கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி மகாராஷ்டிராவில், தன்னுடைய சொந்த ஊரில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “பாபர் மசூதி வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது. அதில் தீர்வு காண்பது கடினம். அந்த வழக்கு மூன்று மாதங்களாக என் முன்னே இருந்தபோது, நான் கடவுளின் முன் அமர்ந்து இந்த வழக்கில் ஒரு தீர்வு வர வேண்டும் என வேண்டினேன். அதன் பிறகே அந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது” என்று கூறியிருந்தார்.
சந்திரசூட்டின் இந்த பேச்சுக்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துவருகிறது. இந்தியாவில் பாசிசத்தை அமல்படுத்திவரும் மோடி கும்பலுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் சந்திரசூட் கடிவாளமிடுவார் என்று லிபரல் மற்றும் குட்டி முதலாளித்தவ பிரிவினர் பேசிவந்த நிலையில் சந்திரசூட்டின் இவ்வுரை அவர்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளது.
ஆனால், இங்கு நாம் சந்திரசூட் குறித்து விவாதிக்கப்போவதில்லை. இந்த கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை தகரும்போது, நாட்டில் ஜனநாயகம் நிலவுவது போன்ற பொய் தோற்றத்தை உருவாக்குவதற்காக ஆளும் வர்க்கத்தால் முன்தள்ளப்படும் நபர்களில் ஒருவரே சந்திரசூட் என்பதை கடந்து அங்கு விவாதிக்க ஏதுமில்லை. இங்கு பரிசீலிக்க வேண்டிய முக்கியமான அம்சம் சந்திரசூட்டின் வார்த்தைகளின் அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பாபர் மசூதி தீர்ப்பு எப்படிப்பட்டது என்பதுதான்.
2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பாபர் மசூதி நில உரிமை மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கிய அப்போதைய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை வைத்தது சட்டவிரோதமானது; பாபர் மசூதியை இடித்து இஸ்லாமியக் கட்டமைப்பை அழித்தது சட்டத்தின் விதியை மீறிய செயல்; ஆனால், பாபர் மசூதி நிலம் இந்துக்களுக்கே சொந்தம், அங்கே ராமனுக்கு கோவில் கட்டிக்கொள்ளலாம் என்ற அயோக்கியத்தனமான தீர்ப்பை வழங்கியது.
இத்தீர்ப்பு குறித்து 2019 டிசம்பர் மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான “பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா!” என்ற தலைப்பிலான கட்டுரையில், “தீர்ப்பின் இணைப்பு மட்டுமல்ல, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த ஒருமனதான தீர்ப்பும் கூட ராமனின் பிறப்பு குறித்த இந்துக்களின் நம்பிக்கை என ஆர்.எஸ்.எஸ். கூறிவரும் கருத்தை அடிநாதமாகக் கொண்டுதான் அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஒரு ‘மதச்சார்பற்ற குடியரசின் உச்ச நீதிமன்றம் பார்ப்பன மத நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இத்தீர்ப்பை அளித்திருப்பதாகப் பளிச்செனத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சந்திரசூட் தற்போது உதிர்த்துள்ள வார்த்தைகள் இதனையே நிரூபித்துள்ளது.
சொல்லபோனால், காவி பாசிஸ்டுகளின் மொழியில் சொல்வதெனில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை “தீர்ப்பு” என்று குறிப்பிடுவதே அபத்தமானது, ‘நீதி’ என்று சொல்வதே சரியானது. அதாவது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் நிறுவத் துடிக்கும் இந்துராஷ்டிரத்திற்கான ‘நீதி’.
ஆம், இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை நிறுவத்துடித்துக் கொண்டிருக்கும் பாசிசக் கும்பல், அதற்கான ஏற்பாடாக ஓர் கும்பலாட்சியை நிறுவுவதற்கான பணியில் மூர்க்கமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி, புதிய கல்வி கொள்கை என ஒவ்வொரு துறைகளிலும் ஆதிக்க கும்பல்களின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இதன் உச்சக்கட்டமாக காவி-போலீசு கும்பலாட்சிக்கான சட்ட-ஒழுங்கை உருவாக்குவதற்காக மூன்று குற்றவியல் சட்டங்களை ரத்து செய்துவிட்டு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டுவந்துள்ளது.
இந்த புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அமித்ஷா, “இந்த (பழைய) மூன்று ஆங்கிலேய கால சட்டங்களும், ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக, பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டவை. அதன் நோக்கம் தண்டனைகள் வழங்குவது மட்டுமே, நீதி வழங்குவதல்ல. தற்போது கொண்டுவரப்பட்ட மூன்று புதிய மசோதாக்கள் காலனித்துவச் சட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்து இந்தியர்களுக்கான இந்தியர்களால் வழங்கப்படும் சட்டங்களாக இருக்கும்” என்றார். அமித்ஷா குறிப்பிடும் நீதி ஆதிக்க கும்பல்களுக்கான ‘நீதி’யே, இதனை இந்தியா முழுவதும் நிலைநாட்டுவதே காவி கும்பலின் பாசிச நோக்கம். அதற்கான முன்னோட்டமாகவே 2019 பாபர் மசூதி நில இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம், இந்த தயாரிப்புக்கான சாட்சியாகவே, “சட்டம் குருடு அல்ல” என்ற வாசகத்துடன் கூடிய புதிய ‘நீதி’ தேவதை சிலை உச்சநீதிமன்ற நூலகத்தில் சந்திரசூட்டால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் கண்கள் திறக்கப்பட்டும் இடதுகையில் வாளுக்கு பதிலாக அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை கொண்டும் தலையில் கீரிடத்துடன் நெற்றியில் திலகமிட்டும் சேலை ஆபரணங்கள் அணிந்தும் சங்கப் பரிவார கும்பல் முன்னிறுத்தும் ‘பாரத மாதா’வைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காலனித்துவ பாரம்பரியத்திற்கு முடிவு கட்டுதல், சட்டத்தின் முன் சமத்துவம் என்பதை வலியுறுத்தும் விதமாக நீதி தேவதையின் சிலை மாற்றப்பட்டுள்ளதாக பாசிசக் கும்பல் கூறுகிறது. ஆனால், இந்த புதிய சிலையானது உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டத்தின் வரைவு அட்டைப்படத்தில் உள்ள ‘நீதி’ தேவதையின் சிலையை ஒத்துள்ளது. இச்சம்வங்களானது இனி நீதிமன்றங்களில் சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல் இந்துராஷ்டிர ‘நீதியின்’ அடிப்படையிலேயே தீர்ப்புகளை வழங்க பாசிசக் கும்பல் தயாராகி வருவதையே காட்டுகிறது.
தலையங்கம்
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram