சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் கடத்தல் – தமிழ்நாட்டில் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகள்

இரண்டு கார்களில் வந்த கும்பல் அவர்களது ஆட்டோவை வழிமறித்து அஜித் குமாரை தாக்கியதுடன், அவரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளது. பின்னர் சித்திரவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண் அவரது குடும்பத்தினரால் கடத்தப்பட்டதுடன், அவரது உறவினர்கள் அவர் கணவரை சாதி ரீதியாக அவதூறாகப் பேசி  தாக்கியுள்ளனர்.

26 வயதான சித்திரவள்ளி என்பவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (MBC) சேர்ந்தவர் அவரது கணவர் அஜித்குமார் ஒரு தலித் இளைஞர். இருவரும் மணப்பாறையில் சித்திரவள்ளியின் மைத்துனர், முருகேசன் நடத்தும் கடையில் வேலை செய்து வந்தனர். அங்கு இவர்கள் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர்.

குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஜூன் 25ஆம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகினர். இரு குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்திய போலீசு, “தான் அஜித்குமாருடன் வாழ விரும்புகிறேன்” என்று சித்திரவள்ளி தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரை கணவருடன் செல்ல அனுமதித்தனர்.

இதற்கிடையில், ஜூலை 1-ஆம் தேதி, சித்திரவள்ளியின் உறவினரான முருகேசன், அஜித் குமார் தன்னை மிரட்டியதாக காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, ஜூலை 4ஆம் தேதி இரு தரப்பினரையும் விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்தனர். அஜித் குமார், சித்திரவள்ளி மற்றும் அவரது தாயார் ஆஜரான நிலையில், முருகேசன் மட்டும் வரவில்லை. விசாரணை முடிந்த பிறகு, அஜித் குமார், சித்திரவள்ளி மற்றும் அவரது தாயார் ஆட்டோவில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மரவனூர் அருகே, இரண்டு கார்களில் வந்த கும்பல் அவர்களது ஆட்டோவை வழிமறித்து அஜித் குமாரை தாக்கியதுடன், அவரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளது. பின்னர் சித்திரவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளது. இதை அஜித் குமார் மற்றும் அவரது தாயாரால் தடுக்க முடியவில்லை.

இதையடுத்து, அஜித் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பின்னர், யாகபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில்  அடைத்து வைக்கப்பட்டிருந்த சித்திரவள்ளி அங்கிருந்து மீட்கப்பட்டார். அதன் பிறகு அவர் தனது கணவருடன் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் சித்திரவள்ளியின் உறவினர்கள்  மலைச்சாமி,  முருகேசன், பிரகாஷ் மற்றும்  அமனுல்லா என்ற மாலா ஆகிய நான்கு பேரை போலீசு கைது செய்துள்ளது.


படிக்க: உ. பி: ஆதிக்க சாதிவெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்!


தமிழ்நாட்டில் சாதி ரீதியான அடக்குமுறைகள் தீவிரமாக அதிகரித்து வருகிறது. ஆனால் மிகச் சொற்பமானவர்களே தண்டிக்கப்படுகின்றனர். பல சாதி வெறியர்கள் பிணையில் வெளியே சுற்றித் திரிகின்றனர்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கும் சாதிய ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும்.

சமூகத்தில் சாதிவெறியைத் தூண்டுகின்ற ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கப் பரிவாரக் கும்பலையும் தடை செய்ய வேண்டும்.  சாதி மறுப்பு மனங்களை மக்கள் முன்னிலையில் அரசு முன் நின்று நடத்தி வைக்க வேண்டும், சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும், சாதி மதம் அற்றவர் என்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட வேண்டும், சாதி மதம் கடந்து திருமணம் செய்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக சக்திகள் களத்தில் இறங்கி போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.


ஆண்ட்ரே

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க