நக்சல்பாரிப் புரட்சியாளர்
தோழர் கதிரவனுக்கு
சிவப்பஞ்சலி!
14.07.2026
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முதல் மாநிலச் செயலாளரும், பின்னர் இணைச் செயலாளராகவும் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த மூத்த நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவன் (வயது 81), வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்காக மதுரையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 13-07-2026 அன்று காலை 11.30 மணியளவில் காலமானார். தனது வாழ்நாளை உழைக்கும் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த தோழருக்கு சிவப்பஞ்சலி செலுத்துகிறோம்.
1945-ஆம் ஆண்டு சாதியாதிக்கம் ஆழமாக வேரூன்றிய உசிலம்பட்டி வட்டாரத்தின் ஆரியப்பட்டி கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஆதிக்கச் சாதிப் பின்னணி கொண்ட சின்னவீரன் மற்றும் சந்தானம் இணையரின் மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு நான்கு இளைய சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.
சிவகங்கை மன்னர் அரசு கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்ற அவர், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். வானம்பாடி கவிஞர்களில் ஒருவரான மீ.ரா.வின் மாணவர். இவரது காலத்தில், தோழர் ஏ.எம்.கோதண்டராமன், தோழர் தா.பாண்டியன் ஆகியோருடன் அரசியல் விவாதங்களைச் செய்துள்ளார்.
கல்லூரியில் பயின்ற காலத்திலேயே திராவிட இயக்கச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்ட மாணவர் தலைவராகச் செயல்பட்டார். வியட்நாமியப் புரட்சித் தலைவர் ஹோ சி மின் மறைந்தபோது அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கல்லூரிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று இலக்கிய மன்றத் தலைவர் என்ற முறையில், முதல்வரிடம் நீண்ட நேரம் வாதாடிய நிகழ்வு, அவரது இளமைக்கால ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது.
பின்னர் மதுரையில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். வழக்கறிஞரானாலும் இவர் அமைப்பு தேவைக்காக சில நேரங்களில் அமைப்பு வழக்குகளை எடுத்துவாதிட்டுள்ளார். இருப்பினும், அரசியலையே தனது முழுநேர வாழ்க்கையாக தேர்வு செய்தார்.
000
தொடக்கத்தில், தி.மு.க. ஆதரவாளராக இருந்த தோழர் கதிரவனின் அரசியல் பயணத்தில் கீழ்வெண்மணிப் படுகொலை ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கூலி உயர்வு கேட்டுப் போராடிய விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டபோது, “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று அண்ணா அளித்த பதிலை அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆளும் வர்க்க அரசியலின் வரம்பை உணர்ந்து கம்யூனிச இயக்கத்தை நோக்கி வந்தார்.
உசிலம்பட்டி வட்டாரத்தில் தண்ணீர்ப் பிரச்சினை தீவிரமாக இருந்தது. அப்போது இப்பிரச்சினையில் சி.பி.எம். மற்றும் அதன் விவசாய சங்கம் நடத்திய போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு சிபிஎம் கட்சியில் இணைந்தார். மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அக்கட்சியின் பி. ராமமூர்த்தி போட்டியிட்டபோது, அத்தேர்தலில் அவருடைய நேரடி செயலாளரைப் போல இருந்து களப்பணியாற்றினார்.
ஆனால், சி.பி.எம். கடைப்பிடித்த திருத்தல்வாத அரசியலோடு சமரசம் செய்துகொள்ள அவர் தயாராக இல்லை. 1975-ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி நக்சல்பாரிப் புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் புரட்சிகர அரசியலையும் மார்க்சிய–லெனினிய இலட்சியத்தையும் உயர்த்திப் பிடித்து வாழ்ந்தார்.
அரசியல் என்பது பதவி வகிப்பதோ மேடையில் பேசுவதோ மட்டுமல்ல; மக்களிடையே சென்று அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து அமைப்பைக் கட்டியெழுப்புவதே புரட்சிகரப் பணியின் அடித்தளம் என்பதை தனது நடைமுறையால் எடுத்துக்காட்டினார்.
ஆரியப்பட்டி அன்றைக்கு சி.பி.எம். கட்சியின் வலுவான கோட்டையாக இருந்தது. தோழர் கதிரவனின் அரசியல் தலைமையிலும் அப்பகுதித் தோழர்களின் அயராத உழைப்பிலும் அது நக்சல்பாரிப் புரட்சிகர அமைப்பின் செல்வாக்குமிக்க தளமாக மாற்றப்பட்டது. இதனால், எமது அமைப்பை, “ஆரியப்பட்டி கட்சி” என்றழைக்கும் அளவுக்கு அவ்வூரில் புரட்சிகர அரசியலை வீச்சாகக் கொண்டு சென்றார்.
ராஜாங்கம், அன்னபிரகாஷ், விஜயன், கே.பி.ராமசாமி உள்ளிட்ட தோழர்களுடன் இணைந்து முதலில் நற்பணி மன்றத்தையும், பின்னர் உழவர் மன்றத்தையும் உருவாக்கிய தோழர் கதிரவன், அதன் வழியாக கிராம மக்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்ததோடு நற்பணிகளையும் அரசியல் விவாதங்களையும் தொடர்ந்து நடத்தினார். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஏராளமான இளைஞர்களைக் கூட்டி, கிராமத்தின் பிரச்சினைகள் முதல் நாட்டின் அரசியல் வரை விவாதிக்கும் நடைமுறையை உருவாக்கினார். கடன் வாங்கிய விவசாயிகளின் வீட்டை ஜப்தி செய்ய வந்த வருவாய் அதிகாரிகளிடம் சட்டரீதியாக வாதாடியும் கேள்வி கேட்டும் பின்வாங்க வைத்தார்.
இப்பணிகளின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலேயே விவசாயிகள் விடுதலை முன்னணியின் முதல் கிளை ஆரியப்பட்டியில் உருவாக்கப்பட்டது. விவசாயிகளின் உடனடிக் கோரிக்கைகளைப் புரட்சிகர அரசியலோடு இணைத்து அமைப்பாக்கியதில் தோழர் கதிரவனின் பங்கு குறிப்பிடத்தக்கது.
நிலப்பிரபுத்துவ கௌரவ மனப்பான்மையில் இருந்து தங்களுக்குள் மோதிக்கொண்ட வாலாந்தூர் நாடு – திடியன் நாடு பிரச்சினையிலும் தோழர் கதிரவன் துணிச்சலுடன் தலையிட்டார். உன் நாடு, என் நாடு அல்ல, அமெரிக்காவே உலகை ஆள்கிறது என்று சர்வதேச அரசியலை எளிமையாக விளக்கி துண்டறிக்கைகள் மூலமாக மக்களிடையே பரப்புரை மேற்கொண்டார்.
ஆரியப்பட்டியில் உருவான அமைப்பு உறுப்பினர் எண்ணிக்கையால் மட்டும் வலிமை பெற்றதல்ல. அரசியல் பணிக்காக அப்பகுதித் தோழர்கள் தங்கள் வீடுகளில் இருந்த நெல் மூட்டைகளை விற்று மைக்செட், மெகாபோன், பறை போன்ற பிரச்சாரக் கருவிகளை வாங்கினர். கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் புரட்சிகர நூல்களை எடுத்துச் சென்று விற்று அமைப்புக்கு நிதி திரட்டினர். தங்களிடம் இருந்ததை அமைப்பிற்கும் மக்களுக்கும் அர்ப்பணிப்பதை இயல்பான கடமையாகக் கருதும் கம்யூனிசத் தியாகப் பண்பை அந்தத் தோழர்கள் பெற்றிருந்தனர். இத்தகைய தோழர்களை அரசியல் ரீதியாக வளர்த்து, கூட்டுச் செயல்பாட்டில் வார்த்தெடுத்ததில் தோழர் கதிரவன் தீர்மானகரமான பங்காற்றினார்.
சான்றாக, ஆரியப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் 55 பேருக்கு வீடுகள் கட்டித்தரக் கோரி நடத்தப்பட்ட சாலைமறியல் போராட்டத்தில் 25 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களைப் பிணையில் எடுப்பதற்கான சான்றுகளில் கையெழுத்திட மறுத்த தாசில்தாரை, அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாதபடி தோழரின் தம்பியும் வி.வி.மு. உசிலை வட்டாரச் செயலாளருமான தோழர் கல்யாணி முற்றுகையிட்டு கையெழுத்து பெற்று வந்தார். அது அத்தோழரின் தனிப்பட்ட தீரத்தை வெளிப்படுத்திய நிகழ்வல்ல; தோழர் கதிரவன் தலைமையில் அப்பகுதியில் கட்டியெழுப்பப்பட்ட சாதி மதம் கடந்த அரசியல், அமைப்பின் பலம், மக்களுக்கு தொண்டு செய்வதற்கான அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.
மக்கள் கலை இலக்கியக் கழகம் தொடங்கப்பட்டபோது, அதன் முதல் மாநிலச் செயலாளராகத் தோழர் கதிரவன் பொறுப்பேற்றார். கலை இலக்கியத்தைப் பொழுதுபோக்காக அல்லாமல், மக்களை அரசியல்படுத்தும் புரட்சிகர ஆயுதமாக மக்களிடம் எடுத்துச் சென்றார். கீழ்வெண்மணி விவசாயத் தொழிலாளர்களின் போராட்டம், தொழிலாளர் வர்க்கத்தின் துயரம், பாசிச எதிர்ப்பு போன்றவற்றை மையப்படுத்திய நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு செல்வதில் முன்னின்றார். தமிழ் மக்கள் இசை விழாக்களில் பலமுறையும், இதர பண்பாட்டு நிகழ்வுகளிலும் தலைமையேற்று நடத்தினார்.
பார்ப்பன பாசிசத்தை வேரறுத்த, ம.க.இ.க.வின் கருவறை நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். சீர்காழியில் நடந்த இறால் பண்ணை அழிப்புப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தினார். தமிழ்நாடு முழுவதும் ம.க.இ.க. பொதுக்கூட்டங்களிலும் பிரச்சார நிகழ்ச்சிகளிலும் முழங்கினார். ஆதாரங்களையும் தர்க்கத்தையும் முன்வைத்து, கூர்மையான அரசியல் உணர்வுடன் பேசும் அவரது ஆற்றலால் தோழர்கள் அவரை “பிரச்சார பீரங்கி” என்று அழைத்தனர். 1989-இல் தேர்தல் புறக்கணிப்பு மாநாட்டில் இவரது உரையானது, சிக்கலான மார்க்சிய அரசியலை எளிய மக்களுக்கும் தெளிவாக உணர்த்தும் வகையில் பேசியது, பல தொழிலாளர்களால் இன்றளவும் நினைவு கூறப்படுகிறது.
சட்டக் கல்வியைத் தனிப்பட்ட தொழில் முன்னேற்றத்திற்கான கருவியாக மாற்றாமல், அமைப்பின் வழக்குகளிலும் தோழர்களைப் பாதுகாப்பதிலும் பயன்படுத்தினார்.
2020-ஆம் ஆண்டு ம.க.இ.க.வில் பிளவு ஏற்படும் வரை மாநிலச் செயற்குழுவில் பொறுப்பு வகித்தார். தலைமைக் குழுவில் தனக்கு சாதகமானவர்களைக் கூட்டி மருதையன், நாதன் கும்பல் கோஷ்டி கட்டியதையும் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் வன்மையாகக் கண்டித்தார். அக்கும்பல் ம.க.இ.க.வை விட்டு வெளியே சென்று அமைப்பை அவதூறு செய்ததை பிளவு நடவடிக்கை என்று தெளிவாக உணர்ந்தார். அக்கும்பலைப் பின்பற்றிச் சென்ற நவீன கலைப்புவாதிகளை நிராகரித்து புரட்சிகர அரசியலை உயர்த்திப் பிடித்தார். பின்னர், 2022-இல் அன்பழகன் ரசிகர்படையினர் மீண்டும் சதிவேலைகளில் ஈடுபட்ட போது, அவர்களையும் புறக்கணித்தார்.
இவ்வாறான சீரழிந்த பிரிவினர் கட்சியில் உருவாவதற்கான காரணங்களையும் அதனைக் களைவதற்கு கட்சி மேற்கொண்ட போராட்டங்களையும் அமைப்பை உறுதியாக ஆதரித்து துணையாக நின்றார். தன்னால் நடைமுறைப் பணிகளில் ஈடுபட இயலாத போதும், அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அக்கறையுடன் கேட்டு தெரிந்து கொண்டு பாராட்டி வந்தார்.
2026 மார்ச் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்தப்பட்ட, சாதி, மதம் கடந்து காதலிக்க மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம் என்ற தலைப்பிலான தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் கருத்தரங்கில் பங்கேற்று தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழ் மக்கள் இசைவிழா மீண்டும் நடக்காமல் போய்விடுமெனக் கருதி வருத்தமாக இருந்தேன்; ஆனால், இந்த தமிழ்நாடுப் பண்பாட்டுப் பெருவிழா அதன் பாரம்பரியத்தை தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கும் வகையில் அமைந்தது என தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
மதுரையில் அமைப்பைக் கட்டியெழுப்புவது, புதிய தோழர்களை வளர்ப்பது, சிக்கலான அரசியல் மற்றும் அமைப்புப் பிரச்சினைகளில் சரியான முடிவுக்கு வழிகாட்டுவது ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றினார். அமைப்பைச் சீர்குலைக்கும் கலைப்புவாதப் போக்குகளுக்கு எதிராக இறுதிவரை சமரசமின்றி நின்றார். தனிப்பட்ட உறவுகளோ அழுத்தங்களோ அவருடைய அரசியல் நிலைப்பாட்டை மாற்றிவிட முடியவில்லை.
எளிமை, நேர்மை, தோழமை, தியாகம் ஆகியவை அவரது தனிப்பட்ட வாழ்விலும் பிரிக்க முடியாத பண்புகளாக இருந்தன. ஆடம்பரமின்றி எளிமையாக வாழ்ந்தார். 01-12-1980 அன்று சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். மதச் சடங்குகளோ தாலியோ இன்றி, அமைப்புத் தோழர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று நடைபெற்ற அந்தத் திருமணம், அவர் ஏற்ற அரசியலுக்கும் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இடையே இடைவெளி இல்லை என்பதை வெளிப்படுத்தியது. அவரது இணையர் தோழர் எஸ். கலாமாலினி வேலைக்குச் சென்று குடும்பச் சுமையை ஏற்றுக்கொண்டு, தோழர் கதிரவன் முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுவதற்கு இறுதிவரை உறுதுணையாக இருந்தார்.
தோழர் கதிரவனின் பங்களிப்பை அவர் வகித்த பொறுப்புகளின் பட்டியலால் மட்டும் அளவிட முடியாது. சாதியாதிக்கம் நிறைந்த ஒரு வட்டாரத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து அமைப்பைக் கட்டியதும், சாதாரண கிராமப்புற இளைஞர்களை அரசியல் உணர்வும் கம்யூனிசத் தியாகப் பண்பும் கொண்ட தோழர்களாக வளர்த்ததும், கலை இலக்கியத்தை மக்களின் போராட்ட ஆயுதமாக மாற்றியதும் அவரது அரசியல் வாழ்க்கையின் மகத்தான பங்களிப்புகளாகும். ஆரியப்பட்டியில் அவர் தலைமையில் உருவான புரட்சிகர அமைப்புப் பண்பாடு, மக்கள்திரள் வழியில் கட்சியையும் வெகுஜன அமைப்புகளையும் கட்டியெழுப்ப விரும்பும் இன்றைய தலைமுறைக்கு முக்கியமான பாடமாகும்.
தோழர் கதிரவனின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் மட்டுமல்ல, தமிழ்நாட்டுப் புரட்சிகர அரசியலுக்கும் நமது இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தோழர் கதிரவனின் புரட்சிகர வாழ்வையும் பண்புகளையும் வரித்துக்கொண்டு, உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க உறுதியேற்போம்!
தோழர் கதிரவனுக்கு செவ்வணக்கம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மக்கள் அதிகாரக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு-புதுச்சேரி.
9962366321, 9791653200,
9444836642, 7397404242.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











