சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு குளறுபடிகள்: தேர்வு சந்தைமயமாக்கலின் விளைவு!

மோடியின் ஆட்சியில் “தேர்வு” என்பதே பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, கொள்ளையடிப்பதற்கான சந்தையாக்கப்பட்டு, அதற்கு மாணவர்கள் பலிகொடுக்கப்பட்டு வருகின்றனர்.

டந்த மாதம் வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த பாதிப்பிலிருந்து மாணவர்கள் மீள்வதற்குள் தற்போது சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE – Central Board of Secondary Education) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளிலும் முறைகேடு நடந்துள்ளது. இதன் மூலம், பாசிச பா.ஜ.க. அரசு மாணவர்களை மேலும் மன அழுத்தத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ளது.

இந்தாண்டு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 18 லட்சம் மாணவர்களின் 98 லட்சம் விடைத்தாள்கள் சமர்ப்பிக்கப்பட்டிருத்தன. இந்த விடைத்தாள்களை வழக்கமாக மதிப்பீட்டாளர்கள் கைகளால் திருத்துவதற்கு பதிலாக, அவை ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்பட்டு ஆன்லைனில் (OSM – On-Screen Marking) மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் “கோஎம்டி எடுடெக் பிரைவேட் லிமிடெட்” (Coempt Eduteck Private Limited) என்ற தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மே 13-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான போது தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 88.39 சதவிகிதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 85.29 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் குளறுபடிகளால் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்காகத் தங்களது விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளைக் கோரியுள்ளனர். அதில் மங்கலான ஸ்கேன்கள், படிக்கவே முடியாத கையெழுத்துகள், வெட்டப்பட்ட பக்கங்கள் மற்றும் புரிந்துகொள்ள முடியாத வரைபடங்கள் மற்றும் சமன்பாடுகளைக் கண்டு மாணவர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

12-ஆம் வகுப்பு மாணவரான வேதாந்த் ஸ்ரீவஸ்தவாவிற்கு இயற்பியல் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை. இதுகுறித்து சி.பி.எஸ்.இ-யிடம் முறையிட்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் மறுமதிப்பீடுக் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்து விடைத்தாளைப் பெற்றுள்ளார். ஆனால், அவருடைய விடைத்தாளுக்கு பதிலாக வேறு மாணவரின் விடைத்தாள் மாற்றி பதிவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு எந்த விளக்கத்தையும் சி.பி.எஸ்.இ. அளிக்கவில்லை. இதனால் எக்ஸ் தளத்தில் புதிய கணக்கைத் தொடங்கி தனக்கு நேர்ந்த அநீதி குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவருடையப் பதிவில் இருப்பிடம் (Profile) தெற்காசியா என்று காட்டியதை வைத்துக்கொண்டு அவரை ‘பாகிஸ்தானி’ என்றும் ‘தேசவிரோதி’ என்றும் சங்கி கும்பல் முத்திரைக் குத்தியது.

இதற்குப் பின்னரே இச்சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்தது. மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து குளறுபடிகள் குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். மாணவர்களின் எதிர்ப்பிற்கு அடிபணிந்த சி.பி.எஸ்.இ. தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு வேதாந்தின் உண்மையான இயற்பியல் விடைத்தாளை தேடி அவருக்கு அனுப்பியது. அவருடைய மதிப்பெண்கள் சரியான முறையில் திருத்தப்படும் என்று உறுதியளித்தது.

மத்திய டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 19 ஆண்டுகளாக அரசியல் அறிவியல் பாடம் கற்பித்து வரும் ஸ்துதி கூறுகையில், “எனது மிகச் சிறந்த மாணவிகளில் ஒருவருக்கு ஏற்கெனவே ஒரு ஐவி லீக் (Ivy League) பல்கலைக்கழகத்தில் தற்காலிக சேர்க்கை (Provisional Admission) கிடைத்துள்ளது. அவர் தனது சேர்க்கையை உறுதிப்படுத்த குறைந்தது 90 சதவிகித மதிப்பெண்கள் பெறுவார் என்று எதிர்பார்த்தார், ஆனால் அவருக்கு 82 சதவிகிதம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த மதிப்பெண் குறைவிற்கு, தனது அரசாங்கத்தால் ஒரு முக்கியமான தேர்வைச் சரியாக நடத்தவோ அல்லது மதிப்பீடு செய்யவோ முடியாததுதான் காரணம் என்று அவர் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடைசித் தேர்வு முடிந்த 10 முதல் 12 நாட்களுக்குள் திருத்தப் பணி தொடங்கப்படும் நிலையில், இந்தாண்டு ஒரு மாதம் வரை தொடங்கப்படவில்லை. முடிவுகள் வெளியிடப்பட வேண்டிய மே 13 அன்று காலையில் சில விடைத்தாள்களைத் திருத்தி முடிக்குமாறு ஆசிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு வகையிலான முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

மதிப்பெண் கூட்டல் பிழைகளைத் தவிர்ப்பது, முடிவுகளுக்குப் பிந்தைய மதிப்பெண் சரிபார்ப்பை ஒழிப்பது (Revaluation) போன்ற காரணங்களை கூறிதான் இந்தாண்டு “ஓ.எஸ்.எம்.” (OSM) திருத்த முறையை சி.பி.எஸ்.இ. முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. ஆனால், போதிய கால அவகாசம் கொடுக்காமல், தேர்வு தொடங்குவதற்கு வெறும் பத்து நாட்களுக்கு முன்புதான் பள்ளிகளுக்கு இந்த புதிய ஓ.எஸ்.எம் முறை பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே தேர்வு முடிவு குளறுபடிகளுக்கு முக்கியக் காரணமாகும்.


படிக்க: நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிறு


குறிப்பாக, ஓ.எஸ்.எம். முறையிலான திருத்தம் செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்ட “கோஎம்டி எடுடெக்” என்ற தனியார் நிறுவனம் ஏற்கெனவே மோசடி – முறைகேடுகளில் ஈடுபட்ட நிறுவனமாகும். 2019-ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநில இடைநிலைக் கல்வி வாரியத்தின் தொழில்நுட்பப் பங்காளராக இந்நிறுவனம் செயல்பட்டது. அந்த ஆண்டில், சுமார் 3.8 லட்சம் மாணவர்களுக்குத் தவறான அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் 23 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது “கிளோபரேனா டெக்னாலஜீஸ்” (Globarena Technologies) என்ற பெயரில் செயல்பட்ட இந்நிறுவனம் மிக சமீபத்திலேயே தனது பெயரையும் அடையாளத்தையும் கோஎம்டி எடுடெக் என மாற்றிக்கொண்டுள்ளது.

இத்தகைய பேரழிவுமிக்க தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனத்திற்குதான் நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. விடைத்தாள்களை திருத்துவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் பணியின் போது இரண்டு சுற்றுகளில் இந்நிறுவனம் தோல்வியடைந்த நிலையில், கடைசி நேரத்தில் டெண்டருக்கான விதிகள் இரகசியமாக திருத்தப்பட்டு, மூன்றாவது முயற்சியில் இந்நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனை 17 வயதான 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

சி.பி.எஸ்.இ. விடைத்தாள் திருத்தப் பணியானது பழைய பாணியில் ஆண்டுதோறும் எந்தப் பிரச்சினையுமின்றி நடைபெற்று வந்த நிலையில், திடீரென டிஜிட்டல் திருத்த முறையை கொண்டுவந்து, அதில் முறைகேடான தனியார் நிறுவனத்தை உள்நுழைக்க வேண்டிய அவசியம் என்ன?

பாசிச மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் உயர்கல்வி படிப்புகள் அனைத்திற்கும் நுழைவுத் தேர்வுகள், ‘தகுதி’த் தேர்வுகள் திணிக்கப்பட்டு வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு தேர்வுகளை நடத்துவதற்கான பொறுப்பு தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்படுகின்றன. இத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் கார்ப்பரேட்டுகள் கொடிக்கட்டி பறக்கின்றன. இவ்வாறு, மோடியின் ஆட்சியில் “தேர்வு” என்பதே பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, கொள்ளையடிப்பதற்கான சந்தையாக்கப்பட்டு, அதற்கு மாணவர்கள் பலிகொடுக்கப்பட்டு வருகின்றனர்.

உயர்கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நடக்கும் இக்கொள்ளையை பள்ளிக்கல்வியிலும் நடத்தும் வகையிலேயே சி.பி.எஸ்.இ. திருத்தப்பணியை டிஜிட்டல்மயமாக்குகிறோம் என்ற பெயரில் அதில் தனியார்மயம் உள்நுழைக்கப்பட்டுள்ளது. தற்போதும், திருத்தப் பணியில் நடந்த மோசடிகள் குறித்து பேசப்படும் அளவிற்கு கோஎம்டி எடுடெக் நிறுவனம் குறித்து பேசப்படுவதில்லை. இதன் மூலம், மாணவர்களின் எதிர்ப்பை மழுங்கடித்துவிட்டு அடுத்த ஆண்டு மீண்டும் தனியார் நிறுவனத்தின் மூலம் திருத்தப் பணியை மேற்கொள்ளவே மோடி அரசு முயற்சிக்கும். இது மாநில பொதுத் தேர்வுகளிலும் விரிவுப்படுத்தப் படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

எனவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகள் முற்றிலுமாக இரத்து செய்யப்பட்டு, பழைய பாணியில் திருத்தம் செய்து அதன் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். மாணவர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில் உயர்கல்வி நிறுவனங்களுடனான ஒத்திசைவுடன் இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

முறைகேட்டில் ஈடுபட்ட கோஎம்டி எடுடெக் நிறுவனத்தின் உரிமம் இரத்து செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வி தேர்வுகளில் எந்த வகையிலும் தனியார் நிறுவனங்கள் உள்நுழைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

கல்வியின் ஒவ்வொரு அம்சத்தையும் சந்தையாக மாற்றி கொள்ளையடித்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பலை விரட்டியடித்து, மக்கள் – மாணவர் நலனை அடிப்படையாக கொண்ட கல்வியை வழங்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்று கட்டமைப்பிற்காக போராட வேண்டும்.

அந்தவகையில், நீட் வினாத்தாள் கசிவு, எஸ்.எஸ்.சி. ஜி.டி தேர்வு முறைகேடு, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் குளறுபடி ஆகியவற்றிற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடந்துவரும் மாணவர்களின் போராட்டம், கல்வி கார்ப்பரேட்மயமாக்கலுக்கு எதிராகவும், அதனை தீவிரப்படுத்தி வருகின்ற பாசிச மோடி அரசுக்கு எதிராகவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.


இன்குலாப், சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க