லடாக் மாவட்ட மறுசீரமைப்பு: இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் பாசிச நடவடிக்கை!

“மாவட்ட பிரிப்பு என்பது நிதி மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கம் கொண்டது என்று சொல்லப்பட்டாலும், யூனியன் பிரதேச அமைப்பில் நிதி மற்றும் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதனால் அதிகாரம் டெல்லியில்தான் குவியுமே தவிர, பரவலாக்கப்படாது.”

0

பாசிச மோடி அரசு 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு உரிமையை ரத்து செய்து லடாக்கை சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றியது. ஆரம்பத்தில் இதை ஆதரித்த லடாக் மக்கள், தங்களது உரிமைகள் பறிக்கப்படுவதை உணர்ந்துகொண்டு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், அட்டவணை 6-இன் படி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் போராடி வருகின்றனர்.

இதனால் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்ட பாசிச கும்பல் லடாக் பிராந்தியத்தில் இரண்டாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை 7 ஆக அதிகரிக்கப் போவதாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மறுசீரமைப்பு அறிவிப்பின்படி இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள கார்கில், டிராஸ் மாவட்டங்கள் 99 வருவாய்க் கிராமங்களைக் கொண்டிருக்கும்; பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ள ஷாம், சாங்தாங், நுப்ரா, லே மற்றும் ஜான்ஸ்கார் மாவட்டங்கள் 151 கிராமங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கார்கில், லே என்ற இரண்டு மாவட்டங்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக லடாக் பிராந்தியம் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லடாக் பிராந்தியத்தில் 2.7 லட்சம் மக்கள் உள்ளனர். அதில் 1.3 லட்சம் மக்கள் லே மாவட்டத்திலும், 1.4 லட்சம் மக்கள் கார்கில் மாவட்டத்திலும் உள்ளனர். அதில் 46.40 சதவீதம் இஸ்லாமிய மக்களும் 39.65 சதவீதம் பௌத்த மக்களும் உள்ளனர்.

காஷ்மீரில் உள்ள இஸ்லாமிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை (IUST) சார்ந்த லடாக்கின் முன்னணி கல்வியாளரான சித்திக் வாஹித் (Sidiq Wahid), “இந்த அறிவிப்பில் யூனியன் பிரதேசத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம் பற்றித் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இதனால் மக்கள் மனதில் சந்தேகமும் அச்சமும் உருவாகியுள்ளது. இது லடாக்கி சமூகத்திற்குள் பிளவை ஏற்படுத்தும். கடந்த ஐந்து ஆண்டுகளாக பௌத்த மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கு இடையே நிலவிய ஒற்றுமையை இது சிதைக்கக்கூடும்.

​“மக்கள்தொகை அடிப்படையில் இஸ்லாமியர்கள் சற்று கூடுதலாக இருந்தும், ஐந்து மாவட்டங்களில் அவர்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது,” என்று பாசிச கும்பலின் மாவட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.


படிக்க: லடாக்கில் புதிய மாவட்டங்கள்: மக்களை ஏமாற்ற முடியாது


குறிப்பாக லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் 6-வது அட்டவணை பாதுகாப்பை வலியுறுத்தி வரும் “லே அபெக்ஸ் பாடி” (Leh Apex Body) அமைப்பின் இணைத் தலைவர் செரிங் டோர்ஜே லக்ருக், இதை “பழைய மதுவை புதிய பாட்டிலில் அடைக்கும் செயல்” என்று விமர்சித்துள்ளார். அதாவது மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல், வெளித்தோற்றத்திற்கு மட்டும் மாற்றங்களைச் செய்து அரசு ஏமாற்றப் பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.

​மேலும் புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டாலும், மற்ற துறைகளின் தலைவர்கள் மற்றும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படாவிட்டால் இந்த நடவடிக்கை தோல்வியடையும். இதற்கு நிர்வாகத்தின் கணக்குப்படியே சுமார் 850 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் காரகோரம் மற்றும் சாங்தாங் என்ற பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயங்களின் பகுதிகளை ஆக்கிரமிக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதனால் பல நூற்றாண்டுகளாக அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து வரும் பழங்குடி மக்களின் வாழ்வாதார வளங்கள் பறிக்கப்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதிகள் 9,000 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ள அரிய விலங்குகளின் வாழிடமாக உள்ளன. புதிய மாவட்டங்கள் உருவாவதால் உள்கட்டமைப்பு வசதிகள் (சாலைகள், குடியிருப்பு விரிவாக்கம், கட்டடங்கள்) அதிகரிக்கும். ராணுவத்தினரின் கண்காணிப்பு தீவிரமடையும். இது லடாக்கின் மென்மையான சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்கும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது நிர்வாகத்தை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு வருமா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை என்று தெரிவித்த வாஹித் “இது ஒரு சரியான முடிவாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த மாவட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையின் வெற்றியானது ஒட்டுமொத்த கட்டமைப்பைப் பொறுத்தே அமையும். குறிப்பாக நில உரிமைகள், உள்ளூர் வேலைவாய்ப்பு, வள மேலாண்மை மற்றும் கலாச்சார சுயாட்சி போன்ற தங்களை நிர்வகிக்கும் சட்டங்களில், லடாக் மக்களின் கருத்துக்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதே இங்கு மிக முக்கியமான தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

லடாக்கின் முக்கிய ஆர்வலரும், கார்கில் ஜனநாயகக் கூட்டணியின் (KDA) செயற்குழு உறுப்பினருமான சஜ்ஜாத் ஹுசைன் (Sajjad Hussain) கூறுகையில், “புதிய மாவட்டங்களை உருவாக்குவது லடாக்கின் மீது அதிகாரத்துவக் கட்டுப்பாட்டின் மற்றொரு அடுக்கைத் திணிக்கும் செயலாகும். இது ஆறாவது அட்டவணை மற்றும் மாநில அந்தஸ்துக்கான எங்களது கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி” என்று விமர்சித்துள்ளார்.

மாவட்ட பிரிப்பு என்பது நிதி மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கம் கொண்டது என்று சொல்லப்பட்டாலும், யதார்த்தம் வேறாக இருப்பதாகத் தெரிவித்த வாஹித், “யூனியன் பிரதேச அமைப்பில் நிதி மற்றும் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதனால் அதிகாரம் டெல்லியில்தான் குவியுமே தவிர, பரவலாக்கப்படாது. இது அதிகாரப் பரவலாக்கம் என்ற நோக்கத்திற்கு நேர்மாறானது” என்று தெரிவித்துள்ளார்.

மக்களின் கோரிக்கைகள்:

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாவட்டங்களால் மக்களுக்குப் பாதுகாப்பு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்று வலியுறுத்தியுள்ள லக்ரூக் “அரசு பழைய மதுவை புதிய பாட்டிலில் அடைத்து விற்கும் வேலையைச் செய்யாமல், லடாக்கிற்கு முழு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை பாதுகாப்பை வழங்குவது குறித்து உறுதியான முடிவை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்லாமிய மக்களை உரிமைகள் ஏதுமற்ற, இரண்டாந்தர குடிமக்களாக மாற்றுவதற்கும், அவர்களின் அரசியல் உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்துமே பாசிச கும்பல் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு பிரிவு 370-ஐ ரத்து செய்து அம்மக்களின் சுய நிர்ணய உரிமையைப் பறித்தது. அதன் நீட்சியாகத்தான் இஸ்லாமிய மக்களின் அரசியல் உரிமையைப் பறிப்பதற்காக மாவட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையைத் தற்போது மேற்கொண்டுள்ளது.

எனவே தங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், அரசியல் அதிகாரத்தைப் பறிக்கின்ற பாசிச கும்பலுக்கு எதிராகவும் போராடி வருகின்ற லடாக் மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க