09.07.2026

பல்கலை. தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதியைச் சேர்க்க ஒப்புதல்!

‎பாசிச மோடி அரசுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகங்களை
‎தாரைவார்க்கும் விஜய் அரசு!

கண்டன அறிக்கை

நேற்றைய நாளில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன், துணை வேந்தர் தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதிகளைச் சேர்க்க உள்ளதாகவும் அக்குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை மூன்றில் இருந்து ஐந்தாக உயர்த்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

‎நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கல்வியைக் காவிமயமாக்கும் வேலைகளில் பாசிச மோடி அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக ஆளுநர்கள் மூலம் தமிழ்நாட்டில் துணைவேந்தரை நியமிக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டே வந்தது மோடி அரசு.

‎இதற்கு எதிராக கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து பலகட்டங்களாக சட்டப்போராட்டங்களை நடத்தியதன் விளைவாக தமிழ்நாடு முதலமைச்சரே பல்கலைக் கழகங்களில் வேந்தராக இருக்கலாம் என்ற புகழ்பெற்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

‎என்றாலும் கூட, அத்தீர்ப்பை முடக்குவதற்கு பல்வேறு வகைகளில் சதி செய்து வழக்குகள் தொடுத்தும் நேரடியாக ஆளுநர் மூலமும் பாசிச மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ் கும்பலும் வேலை செய்கின்றன. விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பாசிச மோடி அரசின் அனைத்து பாசிச நடவடிக்கைகளுக்கும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அடிபணிந்து செல்கிறது.

‎நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் விசுவநாதனின் தகவல்கள் மூலம் தமிழ்நாட்டுக் கல்வியை மொத்தமாக காவிமயமாக்க த.வெ.க அரசு முடிவெடுத்துள்ளதாகவே அறியமுடிகிறது.

‎தமிழ்நாட்டு நிதியில் செயல்படும் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என அனைவரையும் தேர்வு செய்யும் குழுவில் யூ.ஜி.சி. உறுப்பினர்களை இணைப்பது என்பது விஜய் அரசு தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றே மக்கள் அதிகாரக் கழகம் முதல்வர் விஜயை குற்றம் சாட்டுகிறது.

‎இந்த துரோகச் செயலுக்கு முதல்வர் விஜய் மட்டுமே பொறுப்பு ஆவார். ஆகவே யூ.ஜி.சி. உறுப்பினர்களைத் தேடுதல் குழுவில் இணைப்பது என்ற முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு த.வெ.க அரசு நடந்து கொள்ளவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர் – ஆசிரியர் சங்கங்களும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டங்களுக்குத் தயாராக வேண்டும் என்றும் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க