இம்மாதம் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் விலை கண்காணிப்பு பிரிவு வெளியிட்ட தரவுகளின்படி நாடு முழுவதும் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தக்காளியின் விலை சில்லறை சந்தையில் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. வெங்காயம், உருளைக்கிழங்கின் விலையும் ₹ 3 முதல் ₹ 5 வரை உயர்ந்துள்ளது.
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் சரியான விலையை உறுதி செய்வதே தங்களின் “முதன்மையான முன்னுரிமை” என்று ஒன்றிய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், மறுபுறம், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், சில்லறை விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு அரசின் தோல்வியைக் காட்டுவதாகவும் விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
விலை கண்காணிப்புப் பிரிவு பொதுவெளியில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஜூன் 17 ஆம் தேதி அன்று டெல்லியில் ஒரு கிலோ தக்காளியின் சில்லறை விலை ₹53 ஆக இருந்தது. இதுவே மே 17, அன்று ₹30 ஆகவும், ஜூன் 10, அன்று ₹31 ஆகவும் இருந்தது. இதேபோல், டெல்லியில் ஜூன் 17 அன்று ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ₹32 ஆக இருந்தது; இது அதற்கு முந்தைய வாரத்தை விட ₹5 அதிகமாகும்.
அந்தமான் நிகோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், நாகாலாந்து, சண்டிகர், லடாக் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைத் தவிர, மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த வாரத்தில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. இதில் மிக அதிகபட்ச விலையேற்றம் டெல்லியில்தான் பதிவாகியுள்ளது.
தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு மட்டுமின்றி, டெல்லி மற்றும் சில முக்கிய நகரங்களில் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு, கடுகு எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.
ஒன்றிய அரசின் கொள்கைகளே இந்த பணவீக்கத்திற்குக் காரணம் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது குறித்து “சம்யுக்த கிசான் மோர்ச்சா” தலைவரும், “அகில இந்திய கிசான் சபா” தலைவருமான அசோக் தவாலே கூறுகையில்: “இந்த விலை உயர்வு ஒரு மிகப்பெரிய முரண்பாடாகும். சில்லறை விற்பனை விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றன; அதே நேரத்தில் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விலையேற்றத்தால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை, மாறாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரிய வர்த்தகர்களுமே லாபம் அடைகின்றனர். தங்களது லாபத்தைப் பெருக்குவதற்கு ஆளுங்கட்சியின் ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “எரிபொருள் விலை உயர்விற்குப் பிறகு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வெங்காயம் மற்றும் தக்காளியை சந்தைக்குக் கொண்டு செல்வதற்குக் கூட பணம் இல்லை. அவர்கள் தங்களது விளைபொருட்களை அழித்து வருகிறார்கள். உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற உருளைக்கிழங்கு விளைவிக்கும் மாநிலங்களிலும், விவசாயிகளுக்கு ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கு ₹2 அல்லது ₹3 மட்டுமே கிடைப்பதால் அவர்கள் கடும் துயரத்தில் உள்ளனர். ஆனால் நுகர்வோரோ மிக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது,” என்று தெரிவித்துள்ள விவசாயத் தலைவர் தவாலே ஒன்றிய அரசு விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உடனடியாக உ தவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததற்கு எந்தவித விளக்கத்தையும் அளிக்காத ஒன்றிய மோடி அரசு, “மோசமான வானிலை, அதிக மகசூல், அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்குக் குளிரூட்டப்பட்ட குடோன்கள் இல்லை” என்று விவசாயிகள் பாதிக்கப்படும் போதெல்லாம் கூறுகின்ற அதே காரணத்தைத்தான் தற்போதும் கூறியுள்ளது.
ஆனால் இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் விவசாயிகளிடமிருந்து பெறுகின்ற உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்குக் கொள்முதல் நிலையங்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் அமைத்துக் கொடுக்கவில்லை. அவற்றைக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு அதிநவீன வசதியுடன் குளிரூட்டப்பட்ட குடோன்களையும் ஒன்றிய மோடி அரசு அமைக்கவில்லை.
இதன் விளைவாக அறுவடை செய்த உணவுப் பொருட்களை உடனடியாக இடைத்தரகர்களிடம் மிகக் குறைந்த விலையில் விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளிடமிருந்து பெறப்படுகின்ற உணவுப் பொருட்கள் கார்ப்பரேட் நிறுவனங்களினால் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
அதாவது திட்டமிட்டே கொள்முதல் நிலையங்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட குடோன்களை அமைக்காமல், உணவுப் பொருட்களின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காக விவசாயிகளின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.
முக்கியமாக விவசாயத் துறையையே கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக இந்தியாவில் உணவு தானியங்களைச் சேமித்து வைப்பதற்கான அதிநவீன சேமிப்புக் கிடங்குகளை (Silos – சிலோஸ்) கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் அதானி அக்ரோ லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் (Adani Agro Logistics Ltd ), லீப் இந்தியா புட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Leap India Food & Logistics Pvt Ltd) ஆகிய நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்திய உணவு கழகம் (FCI – Food Corporation of India) 16,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே விவசாயத்துறையை கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பதற்காக பாசிச மோடி அரசு கொண்டு வருகின்ற கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும் உழைக்கும் மக்களும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற முடியும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











