இந்தியா முழுவதும் மசூதிகளை குறிவைத்து இந்துத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் காவி கும்பல், உத்தரப்பிரதேசத்தில் நூரிஜாமா என்ற மசூதியை இடித்திருப்பது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தின் லாலெளலி பகுதியில் 185 ஆண்டுகள் பழமையான நூரிஜாமா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மசூதியை இடித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நூரிஜாமா மசூதியுடன் இணைக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட கடைகளை காவி கும்பல் இடித்துத் தள்ளியது. அதன் தொடர்ச்சியாக மசூதியின் ஒருபகுதி, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அதனை இடிப்பதற்கு பொதுப்பணித்துறை மூலம் மசூதி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மசூதி நிர்வாகம் பொதுப்பணித்துறையின் அறிவிப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது. “185 ஆண்டுகள் பழமையான இம்மசூதியானது வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல் கலாச்சார பாரம்பரியத்தையும் வலியுறுத்துகிறது. முக்கியமாக இம்மசூதி இந்திய தொல்லியல் துறையின் பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மசூதி இடிக்கப்பட்டால் அது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன் இதுபோன்ற வரலாற்று கட்டமைப்புகளை மீண்டும் மீட்டெடுக்க முடியாது” என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“எனவே புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தலங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958-இன் கீழ் மசூதியை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கு இந்திய தொல்லியல் துறைக்கு (ASI – Archaeological Survey of India) உத்தரவிடுவதுடன் மசூதிகள் மீதான திட்டமிட்ட தாக்குதலுக்கு தடை விதிக்கவும் வேண்டும்” என மசூதி நிர்வாகம் மனுவில் தெரிவித்திருந்தது.
படிக்க: ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!
அம்மனுவின் மீதான விசாரணை இன்று (டிசம்பர் 13) அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில்தான், காவிமயமாகி போயுள்ள நீதிமன்றங்களின் கரசேவைக்கு கூட காத்திராமல் டிசம்பர் 10 அன்றே பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து நூரிஜாமா மசூதியின் ஒரு பகுதியை இடித்துள்ளது காவி கும்பல்.
நூரிஜாமா மசூதி இடிக்கப்பட்ட அநீதியானது, இஸ்லாமிய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமிய மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி மசூதி அமைந்துள்ள பகுதியில் யோகி ஆதித்யநாத் அரசு போலீசை குவித்துள்ளது.
மேலும், அம்மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்தும் விதமாக, “பண்டா-பஹ்ரைச் நெடுஞ்சாலையை விரிவுப்படுத்துவதற்கு இடையூறாக இருந்த மசூதியின் சுமார் 20மீ பரப்பளவிலான பகுதி அதிகாரிகள் முன்னிலையில் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது” என்று லாலெளலி போலீசு நிலைய பொறுப்பு ஆய்வாளரான பிருந்தாவண் ராய் மூலம் சமூக ஊடகத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதேபூர் நிதி மற்றும் வருவாய் கூடுதல் மாஜிஸ்திரேட் அவினாஷ் திரிபாதி, “சாலையை விரிவுப்படுத்துவதற்கும் வடிகால் அமைப்பதற்கும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மசூதியின் ஒரு பகுதியை இடிப்பதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஆகஸ்ட் மாதமே பொதுப்பணித்துறை சார்பில் மசூதியின் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்படி மசூதியுடன் இணைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இப்போது மசூதியின் ஒரு பகுதியை அகற்றுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இடிக்கப்பட வேண்டிய பகுதிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது என்பதை செயற்கோள் மூலம் பார்த்தாலும் தெரியும். எனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது” என்று காவி கும்பலின் கர சேவைக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவிக்கிறார்.
ஆனால், மேற்கூறிய அதிகாரிகளின் கருத்துகளை மறுத்துள்ள மசூதி நிர்வாகம், “நூரிஜாமா மசூதி 1839-இல் கட்டப்பட்டது. 1956-இல்தான் சாலை போடப்பட்டது. ஆனால், சாலையை ஆக்கிரமித்து மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி மசூதியின் ஒரு பகுதியினை இடித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் இது அதிகாரிகளின் துணையுடன் காவி கும்பல் நடத்திய திட்டமிட்ட தாக்குதல் என்பது அம்பலமாகிறது.
இந்நிலையில்தான், வழிபாட்டு தலங்கள் தொடர்பான மனுக்களை விசாரிக்கக் கூடாது என்றும் மசூதிகளில் ஆய்வு நடத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் நேற்று (டிசம்பர் 10) தடை விதித்துள்ளது. இதனை இந்தியாவில் உள்ள பலரும் வரவேற்று வருவதுடன் மசூதிகள் மீதான காவி கும்பலின் தாக்குதலுக்கான அரணாகவும் முன்னிறுத்தி வருகின்றனர். ஆனால், மசூதிகளை காவி கும்பலிடமிருந்து பாதுகாப்பதற்கு நீதிமன்றத்தை முற்றுமுழுதாக நம்புவதானது நிலைமையை மேலும் சிக்கலானதாக மாற்றும் என்பதே கடந்த கால அனுபவமாகும். இதற்கு ஓர் அனுபவத்தையும் எடுத்துகாட்ட முடியும்.
1990-இல் பாபர் மசூதி, ராமன் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி, ரத யாத்திரை மூலம் இந்தியாவெங்கும் கலவரங்களை நடத்தி பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது ஆர்.எஸ்.எஸ். காவி படை. அதனையடுத்துதான், 1991-இல் நரசிம்மராவ் ஆட்சியில் வழிபாட்டுத்தலங்கள் மீதான சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. “இந்தியாவில் உள்ள எந்த மதத்தைச் சேர்ந்த மத வழிபாட்டுத் தலமானாலும், அது 1947 ஆகஸ்ட் 15 ‘சுதந்திர’ தினத்தன்று எப்படி இருந்ததோ யாருக்கு உரிமையாய் இருந்ததோ அதன்படியே தொடர வேண்டும். யாரும் அதை மறுத்து அதற்கு முன்பிருந்த நிலைமைகளைக் கூறி உரிமை கோர முடியாது” என்று அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
படிக்க: பாபர் மசூதி இடிப்பு: வரலாறு சொல்லும் புகைப்படங்கள்! | மீள்பதிவு
2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபோதும், “1991-ஆம் ஆண்டு சட்டப்படியே வழிபாட்டுத் தலங்கள் பற்றிய உரிமைப் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும். அச்சட்டத்தின்படி பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும் வழக்கு என்பதால் அது விதிவிலக்கானது. ராமர் கோவில் கட்டுவதற்கான தீர்ப்பை இனிவரும் காலங்களில் நீதிமன்றங்களில் முன்னுதாரணமாகக் காட்ட முடியாது” என்றே வலியுறுத்தப்பட்டது.
ஆனால், 2021-ஆம் ஆண்டு காவி கும்பலானது வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் உள்ளே சிவலிங்கம் இருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட், 1991 வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டத்தை மீறி, அவரவர் மதங்களைப் பற்றிய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உரிமை உண்டு என்று காவி கும்பலின் கர சேவைக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கினார். அதன் மூலம் காவி கும்பல் ஞானவாபி மசூதியில் வழிபாட்டு உரிமையைப் பெற்றது.
மேலும், ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் ஷெரிப் தர்கா முதல் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஷாகி ஜமா மசூதி வரை நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளிலும் லிங்கம் சிலை உள்ளது, கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது எனக்கூறி மசூதிகளை ஆய்வு செய்ய வேண்டுமென இந்தியா முழுவதும் நீதிமன்றங்களில் ஏராளமான மனுக்களையும் தாக்கல் செய்தது. அதனடிப்படையிலேயே தற்போது அடுத்தடுத்த மசூதிகள் குறிவைக்கப்பட்டு வருகிறது.
மசூதிகளை பாதுகாப்பதற்கு நீதிமன்றங்களை முற்றுமுழுதாக நம்புவதனால் ஏற்பட்ட ஆபத்தான விளைவு இதுவே ஆகும். வழிபாட்டு தலங்களுக்கு அரண் என சொல்லப்பட்ட 1991 வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பே சந்திரசூட் போன்ற கரசேவகர்களால் இன்று ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதெனில், நேற்று உச்சநீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை நினைத்து நாம் நிம்மதி பெருமூச்சு விட முடியாது. சொல்லப்போனால், பாபர் மசூதி முதல் ஞானவாபி மசூதி வரை மசூதிகளை இடித்துத்தள்ளும் காவி கும்பலின் நோக்கத்திற்கு பக்கபலமாக இருந்தது இந்திய நீதித்துறைதான் என்பதே வரலாறு.
எனவே காவி பாசிச கும்பலுக்கு எதிராக பிற தரப்பு உழைக்கும் மக்களை இணைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் இறங்குவதன் மூலம் மட்டுமே வழிபாட்டு தலங்கள் மீதான தங்களின் உரிமையை இஸ்லாமிய மக்களால் நிலைநாட்டிக்கொள்ள முடியும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram