பா.ஜ.க. ஆட்சி செய்யும் சத்தீஸ்கரில், மாநிலக் கல்வித்துறை கடந்த ஜூன் 12 அன்று புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தினசரி காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது “சரஸ்வதி”, “காயத்ரி” உள்ளிட்ட இந்து மதக் கடவுள்களைத் துதிக்கும் மந்திரங்களை மாணவர்கள் கட்டாயமாக ஓத வேண்டும் என்றும் தினசரி வழிபாட்டின் ஒரு பகுதியாகத் தீபம் ஏற்றுதலும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை உண்பதற்கு முன்பாக, “உணவுக்காக நன்றி செலுத்தும் சமஸ்கிருத பிரார்த்தனைப் பாடலான “போஜன் மந்திரத்தை” மாணவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஓத வேண்டும்” என்றும் அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவு கடந்த ஜூன் 16 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களின் நெற்றியில் பொட்டு இட்டும், ‘ஆரத்தி’ எடுத்தும், ‘மங்கள’ இசையுடன் இந்து மதச் சடங்கு முறைப்படியும் மாணவர்களைப் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிகளுக்குள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில பா.ஜ.க. அரசு, “மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சியை மேம்படுத்துவதும், அவர்களை இந்திய கலாச்சார மரபுகள் மற்றும் விழுமியங்களுடன் இணைப்பதுமே இந்த உத்தரவின் நோக்கம்” என்று அறிவியலுக்குப் புறம்பான கருத்தை தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. அரசின் இந்த உத்தரவை சிறுபான்மை மற்றும் மதச்சார்பற்ற இயக்கங்கள் கடுமையாகக் கண்டித்துள்ளன. அவற்றில் “மனித உரிமைகள் பாதுகாப்புச் சங்கம்” (APCR), “இந்த உத்தரவு முற்றிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அரசு நடத்தும் பள்ளிகளில் கலாச்சார நடைமுறைகளுக்கும் மத வழிபாடுகளுக்கும் இடையே உள்ள தெளிவான வேறுபாட்டை இந்தச் சுற்றறிக்கை சிதைக்கிறது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், “கலாச்சாரக் கல்வி என்ற பெயரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பிரார்த்தனைகளையும் சடங்குகளையும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக்குவது என்பது, மற்ற மதங்களை விடுத்து ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே அரசு ஆதரித்து வளர்க்கிறது என்பதைக் காட்டுகிறது. இது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்றுவதற்கான அடிப்படைச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படிக்க: ஜம்மு – காஷ்மீர்: எட்டாவது ஆண்டாக பக்ரீத் கொண்டாட்டத்திற்குத் தடை விதித்த மோடி அரசு!
“அரசுப் பள்ளிகள் என்பது எந்தவொரு மதத்தையும் பின்பற்றாதவர்கள் (நாத்திகர்கள்) உட்பட அனைத்துச் சமூகக் குழந்தைகளுக்கும் பொதுவான இடமாகும். எனவே, ஒரு குழந்தையின் சொந்த மத நம்பிக்கைக்கு மாறான சடங்குகளையோ அல்லது வழிபாட்டு முறைகளையோ பள்ளியில் பின்பற்றுமாறு எந்தவொரு குழந்தையையும் கட்டாயப்படுத்த சட்டத்தில் இடமில்லை” என்றும் அவ்வமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.
மத நடைமுறைகளைக் கட்டாயப்படுத்தி அமல்படுத்தும் பொறுப்பை மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அரசு ஒப்படைக்கக்கூடாது எனக் கூறியுள்ள அவ்வமைப்பு, “அரசியலமைப்பிற்கு உட்பட்டு, மாணவர்களுக்கு உயர்தரக் கல்வியை வழங்குவதும், அதற்கான வளங்களைச் சரியாகப் பயன்படுத்துவதும், தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதுமே இந்தக் கல்வி அதிகாரிகளின் உண்மையான கடமையாகும்” என்றும் கூறியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அம்மாநிலப் பள்ளி கல்வித் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
3 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், 30 சதவிகிதத்திற்கும் அதிகமாகப் பழங்குடியின மக்களும், கிறிஸ்தவ – இஸ்லாமிய மதச் சிறுபான்மையினரும் வசித்து வருகின்றனர். பழங்குடியின மக்கள் உட்பட இவர்கள் அனைவரும் தங்களுக்கே உரிய வழிபாட்டு முறைகளையும் அடையாளங்களையும் கொண்டுள்ளனர். ஆனால், அச்சமூகக் குழந்தைகளின் மீது இந்து மத அடையாளத்தைத் திணிப்பதற்காகவே பாசிச பா.ஜ.க. அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இம்மக்களை இந்து மதத்திற்குள் கொண்டுவருவதற்காக அம்மாநிலத்தில் பல ஆண்டுகளாகவே பல்வேறு சதி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் காவி கும்பல், சமீபத்தில், சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கடுமையான “மதமாற்றத் தடைச் சட்டத்தை” கொண்டுவந்தது. உண்மையில், “கட்டாயப்படுத்துதல் அல்லது வற்புறுத்துதல் மூலம் மதத்தைப் பரப்புவது குற்றம்” என அச்சட்டம் கூறும் நிலையில், இந்து மதப் பிரார்த்தனைகளைச் சிறுபான்மை மற்றும் பழங்குடியின மாணவர்களைக் கட்டாயமாக ஓத வைப்பது அச்சட்டத்திற்கே எதிரானதாகும்.
குறிப்பாக, இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் “சரஸ்வதி சிசு மந்திர்” போன்ற தனியார் பள்ளிகளில் பார்ப்பனிய இந்து மதச் சடங்குகளை மாணவர்கள் மீது திணித்து வருகிறது. தற்போது, அம்மாநில பா.ஜ.க. அரசு இந்து மதச் சடங்குகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் திணிப்பதற்கான உத்தரவை சுற்றறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது. அதாவது கல்வியைக் காவிமயமாக்கி, அரசு பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளாக மாற்ற வேண்டும், மாணவர்களின் மூளையில் இந்துத்துவச் சித்தாந்தத்தைத் திணிக்க வேண்டும் என்ற திட்டத்தின்படியே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே, கல்வியைக் காவிமயமாக்கும் பாசிச நடவடிக்கைக்கு எதிராகவும், இதனை நடைமுறைப்படுத்துகின்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். இதற்கு ஜனநாயக சக்திகளும் புரட்சிகர அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











