் மக்களின் கொந்தளிப்பைக் குறைப்பதற்கு கல்லூரி நிர்வாகம் உடற்கூறியல் துறைத் தலைவர் எம். கே ராம் மற்றும் இணைப் பேராசிரியர் கே. டி சங்கீதா நம்பியார் ஆகிய இரண்டு பேரை இடைநீக்கம் செய்துள்ளது.
கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் மாணவர் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க கண்ணூர் நகர போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவன் உயிரிழப்பிற்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்தை சி.பி.எம், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளதுடன் விரிவான விசாரணையைக் கோரியுள்ளனர்.
நித்தின் ராஜ் தலித் சாதியைச் சார்ந்த மாணவர் என்ற காரணத்தினால் ஆதிக்க சாதிவெறி பிடித்த பேராசிரியர்கள் அவரை மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவது, தேர்வைக் காரணம் காட்டி மிரட்டுவது, அவருடைய பெற்றோர்களைத் தரம் தாழ்ந்து மிகவும் கேவலமான வார்த்தைகளால் இழிவுபடுத்துவது என்று மாணவனை உளவியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளனர். அதாவது நீண்ட காலமாக சாதிய வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்துள்ளனர்.
தனக்கு பேராசிரியர்களால் ஏற்படுகின்ற சாதி வன்கொடுமைகள் குறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவர் புகார் அளித்தும் பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்லூரி முதல்வரும் தன்னுடைய சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே மாணவர் உயிரிழந்திருப்பது பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் அரங்கேற்றப்பட்ட நிறுவனப் படுகொலையாகும்.
எனவே சாதி ரீதியாக மாணவனைத் துன்புறுத்தி வந்த பேராசிரியர்கள் உட்பட உயிரிழப்பிற்குக் காரணமான அனைவரின் மீதும் பட்டியலின, பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











