ம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28 தொகுதிகளில் போட்டியிடப்போவதில்லை என பா.ஜ.க. அறிவித்துள்ளது.

குறிப்பாக, 47 தொகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில் 19 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட உள்ளது. 16 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தெற்கு காஷ்மீரில் 8 தொகுதிகளிலும், 15 தொகுதிகளைக் கொண்ட மத்திய காஷ்மீரில் 6 தொகுதிகளிலும், 16 தொகுதிகளைக் கொண்ட வடக்கு காஷ்மீரில் 5 தொகுதிகளிலும் மட்டுமே பா.ஜ.க. போட்டியிடவுள்ளது.

இதனைத் தேர்தல் உத்தி என்று கூறி பா.ஜ.க. தலைமை சமாளிக்க முயன்றாலும் இம்முடிவால் ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க-வினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தியிடம் கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர், “நாங்கள் ஏற்கெனவே காயம் மற்றும் கோபத்தில் உள்ளோம். எங்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டிய நேரம் வந்தபோது, ​​​​கட்சி எங்களை நம்பவில்லை. அவர்கள் சீட்களைத் தவிர்த்துவிட்டனர் அல்லது கட்சிக்கு புதிய வேட்பாளர்களை நிறுத்தினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து வழக்கு: பாசிஸ்டுகளுக்கு பக்கபலமாக நிற்கும் உச்சநீதிமன்றம்!


2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆள் இல்லாத காரணத்தால் ஜம்மு காஷ்மீரில் உள்ள மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிடவில்லை. இது ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க-வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனைச் சமாளிப்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக வருத்தம் தெரிவித்ததோடு, 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தயாராகுமாறு கட்சித் தொண்டர்களை வலியுறுத்தினார். ஆனால், தற்போது எந்த காரணமும் அறிவிக்கப்படாமல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 19 தொகுதிகளை பா.ஜ.க. புறக்கணித்திருப்பதானது அமித்ஷா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அளவிற்குப் பாசிசக் கும்பலின் தோல்வி முகம் தீவிரமாக உள்ளதையே காட்டுகிறது.

ஏற்கெனவே கூட்டணிக்கு ஆள் கிடைக்காததால் ஜம்மு காஷ்மீர் தேர்தலைத் தனித்துச் சந்திக்க வேண்டிய சூழலுக்கு பா.ஜ.க. கும்பல் தள்ளப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் நிறுத்துவதற்குக் கூட ஆள் இல்லாமல் ஜம்மு காஷ்மீரில் 28 தொகுதிகளை பா.ஜ.க. புறக்கணித்திருப்பது அதன் தோல்வி முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. இதன் மூலம் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிவிட்டதாகவும் பா.ஜ.க-வை காஷ்மீர் மக்கள் நம்புவதாகவும் பா.ஜ.க. கும்பல் அவிழ்த்துவிட்ட பொய்களும் அம்பலப்பட்டுப் போயுள்ளன.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க