ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் டிசம்பர் 11 அன்று தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது தான் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
பாசிச மோடி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்ற பின்பு, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5, 6 தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு குடியரசுத் தலைவர் உத்தரவுகளின் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதில் ஜம்மு காஷ்மீர் மட்டும் சட்டப்பேரவையைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆகஸ்ட் 5, 2019 முதல் ஜம்மு காஷ்மீரில் தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான போலீசும் இராணுவமும் குவிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரே திறந்தவெளி சிறைச்சாலையாக பாசிச மோடி அரசால் மாற்றப்பட்டது.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 2020-இல், 2G இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது. ஆனால், 4G இணைய சேவையோ பிப்ரவரி 2021-இல் தான் வழங்கப்பட்டது. இன்று வரை மக்கள் போலீசு – இராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறித்த பாசிச மோடி அரசின் இந்நடவடிக்கை குறித்து தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
பிரபல சங்கியான ரிபப்ளிக் டி.வி-யின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி போன்றவர்களின் ‘உரிமைகள்’ தொடர்பானது என்றால் உச்சநீதிமன்றம் விரைந்து விடுமுறை நாளன்று கூட விசாரித்து ‘நீதி’ வழங்கியிருக்கும். ஆனால், இங்கு பாதிக்கப்பட்டிருப்பதோ காவி பாசிச கும்பலால் வெறுக்கப்படும் (காஷ்மீரைச் சேர்ந்த) முஸ்லீம்கள் தானே! அதனால் தான், மாட்சிமை பொருந்திய உச்சநீதிமன்றம் விசாரித்து முடிக்க கால அவகாசம் எடுத்துக் கொண்டது.
படிக்க: காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !
இறுதியாக, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமையையும் உணர்வையும் கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளாமல் “இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டது செல்லும்” என்று 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு டிசம்பர் 11, 2023 அன்று ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
“சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது. அது ஒரு இடைக்கால செயல்முறையை முடிக்க உருவாக்கப்பட்டது. மாநிலத்தில் நிலவும் போர் சூழல் காரணமாக அது ஒரு தற்காலிக ஏற்பாடாகும். எனவே தான், அது அரசியலமைப்பின் 21-வது பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இணைவதில் கையெழுத்திட்ட பிறகு ஜம்மு காஷ்மீருக்கு உள் இறையாண்மை (internal sovereignty) இல்லை என்று நாங்கள் கருதுகிறோம்” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பில் கூறியுள்ளார்.
மேலும், மக்கள் விரோதமான இந்தத் தீர்ப்பில் மூன்று முக்கியமான அம்சங்கள் உள்ளன.
- முதல் அம்சம்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது குறித்து
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றம் அப்போதைய ஆளுநர் சத்தியபால் மாலிக்-ஆல் நவம்பர் 21, 2018 அன்று கலைக்கப்பட்டது. எதிரெதிர் துருவங்களில் இருந்த என்.சி. (National Conference – NC) மற்றும் பி.டி.பி. (Peoples Democratic Party – PDP) ஆகிய கட்சிகள் பா.ஜ.க-விற்கு எதிராக இணைந்து, ஆட்சியமைக்க உரிமை கோரியதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை தடாலடியாகக் கலைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்படுவதற்கான தொடக்கப் புள்ளியே இதுதான். இதற்குப் பின்னர் தான், குடியரசுத் தலைவர் ஆட்சி ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டு சட்டப்பிரிவு 370-ஐ இரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
ஆனால், மனுதாரர்கள் யாரும் தங்கள் மனுக்களில் இது குறித்து எதுவும் கோராததாலும், அக்டோபர் 31, 2019 அன்றோடு குடியரசுத் தலைவர் ஆட்சி ஜம்மு காஷ்மீரில் முடிவடைந்து விட்டதாலும் இது குறித்து எதுவும் கூறப்போவதில்லை என்று உச்சநீதிமன்றம் அயோக்கியத்தனமாகக் கூறியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாபர் மசூதிக்குச் சொந்தக்காரர்களான இஸ்லாமியர்கள் ஒரு போதும் மாற்று இடம் கோரவில்லை. ஆனால், தன்னை ’நியாயவான்’ என்று காட்டிக் கொள்ள, அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி, இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
தற்போது, சட்டப்பிரிவு 370 இரத்து வழக்கில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றம் ஆளுநரால் அராஜகமான முறையில் கலைக்கப்பட்டது குறித்து மனுதாரர்கள் எதுவும் கோரவில்லை என்றால் என்ன. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி நீதி வழங்கலாம் அல்லவா? பாவம்! உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த மறந்துவிட்டது போலும்!
- இரண்டாவது அம்சம்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது சட்டப்பிரிவு 370-ஐ இரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது குறித்து
குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது தற்காலிகமானது. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 356-இன்படி அதிகபட்சமாக தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க முடியும்; அதுவும் 6 மாதத்திற்கு ஒருமுறை நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று மட்டுமே.இவ்வழக்கில், குடியரசுத் தலைவர் ஆட்சியில் மாநிலம் இருந்தபோது சட்டப்பிரிவு 370-ஐ இரத்து செய்வதற்கான திருத்தத்தை செய்தது தவறு என்று மனுதாரர்கள் வாதிட்டனர். ஆனால், அம்மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றம் இல்லாதபோது மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையையும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
- மூன்றாவது அம்சம்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையே ஒட்டுமொத்தமாக ஒன்றியப் பிரதேசமாக மாற்றியது குறித்து
அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3-இன்படி மத்திய அரசுக்கு ஒரு மாநிலத்தின் பெயர், பகுதி, எல்லைகளை மாற்றியமைக்க அதிகாரம் உள்ளது. மேலும், ஒரு மாநிலத்தின் எந்தவொரு பகுதியையும் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றும் அதிகாரமும் உள்ளது.ஆனால், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஒட்டுமொத்த மாநிலத்தையே யூனியன் பிரதேசமாக மாற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு, உச்சநீதிமன்றம் “லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கையின்படி, விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு அளிக்க வேண்டும்” என்றொரு மழுப்பலான பதிலைக் கூறி பாசிஸ்டுகளின் பாசிச தாக்குதல்களுக்கு களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த மாநிலத்தையே யூனியன் பிரதேசமாக மாற்றுவது சரியா தவறா என்பதற்குள் செல்லவில்லை.
பாசிச கும்பல் கால்பதிக்க முடியாத எந்தவொரு மாநிலத்தையும் ஒட்டுமொத்தமாக யூனியன் பிரதேசமாக மாற்றிவிட்டு, மாநில அந்தஸ்தை பின்னாளில் வழங்கவிருப்பதாக நீதிமன்றத்தில் கூறிக்கொள்ளலாம்! இப்படியொரு பேரபாயத்திற்குதான் இத்தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.
உயர்சாதியைச் சேர்ந்த அரியவகை ‘ஏழை’களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு, பீமா கோரேகான் பொய் வழக்கு, ரபேல் விமான ஊழல் வழக்கு, ஆதார் வழக்கு, பெகாசஸ் உளவு செயலி வழக்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை வழக்கு ஆகியவற்றில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பாசிச கும்பலுக்கு சாதகமாகவே வழங்கப்பட்டன. அவ்வரிசையில், தற்போது சட்டப்பிரிவு 370 இரத்து வழக்கின் தீர்ப்பும் இணைந்து கொள்கிறது.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube