ஜம்மு – காஷ்மீர்: எட்டாவது ஆண்டாக பக்ரீத் கொண்டாட்டத்திற்குத் தடை விதித்த மோடி அரசு!

பாசிச கும்பலால் 2019-ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஈத் (பக்ரீத்) மற்றும் பிற முக்கிய மத வழிபாட்டு நாட்களின் போது ஈத்கா மைதானம் மற்றும் ஜாமியா மசூதியில் மக்கள் வழிபாடு நடத்துவதற்குத் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. எட்டாவது ஆண்டாகவும் இத்தடை நீடிக்கிறது.

0

ம்மு-காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜாமியா மசூதி மற்றும் ஈத்கா மைதானத்தில் கூட்டு பெருநாள் (பக்ரீத்) தொழுகை நடத்துவதற்கு பாதுகாப்பு நிர்வாகம் மே 27 ஆம் தேதி அன்று தடை விதித்துள்ளது. இதற்கான எவ்வித எழுத்துப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடாமல், காஷ்மீர் தலைமை மதகுருவான மிர்வாய்ஸ் உமர் பரூக்கை பெருநாள் தொழுகைக்கு முன்னதாக வீட்டுக் காவலில் வைத்துள்ளது.

வரலாற்று ரீதியாக, முக்கியமான இஸ்லாமிய பண்டிகை நாட்களில் இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவது காஷ்மீரின் மதம் மற்றும் சமூக வாழ்வியலின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இருப்பினும் அதிகாரிகளின் தடையால் காஷ்மீரின் மிக முக்கியமான இரண்டு மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களால் மீண்டும் கூட்டுப் பெருநாள் தொழுகையை நடத்த முடியாமல் போயுள்ளது.

நிர்வாகத்தின் இந்தக் கட்டுப்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள மிர்வாய்ஸ், ஸ்ரீநகரின் நிகீன் பகுதியில் உள்ள தனது இல்லம் மற்றும் பழைய ஸ்ரீநகர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காஷ்மீரின் மிகப்பெரிய மசூதியான ஜாமியா மசூதி ஆகியவற்றிற்கு வெளியே பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கும் சில புகைப்படங்களைத் தனது “எக்ஸ்” (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

​“புனிதமான மற்றும் மகிழ்ச்சியான ஈத் பண்டிகை நாளில், காஷ்மீர் இஸ்லாமியர்கள் தடுப்பு அரண்கள், கட்டுப்பாடுகள், பூட்டப்பட்ட கதவுகள் மற்றும் அச்சுறுத்தல்களுடனேயே வரவேற்கப்படுகின்றனர். இது நிர்வாகம் செய்வது அல்ல; இது எங்களது மத அடையாளம், கண்ணியம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும். இது எங்களை ஆழமாகப் புண்படுத்துகிறது.”

​மேலும், “காஷ்மீரில் உள்ள குழந்தைகள் ஈத்கா மைதானத்தில் ஆன்மீக ரீதியில் எழுச்சியூட்டும் ஈத் தொழுகையையும், அதன் கொண்டாட்டங்களையும் நேரில் காணாமல் வளர்வது துரதிர்ஷ்டவசமானது” என்றும் மிர்வாய்ஸ் கூறியுள்ளார்.

“பல நூற்றாண்டுகளாக நமது கூட்டு வாழ்க்கையை வடிவமைத்த மரபுகளை அறிந்துகொள்வதிலும், நினைவுகளை உருவாக்குவதிலும் இருந்து ஒரு முழுத் தலைமுறையே தடுக்கப்படுகிறது. ஆனால், ஈத்கா மைதானம், ஜாமியா மசூதி மற்றும் தங்களின் மத நிறுவனங்களுடன் காஷ்மீர் மக்கள் கொண்டுள்ள ஆழமான ஆன்மீகப் பிணைப்பை உலகத்தில் உள்ள எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாது என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நம்பிக்கையைச் சிறைப்படுத்தவோ அல்லது பலவந்தமாக ஒடுக்கவோ முடியாது” என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: லடாக் மாவட்ட மறுசீரமைப்பு: இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் பாசிச நடவடிக்கை!


குறிப்பாக பாசிச கும்பலால் 2019-ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஈத் (பக்ரீத்) மற்றும் பிற முக்கிய மத வழிபாட்டு நாட்களின் போது இந்த இரண்டு இடங்களிலும் மக்கள் வழிபாடு நடத்துவதற்குத் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. எட்டாவது ஆண்டாகவும் இத்தடை நீடிக்கிறது.

​ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிர்வாகம், முந்தைய காலங்களில் இந்திய எதிர்ப்பு மற்றும் சுதந்திர ஆதரவுப் போராட்டங்களின் மையமாக இருந்த இந்த உணர்திறன் மிக்க டவுன்டவுன் பகுதியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் என்ற காரணத்தைக் கூறி கூட்டுத் தொழுகைக்குத் தடை விதித்து வருகிறது.

அதேவேளையில், ஸ்ரீநகரின் ஹஸ்ரத்பாலில் உள்ள ஆசார்-இ-ஷெரீப், புத்காம் மாவட்டத்தின் சரார்-இ-ஷெரீப்பில் உள்ள கான்கா-இ-மௌலா மற்றும் பிற மசூதிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இந்த பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதியில் இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமையை நிர்வாகம் பறித்து வருகிறது. ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கூடி தொழுகை நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தடை விதிக்கிறது மோடி அரசு. ஆனால் ராம நவமி, அனுமன் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகை நாட்களில் காவி குண்டர்கள் ஊர்வலம் நடத்துவதும் கலவரங்களை அரங்கேற்றுவதும் இயல்பானதாக ஆகியுள்ளது. இதுதான் பாசிச ஆட்சி!


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க