அருணாச்சலப் பிரதேச எல்லை அருகே கால்நடைத் திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர்.
மே 22 ஆம் தேதி அன்று அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில், அண்டை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய பாலுக்போங் பகுதியில் கால்நடை திருட்டு சந்தேகத்தின் பேரில் இரண்டு இஸ்லாமிய ஆண்கள் வெள்ளிக்கிழமை அன்று விடியற்காலை 3.30 மணியளவில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
சோனித்பூர் எஸ்.எஸ்.பி. வருண் புர்காயஸ்தாவின் கூற்றுப்படி, “வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த கும்பல் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மூன்றாவது நபர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து கால்நடைத் திருட்டு தொடர்பாக ஒரு வழக்கு கும்பல் தாக்குதல் தொடர்பாக மற்றொன்று என இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் பிந்தைய வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்று அவர் கூறினார். “இறந்தவர் மத்திய அசாமின் மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தாலும், அவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் இது ஒரு தொலைதூர வனக் கிராமம் என்பதால், குற்றவாளிகளை அடையாளம் காண சி.சி.டி.வி காட்சிகள் போன்ற எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த 2024 ஆகஸ்ட் 27 அன்று, மேற்கு வங்கம் மற்றும் அசாமிலிருந்து ஹரியானாவுக்கு வந்த இஸ்லாமியரான குப்பை சேகரிப்பாளர்களின் குடிசைகளை இந்து கும்பல் ஒன்று தாக்கியது. வங்கதேசத்தினர் என்று கூறியும் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டியும் ‘பசுப் பாதுகாவலர்கள்’ அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து, ஆதார் அட்டைகளைக் காட்டுமாறு கோரியும் 26 வயது இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்றும், 14 வயது சிறுவனை சிகரெட்டால் சுட்டு சித்திரவதை செய்தும் அக்கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதே போன்ற கொலைகள் 2017, 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளிலும் நடைபெற்றுள்ளன. இவ்வாறு இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2014-ல் இந்து தேசியவாத பா.ஜ.க இந்தியாவில் ஆட்சி அமைத்ததிலிருந்து, மாட்டிறைச்சியின் பெயரில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் மாடுகளை விற்றனர், வாங்கினர் அல்லது கொன்றனர் என்ற வதந்திகளின் காரணமாக அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் (Human Rights Watch) அறிக்கை கூறுகிறது.
படிக்க: குஜராத்தில் ‘பசுவதை’க்கு ஆயுள் தண்டனை: இதுதான் இந்துராஷ்டிர நீதி!
தற்போது பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பசுவதைக்கு எதிரான தடைகளைத் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. அரசாங்கத் தடைகளுக்குக் கூடுதலாக, பசுக்களின் பாதுகாவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் தன்னிச்சைக் குழுக்களும் பல மாநிலங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்துத்துவ பாசிஸ்டுகள் ‘பசு பாதுகாப்பு’ என்பதை தங்களுக்கான இந்துத்துவ அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான, விரிவுபடுத்திக் கொள்வதற்கான கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா அமைச்சரவை பசுவதை தடுப்புச் சட்டத்தை கராராக அமல்படுத்துவதற்காக பசு சேவை ஆணையம் (Maharashtra commission for Cow Services) அமைக்க ஒப்புதல் அளித்தது. இஸ்லாமியர்களையும் தலித்துகளையும் ஒடுக்குவதற்காகத் திட்டமிட்டே பல்வேறு மாநிலங்களில் இயற்றப்படும் பசுவதை தடைச் சட்டத்தின் அச்சாணி இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் உள்ளது. அரசியலமைப்பின் பகுதி IV-ஆக உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) சரத்து 48 பசுவதையை (மாட்டிறைச்சியை) தடை செய்ய அரசுக்கு அதிகாரத்தை அளிக்கிறது.
எனவே, நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதன் மூலமும் சட்ட ரீதியாகவும் மட்டுமே இந்த வன்முறை வெறியாட்டங்களை ஒழித்துக்கட்ட இயலாது. பசுவதை தடை சட்டத்திற்கு எதிராகவும், பசு குண்டர்களைப் பின்னணியிலிருந்து இயக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு எதிராகவும் களத்தில் மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டமைப்பதன் மூலமே தீர்வு காண முடியும்.
![]()
நற்சோணை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads










