டந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அமித்ஷா லடாக் யூனியன் பிரதேசத்தில் ஜான்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையா அல்லது அரசியல் காய் நகர்த்தலா என்பதைப் புரிந்து கொள்ள லடாக் பகுதியின் சமகால சூழலை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 பாசிச பாஜகவால் நீக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடினர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் விவகாரங்கள் எதுவும் அந்த மாநிலத்தின் மக்கள் பிரதிநிதிகளின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்ற முடியாது என்ற சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைச் சிறையிலடைத்து, டெல்லியின் ஏஜெண்டான ஆளுநரைக் கொண்டு பாசிச பாஜக இந்த ஜனநாயக படுகொலையைச் செய்தது. இது நடந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது.

லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, லடாக் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், லடாக் பகுதியில் வாழும் 97 சதவிகித மக்கள் பழங்குடிகளாக இருப்பதால் ஆறாம் அட்டவணையில் இணைக்கப்பட வேண்டும் என்றும் கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் தான் இந்த புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தை நாம் பார்க்க வேண்டும்.

இந்த ஐந்து மாவட்டங்களை உருவாக்கும் அறிவிப்பு வெளியான அதே நாளில், அதாவது மாவட்டங்கள் உருவாக்கம் பற்றிய செய்தியை வெளியிட்ட பிறகு, “ஐந்து புதிய மாவட்டங்களை அமைப்பது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கும் படி லடாக் நிர்வாகத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழி காட்டியுள்ளது” என்ற செய்தியை அனைத்திந்திய வானொலி அறிவித்தது. அதாவது, எவ்வித கள ஆய்வுகளும் இல்லாமல் அமித்ஷா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.


படிக்க: தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !


இதில் உள்துறை அமைச்சகம் “லடாக் நிர்வாகம்” என்று குறிப்பிடுவது எதை? என்பதை லடாக் பகுதியில் வாழும் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

லடாக் யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்த பகுதியில் நிர்வாகம் செய்யும் அதிகாரிகளை நியமிக்கும் வகையில் “லடாக் அரசு பணியாளர் தேர்வாணையம்” அமைக்கப்படவில்லை. அதே நேரத்தில் லடாக் மக்கள் ஜம்மு காஷ்மீர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வழியாக தேர்வு எழுதி பணியில் சேரவும் லடாக் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லடாக் மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிர்வாக அதிகாரிகளாக பணிபுரிய முடியாது எனில் லடாக் பிரதேசம் யாரைக் கொண்டு ஆளப்படுகிறது? எல்லாம் டெல்லி ஏஜெண்டுகளைக் கொண்டு தான்.

லடாக் மக்கள் இப்போது பாசிச மோடி அமித்ஷா அனுப்பி வைத்த அதிகாரிகளால் ஆளப்படுகிறார்கள்; முன்பு 35A என்ற சட்டப் பிரிவால் அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலவுரிமைகள், வேலை வாய்ப்புகள், அவர்கள் வாழ்விடத்தின் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் ஒருமைப்பாடு எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது.

இதனால் லடாக் மக்கள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். வேலை வாய்ப்புகளை இழப்பதால் இளைஞர்கள் விரக்தியடைகின்றனர். மேலும் இந்தியப் பெருநகர்களில் இருந்து பெரும் மூலதனத்தின் வருகையால் உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோரின் எதிர்காலம் குறித்து வர்த்தகர்கள், போக்குவரத்து மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கவலைப்படுகின்றனர்.

காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதை வரவேற்ற பாஜகவின் உள்ளூர் ஆதரவாளர்கள் கூட, இப்போது லடாக் பகுதியின் வாய்ப்புகளும் வளங்களும் உள்ளூர் வாசிகளான தங்களுக்கு இல்லை என்பதையும், டெல்லியின் அதிகாரத்தில் லடாக் இருப்பதால் தங்களது இழிநிலையையும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பாசிச பாஜகவின் மீதான காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வெறுப்பு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நன்றாகவே வெளிப்பட்டது. பல இடங்களில் பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தவே அஞ்சியது.

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது பற்றி மோடி கூறுகையில், “இப்போது லடாக் பகுதி மக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்; சேவைகளும் வாய்ப்புகளும் அவர்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கப்படும்” என்றார்.


படிக்க: லடாக்: மாநில அந்தஸ்து கோரி தீவிரமடையும் மக்கள் போராட்டம்!


இதுவரை இந்தியாவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது, புதிதாக உருவாக்கப்பட்டது ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தால், நமக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படும். மாவட்டங்கள் உருவாக்கப்படுவது ஆளும் அரசாங்கத்தின் உடனடி நலன்களுக்காகத்தான். இது எந்த வகையிலும் அதிகார பரவலாக்கத்தைக் கொண்டு வரும் நோக்கத்திற்காக அல்ல. புதியதாக மாவட்டங்களை உருவாக்கி விட்டு, அனைத்து அதிகாரங்களையும் ஆட்சியர் அலுவலகத்தில் குவித்துக் கொண்டு, கிராமப் பஞ்சாயத்துகள், நகராண்மைக் கழகங்கள் ஆகியவற்றை அதிகாரமற்ற வெற்றுக் கூடுகளாக வைத்துக் கொண்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதைப் பற்றி பேசுவது ஏமாற்று வேலையாகும்.

தேர்தல் மூலமாக டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசாங்கங்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், லெப்டினன்ட் ஆளுநர் மூலம் மத்திய அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் ஆட்சி நிர்வாகம் நடந்து வருகிறது. மேலும் குறிப்பாக, லடாக் பகுதியில் இராணுவ மற்றும் பாதுகாப்புப் படைகள் செல்வாக்கு செலுத்துவதால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவே இருக்கும்.

2019 ஆகஸ்ட் காஷ்மீர் துண்டாடப்பட்ட போது சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தலைவர்கள் இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள். இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் காஷ்மீர் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இருக்கிறது. சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் காஷ்மீர், லடாக் பற்றிய உண்மை நிலவரங்களை எழுத விடாமல் அச்சுறுத்தப்படுகிறார்கள். குடிமைச்சமூக நிர்வாகம் பெரும்பாலும் டெல்லியின் பாசிச பிடியில் உள்ளது.

எள்ளளவும் ஜனநாயகம் இல்லாத நிலையில் லடாக் மக்கள் மாநில அந்தஸ்து, பழங்குடிகளை அங்கீகரிக்கும் ஆறாம் அட்டவணையில் சேர்க்கப்படுவது, லடாக் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அமைப்பது போன்ற வேர்மட்ட கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படை கோரிக்கைகளுக்கு முரணாக இருக்கும் அனைத்து நபர்கள், கட்சிகள், இயக்கங்களையும் மக்கள் புறக்கணிக்கிறார்கள். இவ்வளவு தெளிவான போராட்ட உணர்வுடைய இந்த மக்களைத் தனது “புதிய மாவட்டங்களை உருவாக்கும்” கண்துடைப்பு நடவடிக்கையின் மூலமாக மோடி அமித்ஷா கும்பல் ஏமாற்றிவிட முடியாது.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க