பா.ஜ.க. ஆட்சி செய்யும் ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தின் ஃபிரோஸ்பூர் பகுதியில் சாக்கடைக் குழாயைச் சுத்தம் செய்யும் பணியின் போது விசவாயுத் தாக்கி இரண்டு தூய்மைப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று இரவு 9:20 மணிக்கு பொதுச் சுகாதாரப் பொறியியல் துறை தனது ஒப்பந்ததாரர் மூலம் அம்பேத்கர் சதுக்கம் அருகே உள்ள சாக்கடைக் குழாயைச் சுத்தம் செய்யும் வேலையை மேற்கொண்டுள்ளது. இதில் நகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் பணியாளர் சாக்கடைக்குள் இறங்கியுள்ளார். ஆனால், நீண்ட நேரம் வரை வெளியே வரவில்லை. அவரைப் பார்க்க உள்ளே சென்ற இரண்டாவது பணியாளரும் வெளியே வரவில்லை. பின்னர் உள்ளே சென்ற மூன்றாவது பணியாளர் ஆபத்தை உணர்ந்து அலறல் சத்தமிட்டு அங்கிருந்தவர்களுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு அவரும் மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் தகவலறிந்து இரவு 10 மணிக்கு சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினருடன் போலீசு சென்றுள்ளது. அங்கே சாக்கடையின் மேல் உள்ள கான்கிரீட் திறப்பு சிறியதாக இருந்ததால், “எர்த்மூவர்” (பூமி அகழ்வு இயந்திரம்) இயந்திரத்தின் உதவியுடன் கான்கிரீட் மூடியை உடைத்து பெரிய திறப்பை உருவாக்கி, பல அடி ஆழமுள்ள குழாய்க்குள் இறங்கி மூவரையும் மீட்டுள்ளனர்.
இதில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முகமது அர்பாஸ் எனும் தொழிலாளர் புரா மண்டி கேரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவர்களில் ஒருவர் ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தின் முந்தகதியைச் சேர்ந்த ராஜேந்தர் குமார் எனப்படும் கல்வா ஆவார். மற்றொருவர், உத்தரப்பிரதேசம் சஹாரன்பூர், நுனாபாடியைச் சேர்ந்த அப்துல் கலாம் ஆவார்.
உயிரிழந்த அப்துல் கலாமின் தந்தை ஜம்ஷீத் மொஹம்மது கூறுகையில், “என் மகன் மற்றும் அவரது சக ஊழியர்கள் கடந்த ஒரு வருடமாக பி.எச்.இ.டி-யின் ஒப்பந்தக்காரரிடம் வேலை செய்து வந்தனர். ராஜேந்தர் குமார் முதலில் சாக்கடைக்குள் இறங்கினார். அவரிடம் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லை. எனவே அவர் உள்ளே இறங்கிய சிறிது நேரத்திலேயே மயங்கினார். என் மகன் அப்போது விடுப்பிலிருந்தார். ஆனால், ஒப்பந்தக்காரர் அவரை அழைத்து, ராஜேந்தர் குமாரைப் பார்க்க உள்ளே இறங்கச் சொன்னார். என் மகனும் உள்ளே இறங்கியதும் மயங்கினார். பின்னர் ஒப்பந்தக்காரர் அர்பாஸையும் உள்ளே அனுப்பினார். அவரும் மயக்கமடைந்தார். பி.எச்.இ.டி. அதிகாரிகளும் ஒப்பந்தக்காரரும் மூவரையும் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல், ஆக்சிஜன் சிலிண்டர் கூட இல்லாமல் சாக்கடைக்குள் அனுப்பினர். இதற்கு பொதுச் சுகாதாரப் பொறியியல் துறையின் சப்-டிவிஷனல் அதிகாரி (SDO), ஜூனியர் இன்ஜினியர் (JE) மற்றும் ஒப்பந்தக்காரர் பொறுப்பாவார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது இருவரின் உயிரிழப்பும் அப்பட்டமான படுகொலை என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.
மேலும், அவர் தனது மகனின் உயிரிழப்பிற்குக் காரணமான பி.எச்.இ.டி-யின் சப்-டிவிஷனல் அதிகாரி, ஜூனியர் எஞ்சினியர் மற்றும் ஒப்பந்தக்காரர் மீது பி.என்.எஸ். பிரிவு 106 (அலட்சியத்தால் மரணம்) மற்றும் பிரிவு 3(5) (பொது நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏப்ரல் 15 அன்று ஃபிரோஸ்பூர் ஜிர்கா போலீசு நிலையத்தில் வழக்குப் பதிந்துள்ளார். ஆனால், தலைமறைவாக உள்ள ஒப்பந்தக்காரர் உட்பட பி.எச்.இ.டி. அதிகாரிகள் யாரையும் போலீசு தற்போது வரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: தொடரும் மலக்குழி மரணங்கள்: சாதிய அரசின் மௌனப் படுகொலைகள்!
ஆரம்ப விசாரணையில் விசவாயுத் தாக்கியே மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்து உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
குறிப்பாக, “மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013” கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் (manual scavengers) குறித்த வரையறையில் நேரடியாக மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களை மட்டுமே சேர்த்துள்ளது. செப்டிக் டேங்க் மற்றும் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்பவர்களைச் சேர்க்கவில்லை. சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு ஹரியானா பா.ஜ.க. அரசு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்காமல் நகராட்சி தொழிலாளர்களை சாக்கடைக் குழாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி இரண்டு தொழிலாளர்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தகைய படுகொலைகளும் மலக்குழி மரணங்களும் பா.ஜ.க-வின் ஆட்சியில் நாடெங்கும் அதிகரித்து வருவதுடன் அதுகுறித்த புள்ளிவிவரங்கள் கூட இருட்டடிப்பு செய்யப்படுகிறன.
எனவே, ஹரியானாவில் இரண்டு தூய்மைப் பணியாளர்களின் படுகொலைக்குக் காரணமான ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க வேண்டும்; தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; பார்ப்பனிய சகதியை மனிதர்கள் மீது பூசி, தலித் மக்களை மலக்குழிக்குள்ளேயே இறுத்தி படுகொலை செய்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads










