
27.05.2026
தவறான சிகிச்சையால் மாணவி பலி:
மருத்துவர்களின் உரிமத்தை இரத்து செய்!
பத்திரிகைச் செய்தி
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சையின் போது தவறான சிகிச்சை மற்றும் அதிகப்படியான மயக்க மருந்து (Anesthesia Overdose) அளிக்கப்பட்டதால், திருச்சி அரசு செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்து வரும் சீதாலட்சுமி எனும் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகளாகும்.
மூக்கில் சதை மற்றும் எலும்பு வளர்ச்சி பாதிப்பு (Nasal Blockage) காரணமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் (MGMGH) சேர்க்கப்பட்டார். கடந்த மே 22-23 தேதிகளில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது, மயக்க மருந்து அதிகளவு செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி அவருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதில் வயிற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளனர். மாணவி சீதா உயிரிழந்ததற்கு அரசு மருத்துவக் கல்லூரி தான் முழுக்காரணம். மேலும் மாணவியின் இறப்பினை போலீசு மற்றும் மருத்துவத்துறை நிர்வாகம் திட்டமிட்டு மூடி மறைப்பதுடன் அங்கு போராடக்கூடிய மாணவிகள் மிரட்டப்படுகின்றனர். இதனை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
உயிரிழந்த மாணவி சீதாவிற்கு நீதி கேட்டு உறவினர்களும் சக செவிலிய மாணவிகளும் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடிய விடிய நடந்த போராட்டத்தின் போது, கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் தங்களைச் செருப்பால் அடித்து மிரட்டியதாகவும் போராட்டத்தில் பங்கேற்றால் டிப்ளமோ சான்றிதழ்கள் வழங்கப்படாது என்றும், கல்லூரியை விட்டு நீக்கப்படுவீர்கள் என்றும் விடுதி காப்பாளர்களும் அதிகாரிகளும் மிரட்டியதாக மாணவிகள் குற்றம் சாட்டினர்.
தமிழ்நாடு அரசுக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
- உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்!
- தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும்!
- சீதாலட்சுமியின் கொலையை மூடிமறைக்க உடந்தையாக இருந்த போலீசு அதிகாரிகளைப் பதவிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்!
- போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது; அவர்களின் படிப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்!
![]()
இவண்
தோழர் மாறன்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை.
9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











