லடாக்: மாநில அந்தஸ்து கோரி தீவிரமடையும் மக்கள் போராட்டம்!

21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு வாங்சுக் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என்று கூறியிருப்பதும், 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது குறித்து லடாக் மக்கள் பரிசீலித்து வருவதும் மோடி-அமித்ஷா கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக் மார்ச் 6 ஆம் தேதி சாகும் வரை நீடிக்கக் கூடிய உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போராட்டம் 21 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தின் 21 நாட்களும், பகல் நேரங்களில் சுமார் 5,000 பேரும், இரவு நேரங்களில் கடுங்குளிரையும் பாராமல் சுமார் 350 பேர்  -10 °C  குளிரில் கூடாரமின்றி திறந்தவெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராடிய லடாக் மக்களை அரசாங்கமானது கண்டுகொள்ளவில்லை.

2019 நாடாளுமன்ற தேர்தல், 2020 லே மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் ஆகியவற்றில் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் லடாக் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளான ”மாநில அந்தஸ்து மற்றும் பழங்குடி அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் லடாக்கை சேர்ப்பது, லடாக் பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு தங்களது மொழி, கலாச்சாரம், இயற்கைவளங்கள் ஆகியவற்றை பாதுகாத்துக்கொள்ளும் தன்னாட்சி அதிகாரம்” ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று வாங்சுக் கோரினார்.


படிக்க: லடாக் பிராந்தியத்தை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்


முன்னதாக கடந்த ஜனவரி 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது வாங்சுக் ”லடாக் மக்களின் 70 ஆண்டுக்கால யூனியன் பிரதேச கோரிக்கைக்கு செவிசாய்த்த அரசானது, தற்போது நாங்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஏன் கண்டுகொள்ளவில்லை என நாங்கள் குழப்பத்தில் உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இந்திய அரசமைப்பின் 6-ஆவது அட்டவணையில் இணைவதற்கு விண்ணப்பிக்க ஒரு பிராந்தியத்தின் மக்கள்தொகையில் 50 சதவீதம் பழங்குடியினராக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால் லடாக்கில் 95 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் பழங்குடியினராக இருக்கின்றனர். ஆனால் இன்னும் லடாக்கை 6-ஆவது அட்டவணையில் அரசு சேர்க்கவில்லை. பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவும்  இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தார். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை இதுவரை யாரும் நிறைவேற்றவில்லை. வாங்சுக்கின் 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது லடாக்கில் அவருக்கு ஆதரவு பெருகியது. கடந்த திங்களன்று (25-03-2024) கார்கில் ஜனநாயகக் கூட்டணியில் (KDA) இருந்து ஏராளமானோர் பங்கேற்று கார்கிலில் உண்ணாவிரதப் போராட்டத்தை  நடத்தினார்கள்.

சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமையன்று (26-03-2024) முடித்துக்கொண்டார். இந்த 21 நாள் உண்ணாவிரதப் போராட்டமானது முடிவு அல்ல என்று கூறினார். மேலும் மார்ச் 27ஆம் தேதி முதல் லடாக் பெண்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவார்கள் என்றும் கூறினார்.


படிக்க: தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !


“தேசத்தின் நலனுக்காக இந்த முறை தங்கள் வாக்குச் சீட்டை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்” என்று லடாக் வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார். “அரசர்களை உருவாக்குபவர்கள் மக்கள்தான். ஒரு அரசாங்கம் வேலை செய்யவில்லை என்றால் அரசாங்கத்தை நாங்கள் மாற்றவும் செய்வோம்” என்றார் வாங்சுக்.

21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு வாங்சுக் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என்று கூறியிருப்பதும், 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது குறித்து லடாக் மக்கள் பரிசீலித்து வருவதும் மோடி-அமித்ஷா கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. காஷ்மீர் துண்டாடப்பட்டு 4.5 வருடங்கள் கழிந்த பின்னரும் அங்குள்ள மக்களின் வாழ் நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அங்குள்ள இயற்கை வளங்களும் கார்ப்பரேட்டுகளால் சுரண்டப்படுமோ என்ற அச்சம் லடாக் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டும், 6-ஆவது அட்டவணையில் லடாக்கை இணைக்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.


‌ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க