அரியானா, மகாராஷ்டிரா: ஒப்பந்த தொழிலாளர்களின் எதிர்காலத்தை அழிக்கும் வாகன தொழிற்சாலைகள்

தானியங்கி வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் விரல்களை, கைகளை, சமயங்களில் உயிரையே இழக்கின்றனர் என்கிற செய்தியை வெளிக் கொணர்ந்ததுடன், தொழிற்சாலை நிர்வாகங்களின் மனிதத் தன்மையற்ற லாப வெறியையும் அரசு அதிகார வர்க்கத்தின் தொழிலாளர் விரோதப் போக்கையும் எஸ்.ஐ.ஐ. அறிக்கை புள்ளி விவரங்களுடன் ஆணித்தரமாக நிறுவியுள்ளது.

ந்தியாவில் பாதுகாப்பு” (SII – Safe in India) என்கிற தன்னார்வ அமைப்பு தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த தனது எட்டாவது ஆண்டறிக்கை 2026 (Crushed 2026) வெளியிட்டுள்ளது. அதில் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தானியங்கி வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழிற்சாலைகளில், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விபத்துக்களினால் தொழிலாளர்கள் சந்திக்கும் இழப்புகள் குறித்தும் விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்தியாவில் பாதுகாப்பு எனும் இந்த அமைப்பு / நிறுவனம், தானியங்கி வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் கள நிலவரங்களை ஆய்ந்தறிந்து ஆண்டுதோறும் அறிக்கையாக வெளிக்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளாக இவ்வாறான ஆய்வறிக்கையைத் தொடர்ந்தும் வெளியிட்டு வருகிறது.

தானியங்கி வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் விரல்களை, கைகளை, சமயங்களில் உயிரையே இழக்கின்றனர் என்கிற செய்தியை வெளிக் கொணர்ந்ததுடன், தொழிற்சாலை நிர்வாகங்களின் மனிதத் தன்மையற்ற லாப வெறியையும் அரசு அதிகார வர்க்கத்தின் தொழிலாளர் விரோதப் போக்கையும் அறிக்கை புள்ளி விவரங்களுடன் ஆணித்தரமாக நிறுவியுள்ளது.

குறிப்பாக பவர் பிரஸ் (Power press) எனப்படும் அதிக திறன் கொண்ட அழுத்து எந்திரங்களின் இயக்கத்தில் சிக்கி நசுக்குண்டு தொழிலாளர்கள் தங்கள் விரல்களையும், கைகளையும் இழக்கின்றனர்; சில நேரம் வாழ்வையே இழக்கின்றனர்.

உலோகத் தகடுகளை வேண்டிய வடிவங்களில் வெட்டி எடுத்தல், துளையிடுதல், அழுத்தி வளைத்தல் போன்ற பணிகளுக்குத் தானியங்கி முறையில் அதிக ஆற்றலுடன் இயங்கும் அழுத்து எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தானியங்கி வாகன உதிரிப் பாகங்கள் பலவும் இவ்வகை அழுத்து எந்திரங்களின் மூலமாகவே தயாரிக்கப்படுகிறன. இவற்றில்தான் தொழிலாளர்களின் விரல்கள் மற்றும் கைகள் நசுக்குண்டு துண்டிக்கப்படுகின்ற மிக ஆபத்தான விபத்துகள் நடக்கின்றன.

இவ்வகை அதிக ஆற்றல் கொண்ட அழுத்து எந்திரங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு சென்சார்கள் பொருத்தப்படாத அல்லது முறையாக இயங்காமல் பழுதடைந்த எந்திரங்களில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்ற நிலைமைகளில்தான் இது போன்ற விபத்துகள் அதிகம் நடந்துள்ளன என்பதை ஆய்வறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில் இவ்வமைப்பு அரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இ்ரண்டு மாநிலங்களில் மட்டும் பாதிக்கப்பட்ட 11,000 தொழிலாளர்கள் பிரச்சினைகளைக் கையாண்டிருக்கிறது. இவற்றில் 9,000 வழக்குகள் இந்த வாகன உதிரிப்பாக உற்பத்தி தொழிற்சாலைகளின் அழுத்து வகை இயந்திரங்களில் ஏற்பட்ட விபத்துகள் பற்றிய வழக்குகள் என்பது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

தானியங்கி அழுத்த எந்திரத்தில் ஒரு உலோகப் பொருளை வைக்கும் போது எந்திரம் தவறாக இரு முறை தாக்கி விடுவதே பொதுவாக விபத்துகளுக்குக் காரணமாகிறது. மேலும் தளர்வான பின்கள், உடைந்து விரிசல் விட்ட துடுப்புகள் (Lever), சேதமடைந்த ஸ்பிரிங்குகள் போன்ற எளிதில் சரி செய்யக்கூடிய அல்லது மாற்றி விடக் கூடியதான பாகங்களை மாற்றுவதில் கூட அக்கறை செலுத்தாமல் குறைபாடுள்ள பாகங்களைக் கொண்டே இயக்கப்படுவதால்தான் இந்த இரட்டை தாக்குதல் ஏற்படுகிறது.

மேலும் இவ்வாறு விரல்கள் நசுக்கப்பட்டுத் துண்டிக்கப்படும் விபத்துக்கள் 95 சதவிகிதம் பாதுகாப்பு சென்சார்கள் செயல்படாத இயந்திரங்களில் தான் நடந்திருக்கின்றன. பாதுகாப்பு சென்சார்கள் என்பவை தொழிலாளர் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு என்பதனால் அது செயல்படாவிட்டாலும் எந்திரம் இயங்கும்.

எனவே சென்சார் பழுதாகி விட்டாலும் எந்திரத்தை நிறுத்தாமல் பணி தொடர வேண்டும் என்பதே எழுதப்படாத விதியாகப் பின்பற்றப்படுகிறது. விபத்துகளுக்கு, தொழிலாளர்கள் விரல்களையும் கைகளையும் இழப்பதற்குக் காரணமானவை என்பது தெரிய வந்த பின்னரும் நிர்வாகம் சென்சார் கருவி இருப்பது அல்லது இல்லாதிருப்பது என்பதைப் பெரிதாக வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. தொழிலாளி அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே அவர்களது உத்தரவு.

சென்சார்கள் அவ்வப்போதும் பழுதடைகின்றன, எந்திரத்தை நிறுத்தி அவற்றைச் சரி செய்து மாற்றுவது உற்பத்தியைப் பாதிக்கிறது. எனவே பெரும்பாலான நேரங்களில் இந்த சென்சார்கள் என்பதே அவசியமற்றது என்று ஒரேயடியாகத் தொல்லை விட்டதென இருந்து விடுவதே இங்கு வழக்கமாக இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள மொத்த நசுக்குக் காயமேற்படுத்தும் விபத்துகளில் சென்சார் இல்லாத எந்திரங்களால் ஏற்பட்டவை 76 சதவீதம். மற்ற காரணங்களால் 24 சதவீத விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

தொழிற்சாலைகளில் ஏற்படும் மொத்த விபத்துகளில் பவர் பிரஸ் எனப்படும் அழுத்த எந்திரங்களில் ஏற்படும் விபத்துகளே முதன்மையானதாகும். இந்த எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளாக 91 முதல் 99 சதவீதம் என்கிற அதே அளவில் அப்படியே தொடர்கிறது என்பதை அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது. நிர்வாகங்கள் இந்த பிரச்சினையில் எந்த கவனமும் செலுத்தவில்லை என்பதையும் தொழிலாளர்களின் நலன்பற்றியோ பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் பற்றியோ எந்த அக்கறையும் செலுத்தவில்லை என்பதையும் இந்த விவரம் தெளிவாக எடுத்துக் காட்டிவிடுகிறது.

“எந்திரத்தின் பழுதடைந்த பொத்தான் பற்றி நான் ஏற்கெனவே புகார் அளித்திருக்கிறேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. அன்று நள்ளிரவு 12:10 மணிக்கு பொத்தான் தற்செயலாக அழுத்தப்பட்டதில் தனது ஆள்காட்டி விரல் துண்டிக்கப்பட்டு விட்டது” என்று கூறுகிறார் சிந்து குமார் எனும் தொழிலாளி.

“நடந்திருப்பது விபத்து அதற்கு யார் தான் என்ன செய்ய முடியும்? இயக்குபவர் தான் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். இன்னொரு தொழிலாளியைக் கண்டுபிடிக்கும் வரை உற்பத்தி இழப்பு தானே ஏற்படுகிறது. அதை நிர்வாகம் விரும்புமா என்ன?” ஒவ்வொரு விபத்திலும் இதுதான் நிர்வாகங்களின் பொதுவான பதிலாக இருக்கிறது.

2025 ஆண்டறிக்கையில் இதுவரை இல்லாத அளவில் அந்த ஒரே ஆண்டில் தொழிற்சாலையில் 2,514 தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகி விரல்கள் மற்றும் கைகளை இழந்திருக்கின்றனர் என்கிறது அறிக்கை. பாதிப்புக்குள்ளான தொழிலாளர்கள் 2,514 பேருக்கும் இந்தியாவில் பாதுகாப்பு – நிறுவனம் நடத்தி வரும் தொழிலாளர் உதவி மையங்கள் (WAC – Workers Assistance Centre) மூலமாக உதவிகளையும் செய்திருக்கிறது.

“இந்த எந்திரங்களை இயக்குகின்ற தொழிலாளர்கள் அனைவருமே ஒப்பந்த தொழிலாளர்கள். அதிலும் பெரும்பான்மையானோர் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த இளந்தொழிலாளர்கள். அதனால் கேட்பாரற்றவர்கள், நிர்க்கதியானவர்கள். ஆகையினால் அவர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகத்துடன் எந்த நேரடி தொடர்பும் இருப்பதில்லை.

“அவர்கள் எந்திரங்களை இயக்குவதற்கான எந்த கல்வி சான்றிதழும் பெற்றிருப்பதில்லை. பத்தாம் வகுப்புக்கும் குறைவாக கல்வி பெற்றிருப்பவர்கள் 67% பேர்” என்கிறார் இந்தியாவில் பாதுகாப்பு (SII) நிறுவனத்தின் தொழிலாளர் பாதுகாப்பு தலைவர் வி. என். சரோஜா.

இத்தொழிலாளர்களுக்கு இங்கும் எவ்வித குறிப்பான பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை என்றும் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே கூட சிலர் எந்திரங்களில் வேலை செய்ய வைக்கப்பட்டனர் என்றும் பாதிக்கப்பட்ட ஜெயஸ்ரீ ஃபட் எனும் பெண் தொழிலாளி கூறுகிறார்.

மேலும் “அரசாங்கத்தின் நிறுவனமான வாகன திறன் மேம்பாட்டுக் கழகம் (ASDC-Automotive Skill Development Council) வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதலிலேயே எந்திர இயக்குநர்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு கல்வியுடன் நான்கு வருட அனுபவம் அல்லது எட்டாம் வகுப்பு கல்வியுடன் ஒரு வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என்று தான் கூறப்பட்டுள்ளது. பிறகு இந்த அரசாங்கத்திடம் நாம் வேறு எதை எதிர்பார்ப்பது?” என்று அங்கலாய்க்கிறார் வி. என். சரோஜா.

இத்தொழிலாளர்கள் ஒரு சிறிய ஒப்பந்ததாரரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வெறும் 8,000 முதல் 12,000 வரை மாத சம்பளம் பெற்றுக்கொண்டு வேலை செய்கின்றனர். இத்தொழிலாளர்கள் சட்டத்திற்குப் புறம்பாக வாரத்திற்கு 60 மணி நேர கட்டாய வேலைமுறையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தத் தொழிற்சாலை நிர்வாகங்கள், அரசின் தொழிலாளர்கள் காப்பீட்டு நிறுவனங்களில் (ESIC – Employees State Insurance Corporation) செலுத்த வேண்டிய கட்டணங்களைச் செலுத்தி காப்பீட்டு அடையாள அட்டைகளைப் பெற்றுத் தருவதில்லை. இதனால் உரிய இலவச சிகிச்சையோ மருத்துவமோ தொழிலாளர்களுக்கு முறையாகக் கிடைப்பதில்லை என்று குமுறுகின்றனர் தொழிலாளர்கள்.

ஆனாலும் நிர்வாகத்திடம் எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஏற்பாடுகளைக் கேட்கவோ அந்த வேலையை மறுக்கவோ ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. வேலைக்கு என்று வந்து விட்டால் வேலை செய்ய வேண்டும். அவர்களை வேலை செய்ய வைக்க நிர்வாகம் எதையும் செய்யும். நீக்கமற எல்லா தொழிற்சாலைகளிலும் அதுவே நடைமுறை விதியாக உள்ளது.

“தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான பொது ஆலோசனை மற்றும் சேவை இயக்குநரகம் (DGFASLI – Directorate of General Factory Advice Service and Labour Institutes) எனும் அரசு நிறுவனம் தொழிற்சாலை விபத்துக்கள் தொடர்பாக வெளியிட்டு இருக்கும் புள்ளி விவரங்கள் மிகவும் மோசடியானவை. அதிலும் அரியானா மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு மொத்த தொழிற்சாலை விபத்துகளின் எண்ணிக்கை 40 என்று குறிப்பிடுகிறது. ஆனால் உண்மை நிலவரம் அதை விடவும் 20 மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் இந்தியா பாதுகாப்பு நிறுவனத்தின் தொழிலாளர் உதவி மையமே பாதிக்கப்பட்ட 1,500 தொழிலாளர்களுக்கு உதவி செய்திருக்கிறது” என்று உண்மையை உடைக்கிறார் வி.என்.சரோஜா.

தொழிற்சாலைகளில் தொழிலாளர் பாதுகாப்பு நிலைமைகள் அதாவது பாதுகாப்பு கருவிகளின் பயன்பாடு மற்ற பிற பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள் பெரும்பாலும் விபத்துகளுக்குப் பிறகுதான் சோதனை இடுகின்றனர். அதிலும் நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தகவல் தராமல் வந்ததே கிடையாது. ஆனால் சட்டம் முன்வைத்திருப்பதோ அவ்வப்போதுமான திடீர் சோதனை என்பதுதான். எனினும் ஒருபோதும் அப்படி நடப்பதில்லை என்று அம்பலப்படுத்துகிறது அறிக்கை.

அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மட்டும் 2018 முதல் 2025 வரை ஏழு ஆண்டுகளில் விரல் அல்லது கை இழப்பு என்கிற வகையில் 76 தொழிலாளர்கள் கடுமையான காயம் அடைந்துள்ளனர். இந்த விவரம் தொழிற்சாலை நிர்வாகத்திடமும் அரசு அதிகாரிகளிடமும் பலமுறை பகிரப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதே நிலைமை.

இன்னும், ஏராளமான புள்ளி விவரங்களைக் கொண்டு நிர்வாகங்களின் அடாவடித்தனங்களையும் அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மைகளையும் அவற்றால் தொழிலாளர்கள் சந்திக்கும் அவலங்களையும் விலாவாரியாக பல கோணங்களில் வரைபடங்கள் போன்ற பல வடிவங்களில் எடுத்துரைத்திருக்கிறது “இந்தியா பாதுகாப்பு” அமைப்பின் விரிவான ஆண்டறிக்கை.

அனைத்தையும் விட நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விசயம் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தானியங்கி வாகன உதிரிப் பாகங்கள் முற்றிலுமாக மாருதி சுசுகி, மகேந்திரா, ஹோண்டா, டாடா மோட்டார்ஸ், ஹீரோ, மற்றும் பஜாஜ் ஆகிய ஆறு தானியங்கி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கானவையே என்பதாகும்.

இந்த முதன்மை வாகன உற்பத்தியாளர்கள் இவற்றின் உதிரிப்பாக உற்பத்தித் தொழிற்சாலைகளில் நடக்கின்ற விபத்துகளுக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீடுகளுக்கும் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த அறிக்கை முன்மொழிந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கதே. ஆனால் உற்பத்தியை முடக்கி நிர்வாகத்தின் முகத்தில் நட்டத்தை நிழலாடச் செய்யும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உள்ளிட்ட வீரியமிக்க போராட்டங்கள் இல்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த கோரிக்கையை ஏற்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா?

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள், வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் சங்கம் என்று தனித்தனியே வைத்திருக்கின்றனர். பல உற்பத்தித் துறைகளை இணைத்தும் தங்களுக்கான சங்கங்களை வைத்திருக்கின்றனர். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அந்த தொழிற்சங்க உரிமை இல்லை.

தங்களுக்கென்று அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிற்சங்கம் இல்லாமல் சிதறிக் கிடக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எவ்விதமான சட்டப்பாதுகாப்புமற்ற நிலையில் கடுமையான உழைப்பு சுரண்டலுக்கும் உரிமை மீறலுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். அதன் விளைவாகவே அவசியமற்ற விபத்துக்களுக்கும் ஆட்பட்டு உடல் உறுப்புகளை இழக்கின்றனர். சில நேரங்களில் மனைவி மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு உயிரையும் இழக்கின்றனர்.

உள்ளூர் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற வேறுபாடுகள் தொழிலாளி வர்க்கத்திற்குக் கிடையாது. அதுபோலவேதான் நிரந்தர தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற வேறுபாடும் தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடையாது. மொத்தத்தில் உழைக்கும் தொழிலாளர்கள் தான் அனைத்தையும் உருவாக்குகின்றனர் என்பதைத் தொழிலாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் இது.

இப்போதெல்லாம் அனைத்துமே தானியங்கி தான், தொழிலாளர்களின் உழைப்பு அவசியம் இல்லை என்று பேசுவதெல்லாம் பொய், பித்தலாட்டம். தொழிலாளர்களை ஏமாற்றுவதும் மதி மயங்கச் செய்வதும் ஆகும். தொழிலாளர்களின் உழைப்பு (உடல் உழைப்பு, மூளை உழைப்பு என்று வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய தேவையில்லை; இரண்டும் இணைந்த கலவை தான் உழைப்பு) இல்லாமல் எந்தத் தானியங்கியும் தானாக இயங்க முடியாது. கணினிகள், ரோபோக்கள் என்று அனைத்துக்குப் பின்னாலும் அச்சாணியாக இருந்து அனைத்தையும் இயக்குவது மனித உழைப்பே என்பதை உழைக்கும் தொழிலாளர்கள் உணர்ந்து விட்டால்…. தங்களின் உரிமைகளையும் வரலாற்றுக் கடமைகளையும் இன்னதென்று உழைக்கும் தொழிலாளர்கள் புரிந்து கொண்டு விட்டால்….. உண்மையில் வானம் நம் வசப்படும்.

நன்றி: தி வயர்


வானுறை சம்பத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க