
08.07.2026
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பெயர் மாற்றம்:
பார்ப்பனிய சதியை நிறைவேற்றும் முதல்வர் விஜய்!
கண்டன அறிக்கை
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த எட்டு பேரை அமைச்சராக்கி உள்ளோம் என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்த தமிழக வெற்றி கழகத்தின் விஜய் தலைமையிலான அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றியுள்ளது. பார்ப்பனிய சதியை அரங்கேற்றியுள்ளது. ஜூலை 6 அன்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல ஆண்டுகளாக பார்ப்பனிய சக்திகள் ஆதிதிராவிடர் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வந்துள்ளன. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் பார்ப்பனிய சக்திகளின் அக்குரலுக்குச் செவிமடுக்கவில்லை.
முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழ்நாட்டில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டின் மரபுக்கு எதிராகவும் தமிழ்ப்பண்பாட்டைத் தாழ்த்தும் வகையிலும் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அமைதியாகக் கண்டும் காணாமல் இருந்தார்.
பார்ப்பனியத்திற்கு எதிராக “திராவிட” என்ற அரசியல் சொல்லை உயர்த்திப் பிடித்தவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்தான் தலித் மக்களை ஆதிதிராவிடர் என்று அழைத்தார்.
திருஞானசம்பந்தரையே அன்றைய காலகட்டத்தில் வேத – வர்ண – பார்ப்பனிய சக்திகள் திராவிட சிசு என்று அழைத்து இருக்கின்றன. அதைத்தொடர்ந்து திராவிட என்ற சொல்லானது வேத – வர்ண – பார்ப்பனியத்துக்கு எதிரான அரசியல் சொல்லாகவே தமிழ்நாட்டில் உள்ளது.
இந்த திராவிட என்ற அரசியல் சொல்லையே அயோத்திதாச பண்டிதர் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் பார்ப்பனியத்துக்கு எதிராக உயர்த்தி பிடித்தனர். சாதி சமயமற்றவர்கள் திராவிடர்கள் என்ற குரல் அன்றைய காலகட்டத்தில் உயர்ந்து நின்றது.
அதன் விளைவாகவே தலித் மக்கள் தங்களை ஆதி திராவிடர்கள் என்று அழைக்கத் தொடங்கினர். அதற்குப் பிறகு பார்ப்பனியத்தின் சூழ்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக தலித் மக்களில் ஒவ்வொரு பிரிவினராக ஆதிதிராவிடர் என்று தங்களை அழைத்துக் கொள்வதிலிருந்து விலக்கிக் கொண்டனர்.
எனினும் தமிழ்நாட்டில் உள்ள தலித் சாதிகளில் ஆக மிகப்பலர் தங்களுடைய சாதி சான்றிதழில் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டின் மாநில உரிமை, தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாடு, மரபு ஆகியவற்றைச் சிதைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல்.
ஏற்கெனவே ஆதிதிராவிடர் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைக்கப்பட்டு ஆதிதிராவிட பள்ளிகள் உருவாக்கப்பட்ட நோக்கமே சிதைத்தது.
விஜய் அரசு பொறுப்பு ஏற்றவுடன் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என்று மாற்றியது. இப்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பு இன்றி முதல்வர் விஜய் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பார்ப்பனிய சதிக்கு உடன்படுவதே ஆகும்.
இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் மீண்டும் அமைச்சகத்தின் பெயரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் தலித் சமூகத்தினர் 25 சதவீதம் இருந்த போதும் கூட அவர்களைக் கூறு போட்டு துண்டு துண்டாகப் பிரித்து தனது நோக்கத்துக்கு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தியது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அதைப்போலவே தமிழ்நாட்டிலும் பாசிச கும்பல் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராகவும் அதன் நடவடிக்கைக்கு ஆதரவாகச் செயல்படும் விஜய் அரசைக் கண்டித்தும் போராட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களை மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





