கோவை மாவட்டம் கோவைப்புதூர் பாரூக் நகரைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு என்பவரின் மூத்த மகளான அனு கீர்த்தனா, எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் மருத்துவராகி ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவோடு நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் அதில் தோல்வியடைந்த நிலையில், கடந்த மே 3 அன்று மூன்றாவது தேர்வு எழுதிவிட்டு, மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக ஆர்வத்துடன் காத்திருந்துள்ளார்.
ஆனால், வினாத்தாள் கசிவின் காரணமாக தேர்வு இரத்து செய்யப்படுவதாகவும், ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை கடந்த மாதத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பு தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதுடன், பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
அனுகீர்த்தனாவும் மறுதேர்வு எழுதினால் தேர்ச்சி பெற முடியுமா என்ற அச்சத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 16 அன்று நள்ளிரவு, “நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர காத்திருந்தேன். தற்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு பயமாக இருக்கிறது. எனக்காக தந்தை அதிகளவில் செலவு செய்துள்ளார். அவருடைய முகத்தை இனிமேல் எப்படி பார்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை” என்று தன்னுடைய சித்தப்பா மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் உருக்கமான குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தலைவலி தைலத்தைக் குடித்துள்ளார்.
குறுஞ்செய்தியைப் பார்த்து பதறியடித்துக் கொண்டு மாணவியின் வீட்டிற்கு சென்ற சித்தப்பா மற்றும் உறவினர்கள் மயங்கிக் கிடந்த மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
படிக்க: நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிறு
இதனையடுத்து, நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் 100-க்கும் மேற்பட்ட சி.பி.எம். கட்சியினர், மருத்துவமனை வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வரை உடலை பெற மாட்டோம் என போராடியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் மற்றும் போலீசு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய மாணவியின் தந்தை, “அனிதாவில் துவங்கிய நீட் தேர்வு மரணங்கள் என் மகள் அனு கீர்த்தனா உடன் முடிய வேண்டும். மருத்துவக் கனவுகளோடு இருக்கும் குழந்தைகளுக்கு நீட் தேர்வு மன உளைச்சலை தந்து வருகிறது. ஏராளமான குழந்தைகள் இறப்பிற்கு காரணமான தேர்வை இரத்து செய்ய வேண்டும்“ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவித்ததிலிருந்து, மறு தேர்வு அச்சத்தால் இந்தியா முழுவதும் குறைந்தது 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்த ரேணு மீனா, டேராடூனைச் சேர்ந்த ரியா குமாரி தாபா, சீகார் பகுதியை சேர்ன்ஹ பிரதீப் மஹிச் மற்றும் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனுகீர்த்தனா என கடந்த நான்கு நாட்களில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தகுதியான மருத்துவர்களை உருவாக்கப் போவதாகக் கூறி பா.ஜ.க. கும்பலால் இந்தியா முழுவதும் திணிக்கப்பட்ட நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் மோசடி – முறைகேடுகள் அம்பலப்பட்டு நாறுகின்றன. பயிற்சி மையங்களும், தேர்வை நடத்தும் தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்களும் கொள்ளையடிப்பதற்கான சந்தையாக இத்தேர்வு விளங்கிக் கொண்டிருக்கிறது. இக்கொள்ளைக்காக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு செத்து மடிகின்றனர். உண்மையில் இது பாசிச மோடி அரசால் நிகழ்த்தப்படும் பச்சைப் படுகொலையாகும்.
ஆகவே, நீட் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்வதன் மூலமே மாணவர்களின் உயிர்கள் குடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும். அந்தவகையில், நீட் வினாத்தாள் கசிவு, எஸ்.எஸ்.சி.ஜி.டி. தேர்வு முறைகேடுகள், சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு குளறுபடிகளுக்கு எதிராக நடக்கும் மாணவர் போராட்டங்கள் இத்தகைய நுழைவுத் தேர்வுகளையும் ‘தகுதி’த் தேர்வுகளையும் இரத்து செய்யக் கோரி பாசிச மோடி அரசை நிர்பந்திக்கும் வகையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











