மேற்குவங்க பா.ஜ.க அரசு 2026– 27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் “சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித் துறை”க்கான (MAME – Minority Affairs and Madarasah Eduction) நிதியை 62 சதவீதமாகக் குறைத்துள்ளது. முந்தைய திரிணாமுல் காங்கிரசு ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்துறைக்கு ஐயாயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது ரூ.2,175.43 கோடியாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பல்வேறு இஸ்லாமிய சமூகங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) பிரிவில் கொண்டுவந்து இட ஒதுக்கீடு அளிக்கும் முந்தைய திரிணாமுல் காங்கிரசு அரசின் முடிவை பா.ஜ.க. அரசு இரத்துச் செய்து உத்தரவிட்டது. இதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நிதிக் குறைப்பை செய்து இஸ்லாமிய மக்களின் சமூகப் பொருளாதார உரிமைகளின் மீது மற்றொரு தாக்குதலை தொடுத்துள்ளது மேற்குவங்க பாசிச பா.ஜ.க. அரசு.
அதேபோல், இந்த நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினர் நலன் சார்ந்த திட்டங்களுக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதரவற்ற சிறுபான்மையினப் பெண்களுக்கான வீட்டுவசதித் திட்டத்திற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஐக்கியஸ்ரீ (Aikyashree) கல்வி உதவித் தொகைக்கான ஒதுக்கீடு, 2025–26-இல் ரூ.741 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.250 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மதரஸாக்களில் பயில்வோர் உட்பட மாணவர்களுக்கான “சபூஜ் சாதி” (Sabooj Sathi) மிதிவண்டி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, ரூ.100 கோடியிலிருந்து ரூ.15.5 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாமிய மாணவர்கள் இத்திட்டத்திலிருந்து புறக்கணிப்படும் அபாயம் உள்ளது. அதேபோல், சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.103 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
படிக்க: மேற்குவங்கம்: பாசிச கும்பலின் புதிய சோதனைச்சாலை!
இந்த நிதிநிலை அறிக்கையை ஆதரித்துப் பேசிய முதல்வர் சுவேந்து அதிகாரி, முந்தைய அரசு சிறுபான்மையினரை ஏமாற்றியது என்று அப்பட்டமாகப் பொய்யுரைத்தார். மேலும், மதரஸாக்களில் கல்வி கற்பதற்குப் பதிலாக, தொழில்சார்ந்த பணிகளை மேற்கொள்ளுமாறு தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்குமாறு இஸ்லாமியர்களிடம் கேட்டுக்கொண்டார். சாகாக்கள் மூலம் வளரிளம் குழந்தைகளுக்கு மதவெறியூட்டி அவர்களைத் தனது குண்டர் படையாக மாற்றிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிஸ்டுகள் இவ்வாறு கூறுவது இஸ்லாமிய மதத்தின் மீதான வக்கிரமேயன்றி வேறில்லை.
இந்தச் சிறுபான்மையினர் நல நிதிக் குறைப்பு நடவடிக்கைக்குத் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அகில இந்திய மதச்சார்பற்ற முன்னணியின் (ஐ.எஸ்.எஃப்.) சட்டமன்ற உறுப்பினர் நெளஷாத் சித்திக், சிறுபான்மையினரை ஓரங்கட்டும் நடவடிக்கையில் பா.ஜ.க. ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினர்.
பா.ஜ.க. கும்பல் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மிகக் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இனப்படுகொலையை அரங்கேற்றுவதற்கேற்ப அசாமில் தடுப்பு முகாம்களில் இஸ்லாமியர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் மீது இந்துத்துவக் குண்டர் படைகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேற்குவங்கத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைத்த பிறகு சங்கிக் கும்பலின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. ஆட்சியமைத்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே இஸ்லாமியர்கள் நடத்தும் வணிகக் கடைகள் மீது இந்துத்துவக் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். தான் நிறுவத் துடிக்கும் இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் நோக்கத்தின் ஓர் அங்கமாகவே இந்த நிதிக் குறைப்பும் அரங்கேறியுள்ளது.
![]()
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











