கோவை மாநகரின் நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளும் தொழில் நிறுவனங்களும் மின்னிக் கொண்டிருக்கும் வேளையில், அதன் அடியில் இருக்கும் ஓர் இருண்ட பாதாளச் சாக்கடைத் தொட்டி இரண்டு உயிர்களைக் குடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 3 அன்று, 40 அடி ஆழமுள்ள கழிவுநீர்த் தொட்டியில் 15 அடிக்குச் சாக்கடை தேங்கிக் கிடந்தது. அதற்குள் எவ்விதப் பாதுகாப்புமின்றி இறக்கப்பட்ட அர்ஜுன் குமார் (38), சுரேஷ் குமார் (27) ஆகிய இருவரின் மூச்சுக்காற்றையும் அந்த நச்சு வாயு சில நொடிகளிலேயே பறித்துக்கொண்டது.
தனது சக தோழன் வழுக்கி விழுந்த போது, “அர்ஜுன்…” என்று அலறிக்கொண்டு அவனைக் காப்பாற்றத் துணிந்து குதித்த சுரேஷின் அந்த வீரமும் பாசமும் அந்த மலக்குழிக்குள் அநியாயமாகப் புதைந்து போனது. இன்று ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டிருக்கலாம்; 30 லட்சம் ரூபாய் இழப்பீடு பேசப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த இரு குடும்பங்களின் கதறலுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? இது விபத்தல்ல; இது ஒரு திட்டமிட்ட சமூகப் படுகொலை.
சட்டங்கள் காகிதத்தில்;
சாவுகள் சாக்கடையில்
தன் குழந்தையின் மலம் பட்ட கையைக் கூட பலமுறை சோப்பு போட்டுக் கழுவுவோர் உள்ள ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில், அந்நியன் ஒருவனின் மலத்தை வெறும் கைகளால் அள்ளவும், அந்த நச்சு நாற்றத்திற்குள் மூழ்கிச் சாகவுமே ஒரு சாரார் இன்றும் நிர்ப்பந்திக்கப்படுவதை எண்ணி நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இந்தியாவில் 7.5 லட்சம் பேர் கையால் மலம் அள்ளும் பணியில் இருப்பதாக 2011-இல் அரசாங்கம் சொன்னது. ஆனால், உண்மையில் இத்தொழிலாளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்திற்கும் அதிகம் என்கின்றன தன்னார்வ அமைப்புகள். 1993 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் மலக்குழி மரணங்களைத் தடுக்கச் சட்டங்கள் வந்தன. ஆனால், நம் நாட்டில் சட்டங்கள் காகிதத்தில்தான் வாழுமே தவிர, சாக்கடைக்குள் இறங்கும் மனிதனைக் காப்பாற்ற முன்வருவதில்லை. கொரோனா காலத்தில் அரசு இவர்களை “முன்களப் பணியாளர்கள்” என்றது; வானத்திலிருந்து பூக்களைத் தூவியது; மேடைகளில் ஏற்றிச் சிறப்பித்தது. ஆனால், அதே ஊரடங்கு காலத்தில்தான் அவர்கள் மீது மிக மோசமான சாதிய வன்கொடுமைகள் ஏவப்பட்டன.
‘முற்போக்கு’ தமிழ்நாட்டின் தொடரும் அவமானம்
இந்தியாவில் மிகவும் முன்னேறிய, முற்போக்கு மாநிலமென மார்தட்டிக் கொள்ளும் தமிழ்நாடுதான் அதிக மலக்குழி மரணங்கள் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளதென்பது ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் மிகப்பெரிய அவமானமாகும். கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 12 உயிர்கள் பறிபோயுள்ளன. தாம்பரம், மதுரை, ஆவடி, புதுச்சேரி, மாதவரம், கும்மிடிப்பூண்டி, இப்போது கோவை என மலக்குழி மரணங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இதில் கொடுமை என்னவென்றால், 2021 முதல் 2026 ஏப்ரல் வரை மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மலக்குழிகளில் பலியாகியுள்ளனர். சட்டம் கொண்டுவரப்பட்ட கடந்த 33 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 218 மரணங்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளன; உண்மையில் இந்த எண்ணிக்கை 500-ஐ தாண்டும். ஒவ்வொரு மரணத்திற்குப் பிறகும் ஒரு விசாரணை, ஒரு கைது, ஓர் இழப்பீடு அறிவிப்பு… அதன் பிறகு அடுத்த மரணம் வரை நாம் அனைவரும் மௌனமாகி விடுகிறோம். விசவாயு தாக்கி உடனடி மரணம் அடைபவர்களைத் தவிர, அந்த நச்சுச் சூழலில் வேலை செய்து நுரையீரல் பாதிக்கப்பட்டுச் சில ஆண்டுகளில் மெல்ல மெல்லச் சாகும் ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பற்றி எந்த அரசாங்கமும் கணக்கெடுப்பதில்லை; நாமும் அதைக் கண்டுகொள்வதில்லை.
வேலையல்ல, இது சாதியத் திணிப்பு!
நகராட்சித் தூய்மைப் பணியாளர் வேலையில் சேர இன்று பல சாதியினரும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவர்கள் யாரும் சாக்கடைக்குள் இறங்குவதில்லை. குப்பை லாரி ஓட்டுவது, அலுவலக வேலை பார்ப்பது என அவர்கள் இருந்துகொள்ள, மலம் அள்ளும் வேலையை மட்டும் இன்றும் தலித் மக்களே செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
2013-ஆம் ஆண்டுச் சட்டம், சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும் தொழிலாளிக்கு ஆக்சிஜன் சிலிண்டர், கேஸ் மானிட்டர், முகமூடி, கவச உடை, நைலான் ஏணி என 40 வகையான பாதுகாப்புக் கருவிகளை வழங்கச் சொல்கிறது. படிக்கப் படிக்க அந்தப் பட்டியல் நம்மை மலைக்க வைக்கிறது. ஆனால் உண்மையில், இந்த 40 கருவிகளில் ஒருசிலவற்றைக் கூட இந்தியாவிலுள்ள எந்தத் தொழிலாளியும் ஒரே இடத்தில் கண்டிருக்க முடியாது. அதிகபட்சமாக ஒரு கிழிந்த கையுறையோடுதான் அவர்கள் மரணக் குழிக்குள் இறக்கப்படுகின்றனர்.
உச்சநீதிமன்றம் 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கட்டாயப்படுத்துகிறது. ஆனால், அரசு இயந்திரமோ ஒரு மனிதன் மலக்குழியில் செத்துப் போனால், அவனது சாதியின் பெயரைக் கேட்டுவிட்டு, அவன் “அரசு ஊழியனா” அல்லது “ஒப்பந்த ஊழியனா” என்று தட்டிக் கழிப்பது எவ்வளவு பெரிய கேவலம்?
அறிவியல் வளரவில்லையா?
சாதியம் தடுக்கிறதா?
பணம் எண்ணுவதற்கும், சப்பாத்தி சுடுவதற்கும், காசு போட்டால் காபி கொடுப்பதற்கும் கூட இயந்திரங்களைப் பயன்படுத்தும் இந்த சமூகம், சக மனிதனின் இழிவைத் துடைக்க ஏன் இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்த மறுக்கிறது? அறிவியல் வளரவில்லையா? நிலவுக்கு ராக்கெட் விடும் இந்தியாவுக்கு, மலக்குழியைச் சுத்தம் செய்ய ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்கத் தெரியாதா? தெரியும். ஆனால், அந்த இயந்திரத்தை வாங்குவதை விட, தலித் மக்களின் உயிரை மலிவானதாக இந்த பார்ப்பனிய சாதிய சமூகம் கருதுகிறது. இந்தியாவில் பார்ப்பனிய கொடுங்கோன்மையை நிறுவிவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தலித் மக்களை மலக்குழிக்குள் தள்ளி படுகொலை செய்வதுடன், இந்தியாவில் மலக்குழி மரணங்களே நடப்பதில்லை என மூடிமறைத்தும் வருகிறது.
2026 தேர்தல் களமும்
நமது கோரிக்கைகளும்
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் எந்த தேர்தல் கட்சியும் இதுவரை “மலக்குழி மரணங்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்ற வாக்குறுதியைப் பெயரளவில்கூட அறிவிக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு அது குறித்து எந்தவித அக்கறையும் இல்லை. ஒரு வார்டு கவுன்சிலர் கூட சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டு மிகவும் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் தங்களின் தொகுதியை எட்டிப் பார்த்துவிட்டு, ஏதேனும் ஒரு கடையில் டீ, வடை, பஜ்ஜி சாப்பிட்டுப் புகைப்படம் எடுத்து ‘எளிய வீட்டுப் பிள்ளை’ என கேப்ஷனுடன் பதிவிட்டு ஏமாற்றும் அரசியல்வாதிகளை, “மலக்குழியில் இறங்கினால்தான் ஓட்டு” என இறக்கி விட்டோமேயானால் அவர்களுக்கு இந்த வேலையின் ரணம் புரியும்.
ஓட்டு கேட்டு வரும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்காரர்களிடமும் நாம் பின்வரும் கோரிக்கைகளைத் தீவிரமாக முன்வைக்க வேண்டும்:
- அனைத்து ஊராட்சிகளிலும் நகராட்சிகளிலும் மலக்குழியை சுத்தம் செய்ய ரோபோட்டிக் இயந்திரங்களைப் (Bandicoot போன்றவை) பயன்படுத்துவது உடனடியாகக் கட்டாயமாக்கப்பட வேண்டும்!
- மனிதர்களை மலக்குழியில் இறக்கி சட்டத்தை மீறும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது எந்த பாரபட்சமுமின்றி “கொலை வழக்கு” தொடரப்பட வேண்டும்!
- சக மனிதனின் மலத்தை இன்னொரு மனிதன் அள்ளுவதை ஒரு ‘வேலையாகப்’ பார்ப்பதை நிறுத்திவிட்டு, அதை ஒரு “சமூகக் குற்றமாக” நாம் அனைவரும் உணர வேண்டும்!
மனிதக் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்தும் வரை, நாம் நாகரிகமடைந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவர்கள்.
- மலம் அள்ளும் கரங்கள் இனி விடுதலையடையட்டும்!
- இயந்திரங்கள் அந்த அழுக்கைச் சுமக்கட்டும்!
![]()
தமிழ்மாறன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











