ஜம்மு-காஷ்மீர்: சந்தேகத்தை ஏற்படுத்தும் சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்கள்

"புட்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை உயிரோடு பிடிக்க வேண்டும். அவர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். ஒமர் அப்துல்லா அரசை வீழ்த்த சதி நடக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும்" என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நவம்பர் 2 அன்று கூறியுள்ளார். பயங்கரவாதிகள் பிடிக்கப்பட வேண்டும், கொல்லப்படக்கூடாது என்றும், தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சமீபத்திய பட்காம் (Budgam) பயங்கரவாத தாக்குதல் உட்பட ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானைக் குற்றம் சாட்ட வேண்டுமா என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அப்துல்லா இவ்வாறு கூறினார்.

“புட்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை உயிரோடு பிடிக்க வேண்டும். அவர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். ஒமர் அப்துல்லா அரசை வீழ்த்த சதி நடக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும்” என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.

அண்மையில் நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 42 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 6 இடங்களைக் கைப்பற்ற, உமர் அப்துல்லா முதல்வராகப் பதவியேற்றார்.

மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஜம்மு காஷ்மீர் அரசு தொடர்ந்து பேசி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உமர் அப்துல்லா சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

பயங்கரவாத தாக்குதல்களின் அதிகரிப்பு “ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்குவதற்கா?” என்று ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், பரூக் அப்துல்லாவின் கூற்றுக்குக் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


படிக்க: ஜம்மு காஷ்மீரில் பல்லிளிக்கும் பா.ஜ.க-வின் நெருக்கடி


ஃபரூக் அப்துல்லா கருத்து  தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், “ஜம்மு காஷ்மீரின் மிகப்பெரும் ஆளுமை ஃபரூக் அப்துல்லா. ஜம்மு காஷ்மீர் மக்களுக்காகத் தனது வாழ்நாளைச் செலவிட்டவர். அவருடைய நேர்மை குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் கூறுவதை மத்திய அரசு, குறிப்பாக உள்துறை அமைச்சகம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். காஷ்மீர் சூழலை எப்படி சரிசெய்வது என்பது குறித்து ஆராய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, உளவுத்துறையின் செயல்பாட்டை விமர்சித்துப் பேசினார்.

“ஆனால் இப்போது உருவாக்கப்படும் சூழல் முன்னிலிருந்து வேறுபட்டதாகத் தெரிகிறது. முதலாவதாக, இதன் பின்னணியில் இருப்பவர்கள் ஜம்மு காஷ்மீரில் அமைதியை விரும்பவில்லை. இரண்டாவது விஷயம் (தாக்குதல் நடக்கும்) காலம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தேர்தல் நடத்தப்பட்டு அனைத்து அமைப்பினரும் அதில் பங்கேற்றனர். இதுபோன்ற அமைதியான தேர்தலுக்குப் பிறகு, திடீரென்று இது நடக்கிறது. இது ஒரு சாதாரண விஷயமாகத் தெரியவில்லை; இதில் சில சந்தேகங்கள் எழுகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு துணைநிலை ஆளுநரின் கீழ் வருவதால் நடக்கும் தாக்குதல்களுக்கு பாஜக பொறுப்பேற்க வேண்டும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

“சட்டம் ஒழுங்கு பொறுப்பு துணைநிலை ஆளுநருடையது. அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தால், பாஜக பொறுப்பேற்க வேண்டும். பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் வருவதாகவே இருக்கட்டும்.. நீங்கள் ஏன் அவர்களைத் தடுக்கவில்லை?… என்ன செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு? அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் பொறுப்பு… பயங்கரவாதிகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் திணறுவது நரேந்திர மோடி அரசின் தோல்வி” என்று ஓவைசி கூறினார்.

ஃபரூக் அப்துல்லாவின் கூற்று பல சந்தேகங்களை எழுப்புகிறது. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க விரும்பாததால் இந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற ஒன்றிய பா.ஜ.க அரசு அனுமதிக்கிறதா என்ற கேள்வியும் சந்தேகமும் எழுகிறது. மேலும், இந்த தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் காவிக் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற ஐயமும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க