இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தகுதித்தேர்வாக நீட் தேர்வு 2013-ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 03.05.2026 அன்று நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் உள்ள 22.8 இலட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.
ஒருவழியாகத் தேர்வை முடித்து விட்டோம் என்று நிம்மதி அடைந்த ஒருசில நாட்களிலேயே மே 8 அன்று வினாத்தாள் கசிந்தது பற்றிய செய்தி வெளியானது. இதன் காரணமாக இத்தேர்வை இரத்து செய்வதாக மே 12-ஆம் தேதி அறிவித்த தேசியத் தேர்வு முகமை (NTA), நீட் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடத்தப்போவதாகப் பின்னர் அறிவித்தது.
இந்நிலையில் இத்தேர்வு இரத்து செய்யப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மே 16 அன்று ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் 22 வயதான பிரதீப் மேக்வால் தற்கொலை செய்து கொண்டார். இவர் மூன்று ஆண்டுகளாக நீட் தேர்விற்குத் தயாராகி வந்துள்ளார். இந்த ஆண்டு நிச்சயம் முன்னணி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்துள்ளார்.
இதேபோல்,மே 15 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரைச் சேர்ந்த 21 வயதான ரித்திக் மிஸ்ரா என்னும் மாணவர் தேர்வு இரத்து செய்யப்பட்டதால் தனது மூன்றாண்டு உழைப்பு வீணானதை ஏற்கமுடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லி அஸாத்பூரைச் சேர்ந்த 20 வயதான அன்ஷிகா பான்டே, கடந்த 2025-ஆம் ஆண்டே நடைபெற்ற நீட் தேர்வில் வெறும் 4 மதிப்பெண்களில் தனது மருத்துவக் கனவைத் தவற விட்டார். இந்தாண்டு தனது மூன்றாவது முயற்சியாகத் தேர்வு எழுதியிருந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் காரணமாக மே 15 அன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதேபோல், மே 14 அன்று கோவாவைச் சேர்ந்த 17 வயதான மாணவர் ஒருவர் ஹாக்கி விளையாட்டின் மீதிருந்த தனது ஆர்வத்தை ஒதுக்கி வைத்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டிய சூழலில் கடுமையான மன அழுத்தத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மே 24-ஆம் தேதி கர்நாடக மாநிலம் கலபுரகியில் 18 வயதான பாக்கியஸ்ரீ என்னும் மாணவி பண்ணிரெண்டாம் வகுப்பையும் நீட் தேர்வுக்கான பயிற்சியையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜூன்-ஜூனுவைச் சேர்ந்த, பிரதீப் என்ற மாணவரின் தந்தை ராஜேஷ் குமார் தனது மகன் படித்த வேதியியல் புத்தகத்தைக் கட்டியணைத்து முத்தமிட்டு “ஓ மஹாரோ பேட்டா… ஓ மஹாரோ டாக்டர் பேட்டா… வாபஸ் ஆ ஜா. தாரி கிதாபன் தானே புலா ரி ஹைன். அப் மெயின் இன்கா க்யா கருன்?” என்று அவர் ராஜஸ்தானி வட்டார வழக்கில் கத்தி கதறி அழுதார். அவரது வார்த்தைகளின் பொருள்: “என் மகனே… என் டாக்டர் மகனே… திரும்பி வா. உன் புத்தகங்கள் உன்னை அழைக்கின்றன. இப்போது அவற்றை வைத்து நான் என்ன செய்வேன்?” என்று ஒரு எழுத்து கூட எழுத, படிக்கத் தெரியாத பிரதீப்பின் தந்தை கதறி அழுதார். அவரது வீடு தகரக்கூறைகளால் வேய்ந்த ஒரே ஒரு அறையையும், குறுகலான சமையலறையையும் கொண்ட சிறிய கொட்டகை போன்று இருக்கும். பிரதீப்பிற்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
தேர்வுக்குப் பிறகு தனது மகன் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தான். “அவன் தேர்வு அறையிலிருந்து வெளியே வந்தவுடன், என்னைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர்விட்டு அழுதபடி, ‘அப்பா, இந்த முறை நான் ஒரு மருத்துவர் ஆகிவிடுவேன்,’ என்று கூறினான்,” என பிரதீப்பின் தந்தை நினைவு கூர்கிறார்.
தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட விடைக்குறிப்பின்படி, பிரதீப் 650-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். பிரதீப்பின் வெற்றி கடின உழைப்பால் மட்டும் வரவில்லை. உயர்நிலைப் பள்ளியின் இறுதி இரண்டு ஆண்டுகள் உட்பட, ஐந்து ஆண்டுகளை அவர் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவதற்காகச் செலவிட்டார். அங்கு, மூன்று ஆண்டுகளில் அவர் பயிற்சி பெற 5 லட்சம் ரூபாய்க்கும் (5250 டாலர்) மேல் செலவானது. தன் மகனின் பயிற்சிக்கும், அவன் மருத்துவராக வேண்டும் என்ற கனவிற்கும் நிதி திரட்டுவதற்காக, கூலித் தொழிலாளியான ராஜேஷ், தனது பரம்பரை நிலத்தை விற்று, தன் சேமிப்பு முழுவதையும் செலவழித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறு சூளை ஒப்பந்தக்காரரும், ரித்திக் மிஸ்ராவின் தந்தையுமான அனோக் மிஸ்ரா, தன் மகனைப் போன்ற மாணவர்களை இந்த அமைப்பு கைவிட்டுவிட்டதாகக் கூறுகிறார். பல ஆண்டு கடின உழைப்புக்குப் பிறகு, இந்த ஆண்டு தேர்வை எழுதிய பின்னர் தனது மகன் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி வெளியானதும், அவர் தற்கொலை செய்துகொண்டார்.
“மக்கள் இதைத் தற்கொலை என்று கூறலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, இது அரசின் அலட்சியம் மற்றும் தோல்வியால் ஏற்பட்ட ஒரு திட்டமிட்ட படுகொலை” என்று ரித்திக்கின் தந்தை மிஸ்ரா கூறுகிறார்.
படிக்க: மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு திறமையின் அடையாளமா?
இதுபோல் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட ஒவ்வொரு மாணவர்களின் குடும்ப சூழ்நிலைகளும் நமது உள்ளத்தை உலுக்குகிறது. ஒவ்வொரு மாணவரும் குறைந்தது இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகள் வரை நீட் தேர்வுக்காகச் செலவிட்டுள்ளனர். இவ்வாறு பல ஆண்டுகள் தங்களது கனவுக்காகக் கடன் வாங்கி நகை, நிலம் ஆகியவற்றை விற்றோ அல்லது அடகு வைத்தோ இந்த முறை கண்டிப்பாக மருத்துவராகி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த மாணவர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இத்தனை மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது நீட் வினாத்தாள் கசிவும், அதற்குக் காரணமான தேசியத் தேர்வு முகமையும்.
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த ஆண்டிலிருந்தே பல்வேறு காரணங்களால் மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 32 மாணவர்களும் (2018 ஆம் ஆண்டில் 11 மாணவர்கள், 2019-இல் 7 மாணவர்கள், 2020-இல் 14 மாணவர்கள்), 2021 முதல் 2026 வரை 93 மாணவர்களும் (2021-இல் 4 மாணவர்கள், 2022-இல் 9 மாணவர்கள், 2023-இல் 15 மாணவர்கள், 2024-இல் 19 மாணவர்கள், 2025-இல் 32 மாணவர்கள், 2026-இல் ஜனவரி முதல் மே வரை மட்டும் 14 மாணவர்கள்) நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2017 முதல் 2026 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நீட் தேர்வுகளிலே 2025-இல் தான் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், பதிவு செய்யப்படாதவற்றையும் சேர்த்தால் எண்ணிக்கை இதைவிட ஆதிகமாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பல மாணவர்கள் 6 முதல் 8-ஆம் வகுப்பிலிருந்தே பயிற்சி மையங்களில் சேர்ந்து நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகின்றனர். இன்னும் பல மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை முடித்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தங்களது குடும்ப பொருளாதார சூழலுக்கேற்ப பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். அதிக மதிப்பெண் பெற முடியாத நிலையில் பயிற்சியைத் தொடர முடியாமல் வேறு படிப்பைத் தேர்வு செய்து செல்கின்றனர்.
நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்றது. தற்போதுள்ள நடைமுறையில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் நீட் தேர்வை எழுதலாம் எனும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாகவே எந்த மாணவரும் பயிற்சி மையங்கள் துணையின்றி நீட் தேர்வில் வெற்றி பெறமுடியாது என்னும் நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கச் சாதகமான சூழல் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பயிற்சி மையங்கள் நீட் தேர்வை ஒரு பொறியாகப் பயன்படுத்தி லட்சக்கணக்கான மாணவர்களை அதில் சிக்கவைத்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
இதில் சிக்கும் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம், அவர்களது சகோதர சகோதரிகளின் எதிர்காலம், குடும்பத்தின் அல்லது பரம்பரையின் மொத்த சேமிப்பு என மொத்தத்தையும் கொடுத்தாலும் போதாமல் அவர்களது உயிரையும் கேட்கிறது தனியார் பயிற்சி மையங்களின் இலாப வெறி.
இவையெல்லாம், இன்று பணம் இல்லாதவனுக்குக் கல்வி இல்லை, சூத்திரனுக்குக் கல்வி இல்லை என்னும் கார்பரேட் மற்றும் பார்ப்பனிய – சனாதனக் கொள்கை கல்வியில் நிலைநாட்டப்பட்டு வருவதன் விளைவாகும். அதற்கான கருவிதான் நீட் தேர்வாகும்.
இந்தக் கொள்கையை மேலும் வலுவாக்கவே மருத்துவத் துறையில் தேசிய உரிமத் தேர்வு (NEXT) என்னும் தேர்வும் திணிக்கப்படுகிறது.
இன்று வினாத்தாள் கசிவிற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும், கல்வித்துறை தனியார்மயப்படுத்துவதை கைவிட வேண்டும், உயர்கல்வி ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து (concurrent list) மாநிலப் பட்டியலுக்கு (state list) மாற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்வைத்து, சூத்திரனுக்குக் கல்வி இல்லை எனும் பார்ப்பன நீதியை நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வியில் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டங்களாக வளர்த்தெடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
சித்தன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











